சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 1-7
ஓய்வுநாள் முடிந்ததும் மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகியோர் அவரது உடலில் பூசுவதற்கென்று நறுமணப் பொருள்கள் வாங்கினர். வாரத்தின் முதல் நாள் காலையிலேயே கதிரவன் எழும் வேளையில் அவர்கள் கல்லறைக்குச் சென்றார்கள். “கல்லறை வாயிலிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்?” என்று அவர்கள் ஒருவரோடு ஒருவர் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் நிமிர்ந்து உற்று நோக்கியபொழுது கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அது பெரியதொரு கல்.
பிறகு அவர்கள் கல்லறைக்குள் சென்றபோது வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர் வலப்புறம் அமர்ந்திருக்கக் கண்டு திகிலுற்றார்கள். அவர் அவர்களிடம், “திகிலுற வேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்; அவர் இங்கே இல்லை; இதோ, அவரை வைத்த இடம். நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், ‘உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள்’ எனச் சொல்லுங்கள்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————–
மாற்கு 16: 1-7
“அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்”
நிகழ்வு
பிரேசிலில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் பழங்குடியினர் சிலர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வாழும் பகுதியைச் சுற்றிப் பெரிய ஆறு ஒன்று ஓடுகின்றது. இந்த ஆற்றில் சாத்தான் இருப்பதாகவும், ஒருவேளை யாராவது இந்த ஆற்றைக் கடக்க நேர்ந்தால், அவரைச் சாத்தான் கொன்றுவிடும் என்ற நம்பிக்கை இவர்களிடையே இருப்பதால், யாரும் ஆற்றைக் கடக்கத் துணிவதில்லை இப்படியிருக்கும்பொழுது இவர்கள் நடுவில் நற்செய்தி அறிவிக்க அருள்பணியாளர் ஒருவர் வந்தார். அவர், ஆற்றில் சாத்தான் இருப்பதாகவும், அந்தச் சாத்தான் ஆற்றைக் கடக்கிறவர்களைக் கொன்றுவிடும் என்றும் மக்கள் சொன்ன செய்தியைக் கேட்டுச் சிரித்தார். ஏனெனில், அவர் அந்த ஆற்றின் வழியாகத்தான் அங்கு வந்திருந்தார். பிறகு அவர் அவர்களிடம் “ஆற்றில் சாத்தான் இல்லவே இல்லை… ஒருவேளை ஆற்றில் சாத்தான் இருந்தால், அது என்னைக் கொன்றுபோட்டிருக்குமே!” என்றார். அவர்கள் அவர் சொன்னதை நம்பவே இல்லை. இதனால் அவர், ‘தக்க சமயம் வரும்பொழுது, இவர்களிடம் இந்த ஆற்றில் சாத்தான் இல்லை என்பதை நிரூபித்துக்கொள்வோம். அதுவரைக்கும் பொறுமையாக இருப்போம்’ என்று இருந்தார்.
ஒரு சமயம் இவர்கள் இருந்த பகுதியில் கொள்ளைநோய் வந்து, பலருடைய உயிரையும் எடுத்துக்கொண்டது. .அப்பொழுது அருள்பணியாளர் அவர்களிடம், “இந்த ஆற்றுக்கு அந்தப் பக்கம்தான் பெரிய மருத்துவனை இருக்கின்றதே! கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டவர்களை அங்குக் கொண்டுசென்றால், அவர்களுடைய உயிரைக் காப்பாற்றிவிடலாமே!” என்று சொன்னதற்கு, “ஆற்றில்தான்தான் சாத்தான் இருக்கின்றது!” என்று பழைய கதையையே சொல்லிக்கொண்டிருந்தார். ‘இதுதான்! இந்த ஆற்றில் சாத்தான் இல்லை என்று இவர்களிடம் நிரூபிப்பதற்குச் சரியான வாய்ப்பு’ என்று மனத்தில் நினைத்துக்கொண்டு, அருள்பணியாளர் ஆற்றின் அருகில் சென்று, அதிலிருந்து தண்ணீரை எடுத்து, தன் முகத்தில் தெளித்து, “இதோ பாருங்கள்! எனக்கு ஒன்றும் ஆகவில்லை. இதிலிருந்தே தெரியவில்லை, இதில் சாத்தான் இல்லை என்று” என்றார். அவர்கள் அவர் சொன்னதை நம்பவில்லை.
இதனால் அவர் ஆற்றுக்குள் சிறிதுதூரம் சென்று, முன்பு சொன்ன அதே வார்த்தைகளைச் சொன்னார். அப்பொழுதும் அவர் சொன்னதை அவர்கள் நம்பவில்லை. கடைசியில் அவர் ஆற்றுக்குள் மூழ்கிச்சென்று, மறுகரையில் போய் எழுந்து, முன்பு சொன்ன அதே வார்த்தைகளை அவர்களிடம் மீண்டுமாகச் சொன்னார். இப்பொழுது அவர்கள் அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டு, ஆற்றில் சாத்தான் இல்லை என்று நம்பத் தொடங்கி, கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டவர்களை மறுகரையில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்று காப்பாற்றினார்கள்.
ஆம், ஆற்றுக்குள் இறங்கினால் சாத்தான் கொன்றுவிடும் என்று எப்படி அந்தப் பழங்குடி நினைத்தார்களோ, அப்படிப் பலரும் சாவோடு மனித வாழ்க்கை முடிந்துவிடும் என்று நினைத்திருந்தார்கள். இந்நிலையில் இந்த நிகழ்வில் வரும் அருள்பணியாளரைப் போன்று, ஆண்டவர் இயேசு சாவை வென்று வெற்றி வீரராய் உயிர்த்தெழுந்தார். அதையே இன்று நாம் உயிர்ப்புப் பெருவிழாவாகக் கொண்டாடுகின்றோம். இப்பெருவிழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
நாமும் ஒருநாள் உயிர்த்தெழுவோம்
ஒருவேளை கிறிஸ்து மட்டும் உயிர்த்தெழுந்திருக்காவிட்டால், அவருடைய சீடர்கள் முன்பு தாங்கள் செய்த வேலைகளைப் பார்க்கக் கிளம்பிப் போயிருப்பார்கள்! அப்பொழுது கிறிஸ்தவ மறை என்ற ஒன்று இருந்திருக்க வாய்ப்பில்லை; ஆனால், இதெல்லாம் நடக்கவில்லை. மாறாக ஆண்டவர் இயேசு தாம் சொன்னது போன்றே மூன்றாம் நாள் வெற்றி வீரராய் உயிர்த்தெழுந்தார். இவ்வாறு இயேசுவின் உயிர்ப்பு திருத்தூதர்கள் அறிவித்த நற்செய்திக்கும், நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கும் அடிப்படைக் காரணமாக இருக்கின்றது (1 கொரி 15: 14).
இயேசுவின் உயிர்ப்பு, நாமும் ஒருநாள் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கையை நமக்குத் தரக்கூடியதாக இருக்கின்றது. இது குறித்துத் திருத்தூதர் புனித பவுல் கூறும்பொழுது, “அவர் இறந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம்” என்பார். எனவே, இயேசுவின் உயிர்ப்பு, நாமும் ஒரு நாள் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கைச் செய்தியைச் தருவதால், அவர் இறந்துபோன்று நாமும் அவரோடு இறக்க முயற்சி செய்வோம்.
ஆண்டவரைத் தேடுவோர் கண்டுகொள்வர்
இயேசுவின் உயிர்ப்பு நமக்குத் தருகின்ற இரண்டாவது செய்தி, அவரைத் தேடுவோர் கண்டுகொள்வர் என்பதாகும்.
இறந்த உடலில் நறுமணப் பொருளைப் பூசுவது என்பது இறந்தவர்மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் செயல். அது இன்றைய காலக்கட்டத்தில் இறந்தவர்களின் கல்லறைகளில் மலர்களை வைப்பதற்கு இணையானது. நற்செய்தியில் வருகின்ற மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகிய மூவரும் இயேசுவின் உடலில் நறுமணப் பொருள்களைப் பூசுவதற்காக அவற்றை ஓய்வுநாள் முடிந்ததும் வாங்கிக்கொண்டு, வாரத்தின் முதன்நாள் விடியற்காலையில் செல்கிறார்கள். இயேசுவின் இறந்த உடலை யோசேப்பு எங்கே வைத்தார் என்று மகதலா மரியாவிற்கும் யோசேப்பின் தாய் மரியாவிற்கும் நன்றாக தெரிந்திருந்தது (மாற் 15: 47). அதனாலேயே அவர்கள் அந்த இடம் நோக்கி விரைந்து செல்கின்றார்கள்; ஆனால் அவர்கள், “கல்லறை வாயிலிருந்த கல்லை நமக்கு யார் புரட்டுவார்?” என்பது தொடர்பாகப் பேசிக்கொண்டே போகிறார்கள்; அவர்கள் அங்குச் சென்றதும், கல் புரட்டப்பட்டிருப்பதையும், வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் வலப்புறம் அமர்ந்திருப்பதையும் கண்டு திகிலுறுகின்றார்கள். அப்பொழுது அவர் அவர்களிடம், “திகிலுற வேண்டாம்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்” என்றார்.
இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், இயேசுவை முழுமனத்தோடு தேடிய இயேசுவின் பெண் சீடர்கள், அதிலும் குறிப்பாக (யோவா நற்செய்தியின் 20: 11-18 ன்படி), மகதலா மரியா உயிர்த்த ஆண்டவர் இயேசுவை முதன்முறையாகக் கண்டுகொண்டார். நாமும் ஆண்டவர் இயேசுவை உள்ளார்ந்த அன்போடும், முழு மனத்தோடும் தேடினால், அவரை நிச்சயம் கண்டுகொள்ள முடியும்.
நற்செய்தியை அறிவிக்க வேண்டும்:
உயிர்ப்புப் பெருவிழா நமக்குத் தரும் மூன்றாவது செய்தி நாம் பெற்றுக்கொண்ட நற்செய்தியைப் பிறருக்கு அறிவிக்கவேண்டும் என்பதாகும். ஆண்டவர் இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார் என்ற செய்தியை வானதூதர்கள் வழியாக அறிந்துகொள்ளும் மூன்று பெண்களும், இயேசு கலிலேயாவிற்குப் போய்க்கொண்டிருக்கின்றார் என்ற செய்தியைச் சீடர்களிடம் சொல்லப் பணிக்கப்படுகின்றார்கள். இவ்வாறு அவர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட நற்செய்தியைப் பிறருக்கு அறிவிக்கப் பணிக்கப்படுகின்றார்கள். இயேசுவைப் பற்றிய நற்செய்தியை நாம் கேட்கின்றோம் எனில், அதை நாம் மட்டும் வைத்திருக்கக்கூடாது; எல்லாருக்கும் பயன்படும் வகையில் அறிவிக்கவேண்டும். அதுவே நாம் செய்யவேண்டிய தலையான பணி.
“நாம் வாழும் வாழ்க்கை மிகச்சிறந்த நற்செய்தி அறிவிப்பாக இல்லாதபோது, நற்செய்தி அறிவிப்பிற்காக எவ்வளவு தூரம் நாம் பயணம் செய்தாலும், அதனால் எந்தவொரு பயனும் இல்லை” என்பார் அசிசி நகர்ப் புனித பிரான்சிஸ். எனவே, நாம் நம் வாழ்வை வாழ்வே மிகச் சிறந்த அறிவிப்பாக மாற்றி, இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவை பொருள்ளதாக்குவோம்.
சிந்தனை:
‘நமது பழைய வரலாறு சிலுவையோடு முடிந்துவிட்டது; நமது புதிய வரலாறு இயேசுவின் உயிர்ப்போடு தொடங்கியிருக்கின்றது’ என்பார் வாட்ச்மேன் நீ (Watchman Nee) என்ற சீன அறிஞர். எனவே, இயேசுவின் உயிர்ப்பினால் புதிய வரலாற்றைத் தொடங்கியிருக்கும் நாம் ,இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சிகளாக விளங்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.