ஒவ்வொருவரையும் இயேசு தெரிந்து வைத்திருக்கிறார்

நல்லாயனாம் இயேசு தன் வார்த்தையின் ஒளி வழியாக நம்மை காப்பதோடு, தன் இருப்பு, மற்றும் அருளடையாளங்கள் வழியாக நம்மை பலப்படுத்துகிறார், என நல்லாயன் ஞாயிறு நண்பகலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய வானக அரசி வாழ்த்தொலி உரையில் கூறினார்.

வத்திக்கான் புனித பேதுரு பேராலாய வளாகத்தில் குழுமியிருந்த விசுவாசிகளுக்கு, ஏப்ரல் 25, ஞாயிறன்று, வானக அரசி வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு நான் வந்துள்ளேன், என இயேசு கூறும் வார்த்தைகளைக் கொண்ட நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

கூலிக்கு வேலைசெய்வோர், ஓநாய்களைக் கண்டால், தப்பி ஓடிவிடுவர், ஆனால், நல்லாயனாம் இயேசுவோ, தன் உயிரையும் கொடுத்து, தன் ஆடுகளை காப்பவர் என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன’ என் இயேசு கூறுவதைக் கேட்கும்போது, நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் இயேசு தெரிந்து வைத்திருக்கிறார் என அறிவதே மகிழ்ச்சி தருவதாக உள்ளது என்றார்.

மற்றெவரையும் விட நம் இதயங்களை அதிகம் அதிகமாக அறிந்திருக்கும் இயேசு, நம் எண்ணங்கள், நம் உணர்வுகள், நம் பலம், குறைபாடுகள், என அனைத்தையும் அறிந்தவராக, நம்மீது அக்கறை கொண்டவராக, நம் காயங்களுக்கு மருந்திட்டு, நம்மைக் குணப்படுத்துகிறார் (எசே 34:11-16), என்றார் திருத்தந்தை.

நல்லாயனாம் இயேசு, தன் ஆடுகளை பாதுகாக்கிறார், அவைகளை அறிந்திருக்கிறார் என்பது மட்டுமல்ல, தன் ஆடுகளை அன்புகூர்கிறார் என்பதாலேயே தன் ஆடுகளுக்காக தன் உயிரைத் தரவும் தயாராக இருக்கிறார் (யோவா 10:15) என எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  ‘இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும், அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும்’ (யோவா 10:16), என இயேசு கூறுவது, அனைத்து மக்களும் இறைத்தந்தையின் அன்பைப் பெற்று, அதன் வழியாக வாழ்வைப் பெற வேண்டுமென்ற இயேசுவின் விருப்பத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது என கூறினார்.

அனைத்து மக்களையும் ஒன்றிணைத்துக் கொண்டுவர விரும்பும் இயேசுவின் பணியை ஏற்று நடத்தவேண்டியது திருஅவையின் கடமை என்றுரைத்த திருத்தந்தை, இவ்வுலக மக்களனைவர் மீதும் கொண்ட அன்பால் தன் உயிரையே தியாகம் செய்த இயேசுவின்  அன்புக்குச்  சான்றுகளாக, தாழ்ச்சி, மற்றும் உடன்பிறந்த அன்போடு நாம் செயல்பட, அன்னை மரியா நமக்கு உதவுவாராக, என தன் வானக அரசி வாழ்த்தொலி உரையை நிறைவு செய்தார்.

Comments are closed.