இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
உத்தரிக்கிற ஆன்மாக்களின் வணக்கம் மாதமாகிய இந்த நவம்பர் மாதத்தில் நம்மை விட்டு பிரிந்து உத்தரிய நிலையை அடைந்து ஆண்டவரின் திருமுகத்தைக் காண இயலாமல் அவதியுரும் எண்ணற்ற ஆன்மாக்கள் விரைவில் மோட்ச பாக்கியம் அடைந்து நம் ஆண்டவர் இயேசுவின் திருமுகத்தைக் காண வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
உத்தரிய நிலையை அடைந்த அனைத்து ஆன்மாக்களும் நமது செபங்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றன என்ற உண்மையை உணர்ந்து அவர்களுக்காக நாம் திருப்பலிகளை அடிக்கடி ஒப்புக் கொடுக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
நம் குடும்பத்தில், உறவில், தெரிந்த குடும்பங்களில் மரித்த ஆன்மாக்களுக்காக அடிக்கடி செபமாலை ஒப்புக் கொடுக்கும் சிறந்த வழக்கத்தினை கடைபிடிக்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
நாம் ஆன்மாக்களை நினைவுகூர்ந்து வீதியோரம் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் ஏழை மக்களுக்கு நல்ல உணவினை அளித்து அவர்களது பசியினைப் போக்குவோம். அடிக்கடி செய்யப்படும் இந்த நற்செயல்கள் ஆன்மாக்களை குளிர்விக்கும் என்ற உண்மையை உணர்ந்து அதன்படி செயல்பட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
வெள்ளிக் கிழமையான இன்று நமது செபம், தபம் அனைத்தையும் நமது திருஇருதயாண்டவரின் மாசற்ற திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்க இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.