நவம்பர் 21 : நற்செய்தி வாசகம்

அரசன் என்று நீர் சொல்கிறீர்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 33-37
அக்காலத்தில்
பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு அவரிடம், “நீ யூதரின் அரசனா?” என்று கேட்டான்.
இயேசு மறுமொழியாக, “நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப் பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?” என்று கேட்டார்.
அதற்குப் பிலாத்து, “நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும்தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?”என்று கேட்டான்.
இயேசு மறுமொழியாக, “எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல” என்றார்.
பிலாத்து அவரிடம், “அப்படியானால் நீ அரசன்தானோ?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு

Comments are closed.