பெண்களுக்கு எதிரான வன்முறை, சமுதாயக் காயம்

நவம்பர் 25ம் தேதி, வருகிற வியாழனன்று, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் களையப்படுவதற்காக கடைபிடிக்கப்படும் உலக நாளையொட்டி, OAS எனும் அமெரிக்க கண்டத்தின் நாடுகளின் அமைப்பின் சிறப்புக்கூட்டத்தில் உரையாற்றிய, அவ்வமைப்பிற்கான திருப்பீடப் பிரதிநிதி, பேரருட்திரு Juan Antonio Cruz Serrano அவர்கள், பெண்களுக்கு எதிரான வன்முறை, சமுதாயத்திற்கு இழைத்துள்ள காயங்கள் குறித்து சிந்திக்க இந்நாள் அழைப்புவிடுக்கிறது என தெரிவித்தார்.

பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகள் குறித்து நாம் அக்கறையற்றிருக்க முடியாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய வார்த்தைகளையும் சுட்டிக்காட்டிய பேரருட்திரு Serrano அவர்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளில், அவர்கள், போகப்பொருளாக நடத்தப்பட்டு, பின்னர் தூக்கியெறியப்படும் மனப்பான்மை குறித்து, ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்.

மனிதர்கள் வியாபாரப் பொருட்களாகக் கடத்திச் செல்லப்படுவதில், 87 விழுக்காடு, பாலியல் வன்கொடுமைகளுக்காக இடம்பெறுகின்றன என்பதை சுட்டிக்காட்டிய திருப்பீடப் பிரதிநிதி, சில பகுதிகளில் கடத்தப்படுபவர்களுள் 60 விழுக்காட்டினர், இளவயது சிறுமியர் எனவும் எடுத்துரைத்தார்.

பெண்கள் இந்த சமுதாயத்திற்கு ஆற்றிவரும் பங்களிப்பையும், அவர்களின் மாண்பையும், திருப்பீடம் தன் அனைத்து நிறுவனங்கள் வழியாக மதித்து ஏற்றுவருகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய பேரருட்திரு Serrano அவர்கள், ஒவ்வொரு பெண்ணும் மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, மதிப்புடன் நடத்தப்படவேண்டும், மற்றும் அவர்களின் துயரக் குரல்கள் செவிமடுக்கப்படவேண்டும் என்பதற்கான அர்ப்பணத்தை திருப்பீடம் மீண்டும் உறுதிப்படுத்துகின்றது என குறிப்பிட்டார்.

Comments are closed.