மே 5 : நற்செய்தி வாசகம்

ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-8
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “உண்மையான திராட்சைக் கொடிநானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். என்னிடமுள்ள கனி கொடாத கிளைகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் அனைத்துக் கிளைகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்துவிடுவார். நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள். நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளைகள் திராட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனி தர இயலாது. நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. என்னோடு இணைந்து இராதவர் கிளையைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கிளைகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும். நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
_________________________________________
“என்னோடு இணைந்திருங்கள்”
இணைந்திருந்தால் மட்டுமே இயங்க முடியும்:
கல்லூரி மாணவர்கள் இருவர் தாங்கள் மேற்கொண்டிருந்த ஆய்வு தொடர்பாக ஒரு பெரிய தொழிற்சாலைக்குச் சென்றிருந்தார்கள். அங்கு வழிகாட்டி ஒருவர் இருவரையும் தொழிற்சாலையில் இருந்த ஒவ்வோர் அறைக்கும் கூட்டிச்சென்று காட்டினார். பயங்கரச் சத்தத்தோடு ஒவ்வோர் அறையிலும் இருந்த இயந்திரங்கள் ஓடுவதைக் கண்டு கல்லூரி மாணவர்கள் இருவரும் மலைத்துப்போய் நின்றனர்
பின்னர் வழிகாட்டி அவர்கள் இருவரையும் ஓர் அறைக்குக் கூட்டிக் கொண்டு போனார். அந்த அறை எந்தவிதமான சத்தமும் இல்லாமல் அமைதியாக இருந்தது. அதைப் பார்த்துவிட்டு, மாணவர்கள் இருவரும், “இது என்ன அறை, மிகவும் அமைதியாக இருக்கின்றது” என்றார்கள். உடனே வழிகாட்டி அவர்களிடம், “இதுதான் கட்டுப்பாட்டறை (Control Room). இந்த அறைதான் இங்கே இயங்குகின்ற எல்லா இயந்திரங்களையும் இயக்கிக் கொண்டிருக்கின்றது. மேலும் மற்ற அறைகளில் இயங்கிக் கொண்டிருக்கின்ற இயந்திரங்கள் சீராக இயங்குகின்றதென்றால், அவை இந்த அறையோடு இணைந்திருப்பதால்தான். ஒருவேளை மற்ற அறைகளில் உள்ள இயந்திரங்கள் இந்த அறையோடு இணைந்திருக்காவிட்டால், அவற்றால் சரியாக இயங்க முடியாது” என்றார்.
ஆம், மற்ற அறைகளில் இருந்த இயந்திரங்கள் கட்டுப்பாட்டு அறையோடு இணைந்திருந்தால்தான் அவைகளால் நன்றாக இயங்க முடிந்தது. நாமும் ஆண்டவரோடு இணைந்திருந்தால் மட்டுமே மிகுந்த கனி தர முடியும் என்று இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துக் கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இஸ்ரயேல் மக்களுக்குத் திராட்சைத் தோட்டம், திராட்சைக் கொடி, கிளைகள் போன்ற உருவகங்கள் புதிதில்லை. அவைகளெல்லாம் அவர்களுக்கு நன்கு அறிமுகமானவை. இன்னும் சொல்லப்போனால் திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் மக்களோடு தொடர்பு படுத்திப் பேசப்பட்டது (எசா 5: 1-7). இத்தகைய பின்னணியில் இயேசு, “நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள்” என்கிறார். மேலும் நீங்கள் என்னோடு இணைந்திருந்தால் அல்லது ஒன்றித்திருந்தால் மிகுந்த கணிதருவீர்கள் என்றும், நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும் என்றும் கூறுகின்றார்.
நாம் கொடியாகிய இயேசு கிறிஸ்துவோடு ஒன்றித்திருக்கின்றோமா, மிகுந்த கனி தருகின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம்.
சிந்தனைக்கு:
 பலன் கொடுப்பதே பரமனுக்கு ஏற்ற வாழ்க்கை
 கடவுளோடு ஒன்றித்திராதபொழுது, எதுவும் இல்லாதவர்களாக இருக்கின்றோம். அதே வேளையில், எப்பொழுது நாம் கடவுளோடு ஒன்றித்திருக்கின்றோமோ அப்பொழுது நாம் எல்லாம் உள்ளவர்களாக இருக்கின்றோம்.
 ஆண்டவரின் சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர், நீரோடையோரம் நடப்பட்ட மரம் இருப்பார் (திபா 1: 2-3)
இறைவாக்கு:
‘எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு’ (பிலி 4: 13) என்பார் புனித பவுல். எனவே நாம் ஆண்டவரோடு ஒன்றித்திருந்து மிகுந்த கனிதந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.