இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“தாவீது தொடர்ந்து வளர்ச்சி பெற்றார். படைகளின் கடவுளாகிய ஆண்டவர் அவரோடு இருந்தார்.” என வாசித்தோம்.
ஆண்டவர் நம்மோடு இருக்கும் போது நாம் வாழ்வில் தொடர்ந்து வளர்ச்சியுறுவோம் என்பதை நமது இளைஞர் சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப் பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
தூய ஆவியானவரின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவருக்கு நம் அனுதின வாழ்வில் முக்கிய இடம் அளித்திட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
இந்த வாரம் முழுவதும் நமது எண்ணத்திலும், பேச்சிலும், செயலிலும் தூய ஆவியானவர் செயல்பட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை குறைந்து வருவதற்கு நம் இறைவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
தங்கள் குடும்பத்தினரால் மறக்கப்பட்டு பல ஆண்டுகளாக, வேண்டுதல்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உத்தரிய ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களும் இறைவனின் மோட்ச பாக்கியத்தை விரைவில் அடைய வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.