வறியோர், புறக்கணிப்பட்டோர் பிரான்சிஸ்கன் சபையினரின் ஆசிரியர்கள்

Friars Minor எனப்படும் பிரான்சிஸ்கன் துறவு சபையின் பொதுப்பேரவையில் பங்குபெறும் பிரதிநிதிகளுக்கு, தன் நல்வாழ்த்துக்களையும், இறைவேண்டல்களையும் தெரிவித்து, ஜூலை 17, இச்சனிக்கிழமையன்று, செய்தியொன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கோவிட்-19 பெருந்தொற்றுச் சூழலில் பொதுப்பேரவையை நடத்தும் நீங்கள், நிச்சயமாக இறைவனின் அருளை அனுபவிப்பீர்கள் என்று, தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, “உங்கள் கண்ணோட்டத்தைப் புதுப்பியுங்கள்”, மற்றும், “உங்களது வருங்காலத்தைத் தழுவிக்கொள்ளுங்கள்” என்ற தலைப்பில், அப்பொதுப்பேரவை நடைபெறுவது பற்றிய தன் எண்ணங்களைப் பதிவுசெய்துள்ளார்.

ஒருவரின் கண்ணோட்டத்தைப் புதுப்பித்தல் என்பதே, அசிசி நகர் புனித பிரான்சிஸ், இளைஞராக இருந்தபோது நடந்தது எனவும், கண்ணோட்டத்தைப் புதுப்பித்தல் என்பது,  ஏழைகள், மற்றும், புறக்கணிக்கப்பட்டோரை, கடவுளின் பிரசன்னத்தின் ஓர் அடையாளமாக, ஏறத்தாழ ஓர் அருளடையாளமாகத் தியானிப்பதிலிருந்து தொடங்கவேண்டும் எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

இந்த புதுப்பிக்கப்பட்ட கண்ணோட்டத்திலிருந்து, அதாவது, நம் அயலவரையும், அவர்களது காயங்களையும் சந்திக்கும் அனுபவத்திலிருந்து, வருங்காலத்தில், அவர்களை உடன்பிறந்தோராக, மற்றும், பிரான்சிஸ்களாகப் பார்ப்பதற்கு, புதுப்பிக்கப்பட்ட சக்தியைப் பெறுகிறோம், இவ்வாறு, உங்கள் சபையின் அழகான பெயருக்கேற்ப வாழ்வீர்கள் என்றும், பிரான்சிஸ்கன் சபையினரிடம் எடுத்துரைத்த திருத்தந்தை, ஏழைகளும் புறக்கணிக்கப்பட்டோருமே உங்களது ஆசிரியர்கள் என்றும் கூறியுள்ளார்.

உடலிலும், ஆன்மாவிலும், துன்புறும் மனிதர்களை, பெரிய சொற்களால் அல்ல, மாறாக, சகோதர அன்போடும் தாழ்ச்சியோடும் சந்தித்து, அவர்களை உங்களின் உடன்பிறப்புக்களாக உணரச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றுரைத்துள்ள திருத்தந்தை, காயப்பட்டுள்ள படைப்பை நோக்கிச் செல்லுங்கள் என்றும் கூறியுள்ளார்.

பிரான்சிஸ்கன் துறவு சபையின் பொதுப்பேரவை
பிரான்சிஸ்கன் துறவு சபையின் பொதுப்பேரவை

சிலரின் வளமையான வாழ்வுக்காக, பூமிக்கோளத்தின் வளங்கள் கட்டுப்பாடின்றி பயன்படுத்தப்படுவதால், நம் பொதுவான இல்லமாகிய பூமி துயருறுகின்றது, எனவே அதனிடம் செல்லுங்கள் எனவும், ஒரு பொதுவான திட்டத்தைக் கண்டுபிடிக்கத் திணறுகின்ற ஓர் உலகில், உடன்பிறந்த உணர்வு மற்றும், சமூக நட்பு ஆகிய கொடைகளை வழங்குகின்ற மனிதர்களாக, சுவர்களை அல்ல, பாலங்களைக் கட்டியெழுப்பும் வழிகளைத் தேடும் உரையாடல் மனிதர்களாகச் செல்லுங்கள் எனவும், திருத்தந்தை அழைப்புவிடுத்துள்ளார்.

பகைமை, பிரிவினை, வன்முறை ஆகியவற்றை விதைக்கும் மனிதர்களை மனமாற்றத்திற்கு அழைத்து, உண்மை, நீதி, மன்னிப்பு ஆகியவற்றினின்று பிறக்கும் நம்பிக்கையை வழங்கி, அமைதி மற்றும் ஒப்புரவின் மனிதர்களாகச் செல்லுங்கள், இந்தச் சந்திப்புகளிலிருந்து, நீங்கள் நற்செய்தியை முழுமையாய் வாழ்வீர்கள், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் புனித நற்செய்தியைக் கடைப்பிடியுங்கள், இதுவே பிரான்சிஸ்கன் சபையினரின் வாழ்வும், கொள்கையும் எனவும் திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் மனங்களையும் இதயங்களையும் தூய ஆவியாருக்குத் திறந்து வைப்பதற்குத் தடையாய் இருக்கும் அச்சம் மற்றும், கவலைக்கு இடம்கொடுக்காதீர்கள், நற்செய்தியின் நம்பகமான மற்றும், மகிழ்ச்சியான சான்றுகளாக வாழுங்கள், உலகத்தின் பாதைகளில் நம்பிக்கை மற்றும், எதிர்நோக்கோடு நற்செய்தியின் விதைகளைத் தூவுங்கள் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காகச் செபிக்குமாறும், பிரான்சிஸ்கன் சபையினரிடம் கேட்டுக்கொண்டார்.

Comments are closed.