ஒப்புரவு அருளடையாளம், மகிழ்வின் அருளடையாளமாக

ஒப்புரவு அருளடையாளம், மகிழ்வின் ஓர் அருளடையாளம் என்றும், அது விண்ணகத்திலும் மண்ணகத்திலும் கொண்டாடப்படும் ஒரு விழா என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுலோவாக்கியா நாட்டின் Košice நகரில் இளையோரைச் சந்தித்தபோது கூறினார்.

கடவுளின் இரக்கத்தைப் பெறும் வழியில் எதிர்வரும் தடைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து, தன்னையொத்த வயதுடைய இளையோருக்கு விளக்குமாறு, Petra என்ற இளம்பெண், அந்த இளையோர் சந்திப்பில் திருத்தந்தையிடம் கேட்டார்.

அக்கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, ஒப்புரவு அருளடையாளத்தைப் புதியதொரு வழியில் வாழ்வதற்கு அழைப்பு விடுத்தார் என்றும், அந்த அழைப்பு, அந்நிகழ்வில் கலந்துகொண்ட இளையோருக்கு மட்டுமல்லாமல், அனைவருக்கும் உரியதாக உள்ளது என்றும், திருப்பீட தகவல் தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர், அந்திரேயா தொர்னியெல்லி அவர்கள் கூறியுள்ளார்.

ஒப்புரவு அருளடையாளம் பற்றிய திருத்தந்தையின் எண்ணத்தை, வத்திக்கான் செய்திகளில் பதிவுசெய்துள்ள தொர்னியெல்லி அவர்கள், இக்காலத்தில் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும், இந்த அருளடையாளம் பற்றி திருத்தந்தை, புதியதொரு கோணத்தில் சிந்தித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.

ஒப்புரவு அருளடையாளத்தில் மையப்படுத்தப்படுவை பாவங்களா? இந்த அருளடையாளத்தைப் பெறச் செல்கையில், கடவுள், யாரை, எவற்றை நினைக்கச் சொல்கிறார்?, தன்னைப் பற்றியா, பாவங்களைப் பற்றியா, அல்லது உங்களைப் பற்றியா… போன்ற கேள்விகளை, இளையோரிடம் கேட்ட திருத்தந்தை, அந்த அருளடையாளத்தில் கடவுளோடு இடம்பெறும் சந்திப்பே மையமாக உள்ளது என்றும், அச்சமயத்தில், கடவுள் நம்மை அணைத்துக்கொள்கிறார், மன்னிக்கிறார், மற்றும், நம்மைத் தூக்கி நிறுத்துகிறார் என்றும் கூறினார்.

ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறச் செல்லும்போது, இறைத்தந்தையின் பிள்ளைகளாக, அவரது அரவணைப்பைப் பெறச் செல்கிறோம் என்றும், கடவுள் எப்போதும் மன்னிப்பவர், நம் பிணக்குகளைத் தீர்த்துவைக்கும் நீதிபதியாக அவர் இருப்பதில்லை, மாறாக, அவர் அன்புகூரும் மற்றும், குணப்படுத்தும் ஒருவராக இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றும், திருத்தந்தை இளையோரிடம் கூறினார்.

ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றும் அருள்பணியாளர்களும், தாங்கள் கடவுளின் இடத்தில் இருப்பதாகவும், அதனைப் பெறவருகின்றவர்கள், இறைத்தந்தையின் அன்பையும், அரவணைப்பையும் உணர்வதற்கு உதவுகின்றவர்களாகவும் இருக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்புவிடுத்தார்.

Comments are closed.