† இன்றைய புனிதர் † (அக்டோபர் 6)

✠ கொலோன் நகர புனிதர் ப்ரூனோ ✠
(St. Bruno of Cologne)
“கர்த்தூசியன்” சபை நிறுவனர், துறவி:
(Founder of the Carthusian Order, Hermit)
பிறப்பு: கி.பி. 1030
கொலோன் (Cologne)
இறப்பு: அக்டோபர் 6, 1101
செர்ரா சான் புருனோ
(Serra San Bruno)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
முக்திபேறு பட்டம்: கி.பி. 1514
திருத்தந்தை பத்தாம் லியோ
(Pope Leo X)
புனிதர் பட்டம்: ஃபெப்ரவரி 17, 1623
திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி
(Pope Gregory XV)
நினைவுத் திருநாள்: அக்டோபர் 6
பாதுகாவல்:
ஜெர்மனி (Germany), கலாப்ரியா (Calabria), கர்தூசியன்ஸ் (Carthusians), துறவற சகோதரர்கள் (Monastic Fraternities), வர்த்தக குறிகள் (Trade marks), ருதெனியா (Ruthenia), ஆட்கொள்ளப்பட்ட மக்கள் (Possessed people).
கொலோன் நகரில் பிறந்த புனிதர் ப்ரூனோ, “கர்த்தூசியன்” (Carthusian) சபை நிறுவனரும், “ரெய்ம்ஸ்” (Reims) நகரின் பிரசித்தி பெற்ற ஆசிரியரும் ஆவார். இவர், திருத்தந்தை “இரண்டாம் அர்பன்” (Pope Urban II) அவர்களின் முன்னாள் ஆசிரியரும் நெருங்கிய ஆலோசகரும் ஆவார்.
தற்போதைய ஃபிரான்ஸ் நாட்டின் ரெய்ம்ஸ் நகரில் குருத்துவக்கல்வி பயின்ற இவர், தமது ஊரான கொலோன் திரும்பி, கி.பி. சுமார் 1055ம் ஆண்டு, குருத்துவ அருட்பொழிவு பெற்றார். கி.பி. 1056ம் ஆண்டு, அவரை திரும்ப ரெய்ம்ஸ் நகருக்கு அழைத்த ஆயர் “கேர்வைஸ்” (Bishop Gervais) அவருக்கு ஆயர் பள்ளிகளின் தலைமைப் பொறுப்பை அளித்தார்.
கி.பி. 1057ம் ஆண்டு முதல், 1075ம் ஆண்டு வரை, பதினெட்டு வருடங்கள் ரெய்ம்ஸ் பள்ளியின் கௌரவத்தை பேணிக் காத்தார். சுமார் இருபது வருடங்கள் தத்துவம் மற்றும் இறையியல் கற்பிப்பதில் சிறப்பு பெற்றார். திருத்தந்தை “இரண்டாம் அர்பன்” (Pope Urban II) உள்ளிட்ட ஆயர்கள் பலர் இவரிடம் கல்வி கற்றவர்களேயாவர்.
ரெய்ம்ஸ் மறைமாவட்டத்தின் அதிபர்:
கி.பி. 1075ம் ஆண்டில், இவர் “ரெய்ம்ஸ் ரோமன் கத்தோலிக்க உயர்மறை மாவட்டத்தின்” (Roman Catholic Archdiocese of Reims) அதிபராக நியமிக்கப்பட்டார். இதனால் இவர் மறைமாவட்டத்தின் அன்றாட நிர்வாகத்தில் ஈடுபாடு கொண்டார்.
ரெய்ம்ஸ் மறைமாவட்டத்தின் ஆயராக பதவியேற்க வேண்டிய காலத்தின் விளிம்பில், அதற்குப்பதிலாக, மதச் சார்பற்ற சம்பந்தங்களைத் துறந்து, “ரவுல்” (Raoul) மற்றும் “ஃபுல்சியஸ்” (Fulcius) ஆகிய இரண்டு நண்பர்களுடனும், ரெய்ம்ஸின் நியதிகளோடு சேர்ந்து, அவர் விலகிக் கொண்டார். ஆறு தோழர்களோடு காட்டுக்கு போய், கர்த்தூசியன் என்னும் சபையைத் தொடங்கினார். இவர்கள் தனிமை, எளிமை, ஒருத்தல், மௌனம், இவற்றை அனுசரிக்க வேண்டும். இவர்கள் தனித்தனி சிற்றறைகளில் வாழ்ந்து, கடவுளை வழிபடுவதற்கு மாத்திரமே ஒன்று கூடுவார்கள். இவர் எப்பொழுதும் விழிப்பாய் இருந்து தவவாழ்வு நடத்தி கடவுளுடன் என்றும் ஒன்றித்திருந்து நடுவரின் வருகைக்காக காத்திருந்தார்.

Comments are closed.