தேவமாதாவின் வணக்கமாதம் மே-12ஆம் தேதி

தேவமாதா எலிசபெத்தம்மாளை சந்திக்கிறார்கள் அச்சமயத்தில் தேவமாதாவிடம் விளங்கின மூன்று பிரதான புண்ணியங்கள்
1 வது : அதிசயத்துக்குரிய தேவ சுறுசுறுப்பு
2 வது : மிகுந்த மனத்தாழ்ச்சி
3 வது : சுயநலமற்ற பிறர் சினேகம்
1: அதிசயத்துக்குறிய தேவ சுறுசுறுப்பு
எவ்வித பாக்கியமும் பெற்ற திருக்கன்னிகை தம்முடைய திருஉதரத்தில் அவதரித்த இரட்சகரைத் தரித்தவுடனே அவர் பூலோகத்தில் எரியச்செய்ய வருகிற தேவ அக்கினியால் ஏவப்பட்டவர்களாய் உடனே மலைநாட்டுக்குத் தம்முடைய சுற்றத்தினராகிய எலிசபெத்தம் மாளிடத்தில் தீவிரித்துப்போனார்கள். அந்த அதிசயத்துக்குரிய தேவ கன்னிகை தம்முடைய திரு இருதயத்தில் எரிகிற தேவ சிநேகத்தின் ஆவலைக் கொண்டு எவ்வளவு சுறுசுறுப்புடன் அதற்குச் சம்மதித்தார்கள் என்று தியானிப்போம். தூர பயணத்தை மேற் கொண்டாலும் வழிப் பயணம் வருத்தமும் ஆபத்தும் உள்ளதாய் இருந்தாலும், அன்னை பின்வாங்காமல் அதிக வேகத்தோடு சர்வேசுரன் சித்தத்தின்படியே இரட்சகருக்கு அர்ச். ஸநாபக அருளப்பருடைய திருத்தாயாரைச் சந்திக்கத் தீவிரித்துப் போனார்கள்.
தேவ ஊழியத்தில் சுறுசுறுப்புள்ளவனுடைய அடையாளம் இதுதான். அவன் தேவகிருபையின் ஏவுதலுக்கு அமைந்து ஞான சந்தோஷத்துடன் ஆண்டவருக்கு ஊழியம் செய்து தேவ நீதியின் உன்னதமான வழியில் முழு மூச்சுடன் நடந்துவருவான் தேவ ஊழியத்தில் அசட்டை உள்ளவனோவென்றால் புண்ணிய நெறியில் உறுதியாக நடவாமல் வருத்தத்தோடும் கஸ்தியோடும் தேவ ஊழியத்துக்கு அடுத்தவைகளை நிறைவேற்றுவான். இப்போது நீங்கள் தேவ ஊழியத்தில் சுறுசுறுப்பு உள்ளவர்களோ அல்லது அசட்டையுள்ளவர்களோ என்று பாருங்கள் அந்த ஞான அசட்டைத்தனமானது எவ்வித தீமைகளுக்கும் இடங்கொடுக்கும் என்பதற்குச் சந்தேகமில்லை
2. மிகுந்த மனத்தாழ்ச்சி
இந்தப் பரம கன்னிகை தேவமாதாவாயிருக்கிறதினால் சகல உலகங்களுக்கும் இராக்கினியாய் எல்லா மனிதருடையவும் வான தூதர்களுடைய வணக்கத்துக்கும் ஊழியத்துக்கும் உரியவர்களாய் இருந்தார்கள். ஆயினும் அன்னை அர்ச்.எலிசபெத்தம்மாளைச் சந்தித்து அவருக்கு தம் உதவிகளை வழங்க அதிசயத்துக்குரிய மனத் தாழ்ச்சியோடு பணிவிடை செய்ய தானே முன் வந்தார்கள். அன்னை பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருந்த போதிலும் எல்லா பெண்களிலும் மேலான அந்தஸ்தை அடைந்திருந்த போதிலும் எவருக்கும் கீழாக தம்மைத் தாழ்த்துகிறார்கள். இந்தப் பரம நாயகியின் நடத்தைக்கும், நம்முடைய நடத்தைக்கும் எவ்வளவு பார தூர வித்தியாசம்! அன்னையுடைய மனத்தாழ்ச்சிக்கும் நம்முடைய ஆங்கார அகந்தைக்கும் எவ்வளவு வித்தியாச வேற்றுமை எண்ணிக்கைக் குள்ளடங்காத சுகிர்த நன்மைகளைப் பெற்று எல்லா சிருஷ்டிகளிலும் உயர்ந்தவர்களாயிருந்த போதிலும் தம்மைப் பெருமையாய் எண்ணாமல் எல்லாருக்கும் முன்பாக தம்மை தாழ்த்த விரும்புகிறார்கள். எவ்வித பாவ அசுத்தங்களாலும் நிறைந்த நாமோவென்றால் அகந்தையான பெருமையைக் கொண்டு, எல்லாருக்கும் முன்பாக மகிமையுடன் விளங்கவும் வாழ்த்தப்படவும் விரும்புகிறோம்.
3. சுயநலமற்ற பிறர் சிநேகம்
தேவமாதா அர்ச்.எலிசபெத்தம்மாளிடத்தில் தங்கினபொழுது செய்த புண்ணியங்களையும் காண்பித்த சுகிர்த மாதிரிகைகளையும் சொல்லுந்தரமன்று, மிகுந்த அன்போடும் சுறுசுறுப்போடும் அர்ச்.எலிசபெத்தம்மாளை வணங்கி, அன்னைக்குரிய சகல உதவிகளையும் செய்து கொண்டு வந்தார்கள். நாமும் அந்த தேவ இராக்கினியைக் கண்டு பாவித்து உண்மையான அன்புடன் மற்றவர்களுடைய அவசரங்களில் உதவவும், உதவி செய்யவும், மிகுந்த அன்போடு அனைவரையும் சிநேகிக்கவும், முயற்சியுள்ள பிரியத்துடனே நிர்ப்பாக்கியருக்குத் தக்க உதவி செய்யவும், பின்வாங்காத சிநேகத்துடன் இடைவிடாமல் புறத்தியாரைக் காக்கவும், ஞான கருத்துடனே புறத்தியாரிடத்தில் சர்வேசுரனை நோக்கவும் கடவோம்.
செபம்
பரிசுத்த கன்னிகையே! நீர் உம்முடைய சுற்றத்தினராகிய அர்ச்.எலிசபெத்தம்மாளைச் சந்திக்கும்போது அன்னை உம்முடைய வார்த்தை என் காதிலே விழுந்தவுடனே என் வயிற்றிலிருக்கிற என் பிள்ளை மகிழ்ச்சியினால் துள்ளினதென்று அகமகிழ்ந்து உச்சரித்தார்கள். ஓ! என் தாயே, உமது திருவாக்கியத்தைக் கேட்பேனென்று உறுதியாய் நம்புகிறேன். ஆனால் அந்த அதிஷ்டம் எனக்கு அனுகூலம் ஆகட்டும்
இந்தக் கண்ணீர் கணவாயிலே உமது திருப் பெயரை உச்சரிக்கும் பொழுது என் உள்ளமெல்லாம் மகிழ்ச்சியினால் உருகிப் போகக்கடவது. மாமரி என்னும் திருநாமமே, என் இதயத்தில் எப்போதும் வாசம் செய்யும் என் வாக்கில் எப்போதும் வாரும், என் சந்தோஷமாயிரும். என் ஆதரவாயிரும், என் பாக்கியமாயிரும், மரியாயே என்னும் திருநாமமே உமமுடைய அடைக்கலத்தில் ஒருவனாகிலும் அவநம்பிக்கையாய் இருக்க மாட்டான்
அர்ச். பெர்நந்து தேவமாதாவை நோக்கி வேண்டிக்கொண்ட செபம்.
மிகவும் இரக்கமுள்ள தாயே! உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் கேள்விப்பட்டதில்லையென்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்தழுது பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு உமது சமூகத்திலே நிற்கிறேன். அவதரித்த வார்த்தையின் தாயே என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். ஆமென்.
ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சியசிஷ்ட மரியாயே! பாவிகளுக்கடைக்கலமே! இதோ உமது அடைக்கலமாக ஒடி வந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.
இப்படி மூன்றுமுறை சொல்லவும் -1,பர. 3,அருள். திரி.
இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :
ஓ! தேவமாதாவே, மெய்யான சர்வேசுரனான சேசுக் கிறிஸ்துநாதர் பேரில் என்னுடைய இருதயம் தேவசிநேகத்தால் பற்றி எரியச் செய்தருளும்.
பதினொன்றாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :
தங்களுக்குள்ளே பகை வர்மமாயிருக்கிறவர்களைச் சமாதானப்படுத்துகிறது

Comments are closed.