இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.

1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,

இன்றைய திருப்பலி முதல் வாசகம் எடுக்கப்பட்ட திருத்தூதர் பணிகள் நூலில்,
“நாங்கள் கண்டதையும், கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” என புனித பேதுருவும் , புனித யோவானும் கூறுகின்றனர்.

“நற்செய்தியை அறிவிக்கவேண்டிய கட்டாயம் ஒவ்வொருவருக்கும் உண்டு.”
(1 கொரி. 9: 16) என புனித பவுல் கூறியதை நாம் உணர்ந்து அதை நிறைவேற்ற இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,

இன்றைய திருப்பலி நற்செய்தி வாசகத்தில், “உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.

நற்செய்தி அறிவிப்பு என்கிற இறைப்பணி குருக்களுக்கு மட்டும் உரியது அல்ல மாறாக அப்பணி இயேசுவினால் நம் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது என்பதை உணர்ந்து அப்பணியை நாம் மனமுவந்து செய்திட இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,

19-நூற்றாண்டில் அருட்சகோதரியாக இருந்து ஏழை மக்களுக்கு வழக்குரைஞராக சேவை செய்த இன்றைய புனிதர் மகதலேனை நம் திருச்சபைக்குப் புனிதராகத் தந்த நம் இறைவனுக்கு நன்றியாக இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,

இந்தியாவிலும், பிற நாடுகளிலும் வேகமாகப் பரவிவரும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை கட்டுக்குள் வரவேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,

பொது மக்களிடையே கொரோனா தொற்றுத் தடுப்பூசியை பற்றிய அச்சம் அகன்று அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டிய துணிவினை மக்களுக்கு இறைவன் அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்

Comments are closed.