நவம்பர் 6 : நற்செய்தி வாசகம்

யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்?
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 9-15
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள். மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார். நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்? பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்?
எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.”
பண ஆசைமிக்க பரிசேயர் இவற்றையெல்லாம் கேட்டு இயேசுவை ஏளனம் செய்தனர். அவர் அவர்களிடம் கூறியது: “நீங்கள் உங்களை மக்கள்முன் நேர்மையாளராகக் காட்டிக்கொள்கிறீர்கள். கடவுள் உங்கள் உள்ளங்களை அறிவார். நீங்கள் உங்களை மக்கள்முன் உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்வது கடவுள் பார்வையில் அருவருப்பாகும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————-
லூக்கா 16: 9-15
பணத்தாசை மிக்க பரிசேயர்!
நிகழ்வு
பெருநகர் ஒன்றில் தொழிலதிபர் ஒருவர் இருந்தார். அவர் தான் ஈட்டிய பணத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதும் பங்குச்சந்தைக் குறியீடு உயர்ந்திருக்கின்றதா என்று ஒவ்வொருநாளும் செய்தித்தாளில் பார்ப்பதையும் தன்னுடைய வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒருநாள் அவர் செய்தித்தாளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அவர்க்குள் ஓர் எண்ணம் தோன்றியது. ‘ஓராண்டு கழித்து வெளிவருகின்ற செய்தித்தாள் இப்போது எனக்குக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்…!’என்பதுதான் அவர்க்குள் தோன்றிய எண்ணமாகும். இப்படி அவர் எண்ணிக் கொண்டிருக்கையில் ‘ஓராண்டு கழித்து வெளிவருகின்ற செய்தித்தாள் இப்பொழுது எனக்கு வேண்டும்’ என்று உரத்தக் கத்தினார். அவர் இவ்வாறு கத்தியதைத் தொடந்து அங்கு ஒரு பூதம் தோன்றி, அவருடைய கையில் ஒரு செய்தித்தாளைக் கொடுத்துவிட்டுச் சென்றது.
அவர் அந்தச் செய்தித்தாளைப் பார்த்தபோது ஓராண்டு கழித்து வெளிவரவேண்டிய செய்தித்தாளாக இருந்தது. அவர்க்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை. உடனே அவர் அந்தச் செய்தித்தாளில் இருந்த பங்குச்சந்தை குறித்த பக்கத்திற்குத் தாவினார். அதில் அவர் தான் முதலீடு செய்திருந்த நிறுவனத்தின் பங்குச்சந்தை நிலவரம் உயர்ந்திருக்கின்றதா என்று பார்த்தார். அதைப் பார்த்த மறுநொடி அப்படியே ஆச்சர்யத்தில் உறைந்துபோனார். ஆம், அவர் முதலீடு செய்திருந்த நிறுவனத்தின் மதிப்பு பலமடங்கு உயர்ந்திருந்தது.
உடனே அவர் தன்னுடைய நான்கு சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு, தன்னுடைய பணத்தை முதலீடு செய்திருந்த குறிப்பிட்ட அந்த நிறுவனத்திற்கு விரைந்து சென்றார். போகிற வழியில் தற்செயலாக அந்தச் செய்தித்தாளின் கடைசி பக்கத்தைப் பார்த்தார். அங்கு அவருடைய நிழல்படம் போடப்பட்டு, இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது. அதைப் பார்த்துவிட்டு அவர் அதிர்ந்துபோனார். ‘இத்தனை ஆண்டுகளும் எதற்காக நேரத்தையெல்லாம் செலவழித்தோமோ, அது கிடைக்கின்ற சமயத்தில் நம்முடைய உயிர் நம்மிடம் இல்லையே!’ என்று தன்னையே நொந்துகொண்டார்.
இது ஒரு சாதாரண கதையாக இருந்தாலும், இது இன்றைக்கு இருக்கின்ற பலருடைய வாழ்வினை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கின்றது. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு பணத்தாசை பிடித்த பரிசேயர்களைக் கடிந்துகொள்கின்றார். இயேசு ஏன் அவர்களைக் கடிந்துகொள்ளவேண்டும்? இன்றைய நற்செய்தியின் வழியாக இயேசு நமக்கு சொல்லும் செய்தி என்ன? என்பவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மக்கள் முன் உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொண்ட பரிசேயர்
நற்செய்தியில் இயேசு, எவரும் காசு, கடவுள் என்ற இரு தலைவர்கட்குப் பணிவிடை செய்யமுடியாது… அப்படிப் பணிவிடை செய்ய நேர்ந்தால், அவர் யாருக்கும் உண்மையாக இருக்கமுடியாது என்று சொல்கின்றபோது, பணத்தாசை பிடித்த பரிசேயர் அவரை ஏளனம் செய்கின்றனர். அப்பொழுதுதான் இயேசு அவர்களின் போலித்தனத்தை வெட்ட வெளிச்சமாக்குகின்றார்.
பரிசேயர்கள் மக்கள் பார்வையில் நேர்மையாளர்கள் போன்றும் உயர்ந்தவர்கள் போன்றும் காட்டிக்கொண்டார்கள். உண்மையில் அவர்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளாக இருந்தார்கள் (மத் 23: 27). வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், பரிசேயர்கள் பணத்தின்மீது எந்தவொரு பற்றும் இல்லாதவர்கள் போன்று காட்டிக்கொண்டார்கள். உண்மையில் அவர்கள் கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொண்டார்கள் (மாற் 12:40) இன்னபிற குற்றங்களையும் செய்தார்கள். இப்படிப் பரிசேயர்கள் வேடம் போட்டு வாழ்ந்தால், அவர்களுடைய வாழ்க்கை கடவுளுடைய பார்வையில் அருவருக்கத் தக்கது என்று கூறுகின்றார் இயேசு.
கடவுள் மனிதர் பார்ப்பது போன்று முகத்தைப் பார்ப்பதில்லை; அவர் அகத்தைப் பார்ப்பவர் (1 சாமு 16:7) அப்படிப்பட்டவரிடம் பரிசேயர்கள் ஏமாற்ற முடியாது என்பதால்தான், இயேசு அவர்களுடைய செயல்பாடுகள் மிகவும் அருவருக்கத்தக்கவை என்று கூறுகின்றார்.
பணத்தாசையே/ பொருள் ஆசையே எல்லாத் தீமைகட்கும் ஆணிவேர்
ஆண்டவர் இயேசு பரிசேயர்களின் பணத்தாசையைக் கடிந்துகொள்வதற்குக் காரணம், அந்த ஆசை அவர்களை அழிவுக்கு இட்டுச் சென்றுவிடும் என்பதால்தான். இது குறித்து இயேசு பல இடங்களில் அழுத்தம் திருத்தமாகப் பேசியுள்ளார் (லூக் 12: 15-21). புனித பவுலோ இன்னும் ஆழமாக, ‘பொருள் ஆசையே எல்லாத் தீமைகட்கும் ஆணிவேர்’ (1 திமொ 6: 10) என்று கூறுகின்றார். அப்படியானால் பணத்திற்கும் அது தொடர்பானவற்றிற்கும் பணிவிடை செய்கின்றவர் எல்லா தீமைகட்கும் அடிமையாகி, விரைவில் அழிந்துபோவார் என்பது உண்மையாகின்றது. ஆனால், ஆண்டவருக்கு பணிவிடை செய்பவரோ வாழ்வடைவர். யோசுவா அப்படித்தான், “நானும் என் வீட்டாரும் ஆண்டவர்க்கே ஊழியம் செய்வோம்” (இச 24: 15) என்று சொல்லி, ஆண்டவர்க்கு ஊழியம் செய்து, வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டில் நுழையும் பேறுபெற்றார். ஆண்டவர்க்கு ஊழியம் புரியாமல் பாகாலுக்கு ஊழியம் புரிந்த ஏனைய இஸ்ரயேல் மக்களோ அந்த வாப்பினை இழந்தார்கள்.
ஆகையால், நாம் அழிவுக்கு இட்டுச் செல்லும் பணத்திற்கு ஊழியம் செய்யாமல், அழியா வாழ்வு தரும் ஆண்டவர்க்கு ஊழியம் செய்ய முற்படுவோம்.
சிந்தனை
‘தலைமைக் குருவாம் இயேசு மனிதரால் அல்ல, ஆண்டவராலே அமைக்கப்பட்ட உண்மையான கூடாரமாகிய தூயத்தில் ஊழியம் செய்கிறார்’ (எபி 8:2) என்பார் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர். ஆகையால், நாம் நம் இயேசுவைப் போன்று ஆண்டவர்க்கு மட்டும் ஊழியம் செய்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.