ஜூன் 6 : நற்செய்தி வாசகம்

இது எனது உடல்; இது எனது உடன்படிக்கையின் இரத்தம்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 12-16, 22-26
புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், “நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள்.
அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்; “நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், “‘நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?’ என்று போதகர் கேட்கச் சொன்னார்” எனக் கூறுங்கள். அவர் மேல்மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள்.” சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, “இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்” என்றார். பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர். அப்பொழுது அவர் அவர்களிடம், “இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
அவர்கள் புகழ்ப்பாடல் பாடிவிட்டு ஒலிவமலைக்குச் சென்றார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————–++++
“கிறிஸ்துவ வாழ்வின் ஊற்றும் உச்சமுமான நற்கருணை”
இயேசுவின் தூய்மைமிகு திரு உடல், திரு இரத்தப் பெருவிழா
I விடுதலைப் பயணம் 24: 3-8
II எபிரேயர் 9: 11-15
III மாற்கு 14: 12-16, 22-26
“கிறிஸ்துவ வாழ்வின் ஊற்றும் உச்சமுமான நற்கருணை”
நிகழ்வு
இங்கிலாந்தைச் சார்ந்த பிரபல புகைப்படக் கலைஞர் மால்கம் மக்கரிட்ஜ். நாத்திகரான இவருக்கு ஒருநாள் ஒரு வினோதமான ஆசை வந்தது. கொல்கொத்தா நகர் அன்னைத் தெரசாவின் ஒருநாள் வாழ்வைப் படம்பிடித்து, அதைக் குரும்படமாக வெளியிடுவதே அந்த ஆசை. இது குறித்து இவர் அன்னை தெரசாவிடம் கேட்டதற்கு, அவர் முழுமனச் சம்மதம் தெரிவித்தார்.
இதற்குப் பின் ஒருநாள் காலையில் மால்கம் மக்கரிட்ஜ் புகைப்படக் கருவிகளுடன் மதர் தெரசா இறைவழிபாடு செய்யும் கோயிலுக்கு முன்பு நின்றிருந்தார். மதர் தெரசா கோயிலுக்குள் நுழைந்ததும், பளீர் வெளிச்சத்துடன் அவரைப் புகைப்படம் எடுத்தார். இத்தகைய வெளிச்சம் தான் வழிபாடு செய்தவதற்கு இடையூறாக இருப்பதை உணர்ந்த மதர் தெரசா இவரிடம், “வழிபாடு செய்வதற்கு பளீர் வெளிச்சம் தடையாக இருக்கின்றது. அதைக் குறைத்துக் கொள்ளலாமா?” என்று சொல்ல, இவர் “வெளிச்சத்தைக் குறைத்துக் கொண்டால், உங்களுடைய முகம் தெளிவாகத் தெரியாதே!” என்றார். உடனே தெரசாம்மா, “என்னுடைய முகம் தெளிவாகத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. பளீர் வெளிச்சம் நான் வழிபாடு செய்வதற்குத் தொந்தரவு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.
பின்னர் இவர் தெரசாம்மா காலைவழிபாடு செய்வதையும் திருப்பலியில் கலந்து கொள்வதையும், தியானம் செய்வதையும் குறைந்த வெளிச்சத்தில் தன் புகைப்படக் கருவியில் பதிவு செய்தார். தெரசாம்மா காலை வழிபாட்டை முடித்துக்கொண்டு, மற்ற பணிகளை மேற்கொள்ளும்பொழுது இவர் பளீர் வெளிச்சத்தில் எல்லாவற்றையும் படம்பிடித்து முடித்தார். மாலை வேளையில் தான் பிடித்த புகைப்படங்கள் எப்படி வந்திருக்கின்றன என்று இவர் பார்த்தபொழுது இவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. ஆம், குறைந்த வெளிச்சத்தில் இவர் மதர் தெரசாவைப் புகைப்படம் எடுத்தவற்றிலெல்லாம் அவரது முகம் மிகவும் பிரகாசமாக இருந்தது. இது தொடர்பாக இவர் அன்னை தெரசாவிடம் கேட்டபொழுது அவர், “நான் நாள்தோறும் மாத்திரைகள் சாப்பிடுகிறேன், அதனால்தான் என் முகம் குறைந்த வெளிச்சத்திலும் பிரகாசமாக இருக்கினறது?” என்றார். “என்ன நீங்கள் மாத்திரைகளை சாப்பிடுகிறீர்களா? அந்த மாத்திரைகள் எங்கு கிடைக்கும்?” என்று இவர் அன்னை தெரசாவிடம் கேட்டபொழுது அன்னை தெரசாள், நற்கருணைப் பேழையைச் சுட்டிக்காட்டினார். அப்பொழுதுதான் இவருக்கு உண்மை புரிந்தது. இதன்பிறகு இவர் கத்தோலிக்கராக மாறினார்.
ஆம், இறைப்பணியையும் மக்கள் பணியையும் ஒரு சேரச் செய்துவந்த கொல்கொத்தா நகர்ப் புனித தெரசா அந்தப் பணிகளுக்கான ஆற்றலை கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றும் உச்சமுமான நற்கருனையிலிருந்தே பெற்றார். இன்று நாம் இயேசுவின் தூய்மைமிகு திரு உடல், திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இப்பெருவிழாவும் இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்கு என்ன செய்தியைக் கூறுகின்றன என்று சிந்திப்போம்.
நற்கருணை: புதிய உடன்படிக்கையின் அடையாளம்
“நற்கருணை என்பது நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து திரு அவை பெற்றுள்ள பல சிறப்பான கொடைகளில் ஒன்று மட்டுமல்ல; அது ஓர் ஈடு இணையற்ற கொடையாகும். ஏனெனில், அது அவரையே அளிக்கின்ற கொடையாகும்” என்பார் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்.
இன்று நாம் கொண்டாடுகின்ற இயேசுவின் திரு உடல், திரு இரத்தத்தைப் பெருவிழாவானது 1246 ஆம் ஆண்டு திருத்தந்தை நான்காம் அர்பனால் திருஅவை முழுவதும் கொண்டாடப் பணிக்கப்பட்டது. அதன்படி இப்பெருவிழா அன்றுமுதல் இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகின்றது. திரெந்து திருச்சங்கம், “நற்கருணையில் உள்ள ஆண்டவர் இயேசுவுக்கு நாம் ஆராதனை செலுத்துவேண்டும். அவ்வாறு நாம் செலுத்தும் ஆராதனை மற்றவரையும் நற்கருணை ஆண்டவர்பால் ஈர்க்கவேண்டும்” என்கிறது. இவ்வாறு நாம் நற்கருணையில் உள்ள ஆண்டவருக்குச் செலுத்தும் ஆராதனை பலரையும் அவர்பால் ஈர்க்கவேண்டும் என்கிற உயரிய நோக்கத்திற்கு ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படுகின்ற இயேசுவின் தூய்மைமிகு திரு உடல், திரு இரத்தப் பெருவிழா நமக்குத் தரும் முதன்மையான செய்தி, நற்கருணை புதிய உடன்படிக்கையின் அடையாளம் என்பதாகும்.
பழைய ஏற்பட்டுக் காலத்தில் இரத்தம் உடன்படிக்கையின் அடையாளமாகக் கருதப்பட்டது. இதற்குச் சான்றாக இருப்பது இன்றைய முதல்வாசகம். முதல்வாசகத்தில், மோசே வெள்ளாட்டுக் கிடாயின் இரத்தத்தை எடுத்து, மக்கள் மேல் தெளித்து, “ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம்” என்கிறார்; ஆனால், நற்செய்தியில் இயேசு, கிண்ணத்தைக் கையிலெடுத்து, “இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம்” என்கிறார். இது குறித்து எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் கூறும்பொழுது, “அவர் பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தமல்ல, அவரது சொந்த இரத்தமே!” என்பார். ஆகையால், இயேசுவின் திரு உடலும் திருஇரத்தமுமான நற்கருணை புதிய உடன்படிக்கையின் அடையாளம் என்று சொல்லலாம்.
நற்கருணை: ஒற்றுமையின் அடையாளம்
நற்கருணையைக் குறித்துக் கூறும்பொழுது சலேசு நகர்ப் புனித பிரான்சிஸ் இவ்வாறு கூறுவார்: “நற்கருணை அன்பின் அருளடையாளம்; நற்செயல்களின் உறைவிடம். எல்லாவற்றிற்கும் மேலாக ஒற்றுமையின் அடையாளம்.” நற்கருணை எப்படி ஒற்றுமை அடையாளமாக இருக்கின்றது என்று நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நற்கருணை என்பது அடிப்படையில் இயேசுவின் திரு உடல் மற்றும் திரு இரத்தம். இத்திருவுடலின் உறுப்புகளாக நாம் ஒவ்வொருவரும் இருக்கின்றோம். இதையே புனித பவுல், “உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல் கிறிஸ்துவும் இருக்கின்றார்” (1 கொரி 12: 12) என்பார். அப்படியெனில், கிறிஸ்துவின் உறுப்புகளாய் இருக்கின்ற நாம் ஒவ்வொருவரும் நம்மிடம் இருக்கின்ற ஏழை பணக்காரன், உயர்ந்தவன் தாழ்ந்தவன், படித்தவன் என்ற வேறுபாடுகளின்றி கிறிஸ்துவில் ஒன்றாய் இருக்க வேண்டும் (கலா 3: 28).
நற்கருணை: மறுகிறிஸ்துவாக வாழ்வதற்கு விடுக்கும் அழைப்பு
நற்கருணை புதிய உடன்படிக்கையின் அடையாளம், ஒற்றுமையின் அடையாளம் என்று சிந்தித்துப் பார்த்த நாம், நிறைவாக நற்கருணை நமக்கு விடுக்கும் அழைப்பு என்ன என்று சிந்திப்போம்.

Comments are closed.