கிறிஸ்து அரசர் பெருவிழா (நவம்பர் 21)

I தானியேல் 7: 13-14
II திருவெளிப்பாடு 1: 5-8
III யோவான் 18: 33-37

பாவங்களிலிருந்து விடுவித்த அரசர்!

நிகழ்வு

பன்னிரண்டாம் நூற்றாண்டில், இங்கிலாந்தை ஆட்சி செய்தவர் முதலாம் ரிச்சர்ட். இவர் 1193 ஆம் ஆண்டு, எருசலேமில் நடைபெற்ற சிலுவைப்போரில் கலந்துகொண்டுவிட்டு, ஆஸ்திரியா வழியாக இங்கிலாந்திற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்பொழுது ஆஸ்திரியாவை ஆட்சி செய்தவர் நான்காம் லியோபோல்ட் (Leopold IV) என்ற மன்னர்.

இந்த நான்காம் லியோபோல்ட், தன்னுடைய நாட்டின் வழியாக வந்த முதலாம் ரிச்சர்டைக் கைதுசெய்து சிறையிலடைத்தார். தவிர, அவரை விடுவிக்க வேண்டுமெனில் மூன்று டன் வெள்ளியை அனுப்பவேண்டும் என்று அவர் இங்கிலாந்து நாட்டு மக்களுக்கு அறிவிப்புக் கொடுத்தார். இங்கிலாந்து நாட்டுமக்கள் முதலாம் ரிச்சர்ட்மீது மிகுந்த அன்பும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்ததால், அவர்கள் மூன்று டன் வெள்ளி சேகரித்து, ஆஸ்திரிய மன்னர் நான்காம் லியோபோல்ட்டிடம் அனுப்பி வைக்க, அதன் பிறகே அவன், இங்கிலாந்து மன்னரை விடுவித்தான்.

மன்னர் நாட்டு மக்களை விடுவிப்பது போய், நாட்டு மக்களே மன்னரை விடுவித்த இந்த நிகழ்வு மிகவும் துயரமானது. ஆனால், ஆண்டவர் இயேசு நம் அனைவரையும் பாவத்திலிருந்து விடுவித்தார். அதனாலேயே அவர் அனைத்துக்கும் அரசராக இருக்கின்றார். அன்னையாம் திருஅவை இன்று, ‘அனைத்துக்கும் அரசராம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து’ என்ற பெருவிழாவைக் கொண்டாடுகின்றது. இப்பெருவிழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்திப்போம்.

என்றுமுள்ள அரசர்

உலக வரலாற்றில் எத்தனையோ அரசர்கள் தோன்றியிருக்கின்றார்கள், அவர்கள் பல நாடுகளையும் தங்களுடைய அதிகாரத்திற்குக் கீழ் கொண்டுவர என்னவெல்லாமோ செய்திருக்கின்றார்கள். அவர்கள் தோன்றிய வேகத்தில் மறைந்து போனார்கள் என்பதுதான் வேதனை கலந்த உண்மை. உலக நாடுகளையெல்லாம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்ற மாவீரன் அலெக்சாண்டர் இன்றைக்கு இருந்த இடம் தெரியவில்லை. பல நாடுகள்மீது படையெடுத்துச் சென்று வெற்றிகொண்ட மாவீரன் நெப்போலியனை நினைத்துப் பார்ப்பதற்கு இன்று ஆளில்லை. இப்படி எத்தனையோ அரசர்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்; ஆனால், ஈராயிரம் ஆண்டுகள் ஆனபின்னும் இன்றைக்கும் மக்களுடைய மனங்களில் நிறைந்திருக்கின்ற ஓர் அரசர் இருக்கின்றார். அவர்தான் அனைத்துலக அரசரான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.

இயேசுவின் ஆட்சியும் அவரது அரசும் என்றென்றும் நிலைத்திருக்கக் காரணம், அவை தொன்மை வாய்ந்தவரும், அகரமும் னகரமுமானவருமான கடவுளால் இயேசுவுக்குக் கொடுக்கப்பட்டன என்பதாலேயே ஆகும். இதைத் தானியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகமும், திருவெளிப்பாடு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகமும் மிகத் தெளிவாக விளக்குகின்றன. மேகங்கள்மீது வருகின்ற மானிட மகனாம் இயேசு, தொன்மை வாய்ந்த கடவுள் அருகில் வருகின்றார். கடவுள் அவருக்கு ஆட்சியுரிமையையும் மாட்சியையும் அரசையும் கொடுக்கின்றார். இதனால் இயேசுவின் அரசு என்றுமுள்ள அரசாகத் திகழ்கின்றது. ஆம், மனிதர்களிடமிருந்து ஆட்சியுரிமையைப் பெற்றவர்கள் நிலைத்து நிற்கமுடியாமல் போகலாம். இயேசு கடவுளிடமிருந்து ஆட்சியுரிமையைப் பெற்றதால், அவரது அரசு என்றுமுள்ள அரசு ஆகும். அதனால் அதற்கு முடிவே இல்லை.

Comments are closed.