மறைக்கல்வியுரை – இறைவேண்டலின் ஒரு வழிமுறை, தியானம்

திங்கள்கிழமை முதல், கோவிட் பெருந்தொற்று தீவிரக் கட்டுப்பாடுகளை இத்தாலிய அரசு ஓரளவுத் தளர்த்தியுள்ளபோதிலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஏப்ரல் 28, இப்புதன் மறைக்கல்வியுரை, கடந்த சில மாதங்களைப்போல், அவரது நூலக அறையிலிருந்தே, தொலைக்காட்சி, மற்றும் இணையத்தொடர்பு வழியாக இடம்பெற்றது. இறைவேண்டல் குறித்து கடந்த சில வாரங்களாக மறைக்கல்வித் தொடரை வழங்கிவரும் திருத்தந்தை, இவ்வாரம், தியானம் வழியாக இறைவேண்டல் செய்வதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். முதலில், வரவிருக்கும் துணையாளராம் தூய ஆவியார் குறித்து, இயேசு கூறிய சொற்கள், யோவான் நற்செய்தியிலிருந்து பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டது.

உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார். […] “நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால், அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். (யோவா 14,25-26; 16,12-13)

இவ்வாசகத்தைத் தொடர்ந்து, தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்:

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இறைவேண்டல் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, தியான இறைவேண்டலின் முக்கியத்துவம் குறித்து சிந்திப்போம். ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் நம் தினசரி வாழ்வு நடவடிக்கைகளின் மத்தியில், கடந்த கால நினைவுகளை குறித்து அசைபோட வேண்டியது அவசியமான ஒன்று. கிறிஸ்தவர்களைப் பொருத்தவரையில், தியானம் என்பது, வெறும் அகநோக்குப் பார்வையல்ல, மாறாக, இறைவேண்டலின் ஒரு வழிமுறை. அதாவது, கிறிஸ்துவை நேர்கொண்டு சந்திப்பதற்கு, குறிப்பாக, இவ்வுலக வாழ்வின் மறையுண்மைகளில் அவரைச் சந்திப்பதற்குரிய ஒரு வழி.

திருஅவையின் ஆன்மீகப் பாரம்பரியங்களில், தியானத்திற்கான பல வழிமுறைகள் இருக்கும் வேளையில், அனைத்திற்கும் ஒரே நோக்கமே உள்ளது, அதாவது, நம் மீட்பராம் இயேசுவுடன் நம் உறவை வளர்ப்பதற்கு உதவுவதேயாகும்.  விசுவாசத்தில், கிறிஸ்துவுடன் ஆன நம் ஒன்றிப்பு, தூய ஆவியார் வழங்கும் அருளின் உதவியுடன், நாம் நம் அறிவுத்திறன், கற்பனை, உணர்வுகள், மற்றும் ஆவலைப் பயன்படுத்துவதன் வழியாக  ஊட்டம் பெறுகிறது.

கிறிஸ்துவின் மறையுண்மைகளை நாம் தியானிப்பதன் வழியாக நம் விசுவாசம் ஆழப்படுத்தப்படுகிறது, இதயங்களில் மாற்றங்கள் இடம்பெற தூண்டுதல் பெறப்படுகிறது, இயேசுவின் பாதையில் நடப்பதற்குரிய விருப்பம் பலம் பெறுகிறது என, திருஅவையின் மறைக்கல்வி நமக்குக் கற்பிக்கிறது. இவ்வாறு தியானிப்பதன் வழியாக, இயேசுவின் ஒவ்வொரு வார்த்தையும், செயலும், நம்மைத் தொட்டு, நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறட்டும். நற்செய்தி நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் நாம் இயேசுவைச் சந்திக்கவும், அவரில் நம் மீட்பு, மற்றும் மகிழ்வின் ஆதாரத்தைக் கண்டுகொள்ளவும் அழைப்பு பெற்றுள்ளோம்.

இவ்வாறு, தன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனுக்கும் உடன்பிறந்த அன்புக்கும் சேவையாற்றுவதற்குரிய நம் அர்ப்பணத்தை புதுப்பிப்பதற்கு இந்த உயிர்ப்புக் காலம் நமக்கு அழைப்பு விடுக்கிறது என்று கூறினார். பின், முதியோர், இளையோர், நோயுற்றோர், மற்றும் புதுமண தம்பதியரை நோக்கி தன் எண்ணங்கள் செல்கின்றன என எடுத்துரைத்து, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Comments are closed.