#வாசக மறையுரை (ஏப்ரல் 30)

பாஸ்கா காலம் நான்காம் வாரம் சனிக்கிழமை
I திருத்தூதர் பணிகள் 13: 44-52
II யோவான் 14: 7-14
இயேசுவே வழி!
வழியின்படி நடக்காதவர்கள்:
ஒரு குடும்பம் தங்களிடமிருந்த நான்கு சக்கர ஊர்தியில் ஒரு மலைப்பாங்கான பகுதிக்குச் சுற்றுலா சென்றது. வழியில் ஓரிடத்தில், ‘பால வேலை நடந்துகொண்டிருப்பதால், தயவுசெய்து மாற்றுப்பாதையில் செல்லவும்’ என்ற அறிவிப்புப் பலகையானது வைக்கப்பட்டிருந்தது. அதைக்கண்டதும், ஊர்தியை ஓட்டிவந்த கணவர், “சாலை நன்றாக இருந்தாலும், இவர்கள் இப்படியோர் அறிவிப்புப் பலகையை வைத்துவிடுவது வாடிக்கையாய்ப் போய்விட்டது! நாம் இந்தப் பாதையிலேயே செல்வோம்” என்று மனைவியைப் பார்த்துச்சொன்னார். அதற்கு அவருடைய மனைவி, “அறிவிப்புப் பலகை வைத்திருக்கின்றார்கள் எனில், அதைப் பொய்யாகவா வைத்திருப்பார்கள்? அதனால் தயவுசெய்து மாற்றுப்பாதையில் செல்லுங்கள்” என்றார்.
மனைவி சொன்னதைக் கேட்காமல், “நீ வேண்டுமானால் பாரேன்… இந்தப்பாதை நன்றாகத்தான் இருக்கும்” என்று சொல்லிவிட்டுத் தடைசெய்யப் பாதை வழியாக ஊர்தியை ஓட்டினார் கணவர். அவர்கள் பயணம் செய்த பாதையில் பாலவேலை எதுவும் நடைபெறாமல் நன்றாவே இருந்தது. உடனே கணவர் தன் மனைவியிடம், “இதோ பார்! இந்தப் பாதையில் எந்தவொரு வேலையும் நடைபெறாமல், பாதை எவ்வளவு

அருமையாக

இருக்கின்றது என்று. என்னுடைய கணிப்பு எப்பொழுதும் சரியாகத்தான் இருக்கும்” என்று சொல்லிப் பெருமையடித்துக் கொண்டுவந்தார். திடீரென்று ஓர் இடத்தில் பாலவேலை முடியாமல், பாலம் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டதும், அவர் அதிர்ந்துபோய் வண்டியைத் திருப்பிக்கொண்டு, வந்த வழியிலேயே வந்தார். அங்கு ஓர் அறிவிப்புப் பலகை இருந்தது. அதில், “அறிவிப்புப் பலகையில் குறிப்பிட்டிருந்தவாறு மாற்றுப்பாதையில் சென்றிருந்தால், இப்படி நேரத்தை வீணடித்திருக்கத் தேவையில்லையே! முட்டாள்!!” என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு அவர் அசடுவழிய நின்றார்.

ஆம், பலரும் இந்நிகழ்வில் வருகின்ற மனிதரைப்போன்று, குறிக்கப்பட்ட வழிகளில் செல்லாமல் தங்களுக்கு விருப்பமான வழிகளில் சென்று துன்புறுகிறார்கள். இத்தகைய சூழலில், இன்றைய நற்செய்திவாசகம், இயேசுவே வழி என்கிறது. அதைக்குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசு தனது இறுதி இராவுணவின்போது சீடரிடம், “நான் போகுமிடத்திற்கு வழி உங்களுக்குத் தெரியும்” என்றதும், தோமா அவரிடம், “…..நீர் போகுமிடதிற்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?” என்று சொல்லும்பொழுதான், இயேசு அவரிடம், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே…..” என்கிறார்.
இவ்வுலகில் வேறு யாரையும்விடவும் இயேசுவால் மட்டுமே நம்மைத் தந்தையிடம் இட்டுச் செல்லமுடியும். அதனாலேயே அவர், “என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” என்கிறார். எனவே, நாம் வேறு யார்காட்டும் வழியிலும் செல்லாமல், இயேசுவின் வழியில் நடந்து, தந்தையிடம் செல்வோம்.
சிந்தனைக்கு:
 கடவுளின் வார்த்தையே நம் பாதைக்கு ஒளியாயிருக்கின்றது (திபா 109: 105)
 இயேசுவாலன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை (திப 4: 12)
 கடவுளின் வழிகள் அனைத்திலும் இரக்கமும் உண்மையும் விளங்குகின்றன (தோபி 3: 2).
இறைவாக்கு:
‘என் வழிகளைப் பின்பற்றுகின்றோர் நற்பேறு பெற்றோர்’ (நீமொ 8: 32) என்கிறது நீதிமொழிகள் நூல். எனவே, நாம் இயேசுவின் வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.