பதிலுரைப்பாடல் மறையுரை (செப்டம்பர் 21)

பொதுக்காலம் இருபத்து ஐந்தாம் வாரம்
செவ்வாய்க்கிழமை
திருப்பாடல் 122: 1-2, 3-4a, 4b-5 (1)
“ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்”
எத்தனை பேர் கோயிலுக்கு உண்மையாய்ப் போகிறோம்?
பதினேழாம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டை ஆண்டு வந்தவர் பதினான்காம் லூயிஸ். இவர், ஞாயிறு வழிபாட்டிற்கு வழக்கமாக ஒரு கோயிலுக்குப் போவார். அந்தக் கோயிலுக்குப் பொறுப்பாக இருந்தவர் அருள்பணியாளர் பிரான்கோய்ஸ் பெனலோன் (Francois Fenelon)
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, மன்னர் பதினான்காம் லூயிஸ் தான் வழக்கமாகச் செல்லும் கோயிலுக்குச் சென்றார். கோயிலில் யாருமே இல்லை. அதைக் கண்டு பேரதிர்ச்சி அடைந்த மன்னர் அங்கிருந்த அருள்பணியாளர் பிரான்கோய்ஸ் பெனலோனிடம், “இன்று ஏன் மக்கள் கோயிலுக்கு வரவில்லை?” என்றார். அதற்கு அருள்பணியாளர் பிரான்கோய்ஸ் பெனலோன் அவரிடம், “இக்கோயிலுக்கு யாரெல்லாம் கடவுளை வழிபடுவதற்கு வருகின்றார்கள், யாரெல்லாம் உங்களைத் திரும்பிப்படுத்துவதற்காக வருகின்றார்கள் என்று தெரிந்துகொள்ள விரும்பினேன். அதனால்தான் நான், இன்று நீங்கள் வழிபாட்டிற்கு வருவதில்லை என்று முன்கூட்டியே சொல்லி வைத்தேன். இப்பொழுது தெரிகின்றது, இந்தக் கோயிலுக்கு வந்தவர்கள் யாவரும் உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக வந்திருக்கின்றார்கள் என்று” என வருத்தத்தோடு தெரிவித்தார்.
வேதனையான நிகழ்வாக இருந்தாலும், ஒருவேளை ஞாயிறுத் திருப்பலியில் கலந்துகொள்வது கட்டாயம் இல்லை என்றோர் அறிவிப்பு வந்தால், எத்தனை பேர் கோயிலுக்கு வருவார்கள்? நினைத்துப் பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கின்றது. இத்தகைய சூழலில், இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலின் ஆசிரியர் தாவீது, “ஆண்டவரது இல்லத்திற்கு போவோம் என்ற அழைப்பை நான் கேட்டபோது, அகமகிழ்ந்தேன்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
சீயோன்மலைத் திருப்பாடல்களில் திருப்பாடல்கள் 122, 124, 131 ஆகிய மூன்றையும் இயற்றியது தாவீது மன்னர். இதில் முதலில் வருகின்ற – இன்று நாம் பதிலுரைப் பாடலாகப் பாடக்கேட்ட – திருப்பாடல் 122 எருசலேமின் பெருமையைப் பறைசாற்றுகின்றது.
ஆண்டவரின் இல்லம் பற்றியும், அங்கே நடைபெறும் பாஸ்காப் பெருவிழா, கூடாரப் பெருவிழா, பெந்தக்கோஸ்துப் பெருவிழா ஆகிய முப்பெரும் விழாக்களுக்கு ஒவ்வொரு யூதரும் போவது பற்றியும் விடுதலைப் பயண நூலில் மோசே ஏற்கெனவே சொல்லியிருப்பார் (விப 23: 14-19). பின்னாளில் சாலமோனால் எருசலேமில் முதல் கோயில் கட்டி எழுப்பப்பட்டாலும், தாவீதுதான் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்திருப்பார் (1 குறி 21- 22) இந்நிலையில், “ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம் என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்” என்று அவர் சொல்வது, ஆண்டவரது இல்லத்தின்மீது அவர் கொண்டிருந்த பற்றினை நமக்கு மிகத் தெளிவாக உணர்த்துகின்றது. ஆதலால், நாம் ஆண்டவரின் இல்லத்திற்குக் கட்டாயத்தின் பெயரில் அல்ல, மகிழ்ச்சியோடு செல்வோம்.
சிந்தனைக்கு:
 உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர் (திபா 84: 4).
 உம் இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது (திபா 69: 9).
 ஆண்டவரில் இல்லத்திற்கு நாம் என்ன மனநிலையுடன் செல்கின்றோம்? கட்டாயத்தின் பெயரிலா, விருப்பத்துடனா? சிந்திப்போம்.
இறைவாக்கு:
‘என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும்’ (திபா 93: 5) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், தூய்மை நிறைந்த ஆண்டவரின் இல்லத்திற்கு நாம் மாசற்றவர்களாகவும் மகிழ்ச்சியுடனும் சென்று, இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.