பெரிய வியாழன் (ஏப்ரல் 01)

I விடுதலைப் பயணம் 12: 1-8, 11-14
II 1 கொரிந்தியர் 11: 23-26
III யோவான் 13: 1-15
தமக்குரியோர்மேல் இறுதிவரை அன்புசெலுத்திய இயேசு
நிகழ்வு
தந்தை, தாய், சிறு வயதில் ஒரு மகள் என்று ஓர் எளிய கிறிஸ்தவக் குடும்பம் இருந்தது. இதில் தந்தை மிகவும் கண்டிப்புள்ளவராகவும், எப்பொழுதும் எரிந்து எரிந்து விழுபவரகவும் இருந்தார். இதனால் அவருடைய அன்பிற்காக ஏந்தித் தவித்த மகளுக்கு அது கிடைக்காமலேயே போனது. இந்நிலையில் கிறிஸ்துப் பிறப்புப் பெருநாள் நெருங்கி வந்தது. அதற்காக மகள் வீட்டில் சிறியளவில் ஒரு குடில் செய்தாள். குடிலுக்கு வெளியே ஒரு சிறிய பெட்டியைத் தங்கநிறச் சரிகையால் சுற்றி வைத்தாள். இதைப் பார்த்த தந்தை, “பணத்திற்கு நான் திண்டாடிக்கொண்டிருக்கும்பொழுது, அதன் அருமை புரியாமல், நீ இப்படிப் பெட்டியைத் தங்க நிறச் சரிகையால் சுற்றிப் பணத்தை வீணடிக்கின்றாயே!” என்று அடி அடியென அடித்தார். மகளோ எதுவும் பேசாமல், அடிகளைப் பொறுமையோடு வாங்கிக்கொண்டு, அழுதுகொண்டே தன் அறைக்குள் சென்றாள்.
மறுநாள் குடிலுக்கு முன்பாகத் தங்க நிறச் சரிகையால் சுற்றி வைக்கப்பட்டிருந்த சிறிய பெட்டியைத் தன் சிறிய கைகளில் எடுத்துக்கொண்டு வந்தவள், அதைத் தந்தையிடம் கொடுத்து, “அப்பா! இது உங்களுக்குத்தான் வாங்கிக்கொள்ளுங்கள்” என்றாள். மகளிடமிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்டு ஒரு வினாடி அதிர்ந்துபோன தந்தை, தன் மகள் அன்போடு கொடுத்த பரிசை ஆசையோடு திறந்துபார்த்தார். அவர் அதைத் திறந்து பார்க்கையில், அதில் எதுவுமே இல்லாமல், காலியாக இருந்ததால், சினத்தின் உச்சிக்கே சென்ற தந்தை, “காலியாக இருக்கும் பெட்டியைக் கொடுத்து என்னிடத்தில் விளையாடுகின்றாயா?” என்று மீண்டுமாக அவளை அடிக்கத் தொடங்கினார்.
அப்பொழுது மகள் அழுதுகொண்டே, “அப்பா! உங்களை நான் அன்போடு கட்டியணைத்துக்கொண்டு முத்தமிட நினைத்தேன். அது முடியாமல் போனதால்தான், இந்தப் பெட்டிக்குள் முத்தமிட்டு, அதை உங்களுக்குப் பரிசாகத் தந்தேன். உண்மையில் இந்தப் பெட்டி காலியாக இல்லை; என் முத்தங்களால் நிறைந்துள்ளது” என்றாள். இதைக் கேட்ட தந்தை, தன் தவற்றை உணர்ந்து, அவளைக் கட்டியணைத்துக் கொண்டார்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற தந்தை தன் மகளை அன்பு செய்யாமல் இருந்தாலும், மகள் தன் தந்தையைத் தொடர்ந்து அன்புசெய்து வந்தாள். பாடுகளின் பெரிய வியாழனான இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியில், “தமக்குரியவர்மேல் அன்புகொண்டிருந்த இயேசு, அவர்கள் மேல் இறுதிவரைக்கும் அன்பு செலுத்தினார்” என்ற வார்த்தைகள் இடம் பெறுகின்றன. இயேசு தமக்குரியவர்களிடம் எப்படி அன்பு செலுத்தினார் என்று நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
அன்பு என்பது சொல்ல, செயல்
பாடுகளின் பெரிய வியாழனான இன்று பல விதங்களில் முக்கியமானதொரு நாள். ஏனெனில், இன்றுதான் இயேசு தன் சீடர்களின் காலடிகளைக் கழுவினார்; இன்றுதான் அவர் நற்கருணையை ஏற்படுத்தினார்; இன்றுதான் அவர் அன்புக் கட்டளையைத் தந்தார். எல்லாவற்றைவிடவும், இன்றுதான் அவர் தனது சீடர்களில் ஒருவனான யூதாஸ் இஸ்காரியோத்தால் காட்டிக்கொடுக்கப்பட்டார்.
தமக்குரியவர்மேல் அன்பு கொண்டிருந்த இயேசு, அவர்கள்மேல் இறுதிவரைக்கும் அன்பு செலுத்தினார் என்று இன்றைய நற்செய்தி வாசகம் கூறுவதை எப்படிப் புரிந்துகொள்வது என்று நாம் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. இயேசு தான் தேர்ந்துகொண்ட பன்னிரு சீடர்களுள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தன்னைக் காட்டிக் கொடுக்கப்போகிறான் என்பது அவருக்குத் தொடக்கத்திலிருந்தே நன்றாகத் தெரிந்திருந்தது (யோவா 6: 64). ஆனாலும், இயேசு அவனை வெறுக்கவில்லை; தன் சீடர்கள் குழுவில் அவன் இருக்கவேண்டாம் என்று ஒதுக்கி விடவில்லை. மாறாக, இயேசு அவனை இறுதிவரைக்கும் அன்பு செய்தார். எந்தளவுகென்றால், விருந்தின்போது அப்பத் துண்டை முதன்முதலில் தோய்த்துக் கொடுக்குமளவுக்கு இயேசு அவனை அன்புசெய்தார் (யோவா 13: 26). அப்பத் துண்டைத் தோய்த்து, ஒருவருக்குக் கொடுப்பது என்பது அன்பின் உச்சக்கட்டம், அது நட்பின் அடையாளம். யூதாசு தன்னைக் காட்டிக்கொடுக்கவிருந்தாலும், இயேசு அவனுக்கு அப்பத்தைத் தோய்த்துக் கொடுத்து, அவன்மீது தான் இறுதிவரை அன்புகொண்டிக்கின்றேன் என்பதை வெளிப்படுத்துகின்றார். இவ்வாறு இயேசு, தன்னை வெட்டுபவருக்கு நிழல்தரும் மரம்போல், தன்னைக் காட்டிக்கொடுக்கவிருந்த யூதாசிடம் உயர்ந்த அன்பினைக் காட்டுகின்றார்.
காலடிகளைக் கழுவிய இயேசு
மலைப்பொழிவில் இயேசு, “உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்?” (மத் 5: 46) என்பார். இயேசு இவ்வார்த்தைகளை மக்களுக்குப் போதித்ததோடு நிறுத்திக்கொள்ளவில்லை; தன் வாழ்விலும் அதைக் கடைப்பிடித்தார் என்றுதான் சொல்லவேண்டும். யூதாசு தன்னை காட்டிக் கொடுக்கவிருந்தார்; பேதுருவோ அவரை மறுதலிக்கவிருந்தார்; ஏனைய சீடர்களோ அவர் கைது செய்யப்பட்டபோது அவரை விட்டு ஓடவிருந்தார்கள். இவையெல்லாம் இயேசுவுக்கு நன்றாகவே தெரிந்திருந்தும், இயேசு அவர்களை அன்புச் செய்யத் தவறவில்லை; மாறாக அவர் அவர்கள்மேல் இறுதிவரை அன்பு செலுத்தினார்.
இயேசு தம் சீடர்கள்மேல் இறுதிவரைக்கும் அன்பு செலுத்தினார் என்பதன் வெளிப்பாடுதான், அவர் அவர்களுடைய காலடிகளைக் கழுவியது. அடிமைகள் செய்கின்ற வேலையைப் போதகரும் ஆண்டவருமான இயேசு தம் சீடர்களுக்குச் செய்து, நீங்கள் என்னைக் காட்டிக் கொடுத்தாலும், மறுதலித்தாலும், என்னை விட்டு ஓடிப்போனாலும் நான் உங்கள்மேல் அன்பு செலுத்துவேன் என்று சொல்லாமல் சொல்கின்றார்.
தன்னையே தந்த இயேசு
“தனக்கிழைத்த தீங்கு அனைத்தையும் அன்பு மன்னித்து மறக்கும்” (நீமொ 10: 12) என்ற நீதிமொழிகள் நூலில் இடம்பெறும் இறைவார்த்தைக்கேற்ப இயேசு தனது சீடர்கள் தனக்கிழைத்த துரோகத்தை மன்னித்து, அவர்மேல் இறுதிவரைக்கும் அன்பு செலுத்தினார். அவரது அன்பின் உச்சக்கட்டம்தான் அவர் தன்னையே உணவாகவும் பானமாகவும் தந்தது. இன்றைய நற்செய்தியில் இயேசு தம் உடலையும் இரத்தத்தையும் வாழ்வளிக்கும் உணவாகவும் பானமாகவும் தந்தது இடம்பெறாவிட்டாலும், இன்றைய இரண்டாம் வாசகத்தில் அது இடம்பெறுகின்றது. இவ்வாறு இயேசு தமக்குரியர்கள்மேல் இறுதிவரை செலுத்தினார்.
இயேசு தமக்குரியவர்கள்மேல் இறுதிவரை அன்பு செலுத்தினார் எனில், நாமும் இயேசுவைப் போன்று ஒருவர் மற்றவர்மேல் இறுதிவரை செலுத்தவேண்டும். இயேசு நம்மீது செலுத்திய அன்பு வெறும் சொல்ல, அது செயல். எனவே, நாம் திருத்தூதர் புனித யோவான் சொல்வது போல், சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்து, இயேசுவின் உண்மையான சீடர்களாவோம்.
சிந்தனை
‘இறைவன் நம்மீது அன்புகொண்டுள்ளார் என்பதை உணர்ந்து, அவருடைய குழந்தைகளாக நாம் நடந்துகொண்டால், நமது வாழ்வது அமைதியாலும் மகிழ்வாலும் நிறைந்து, முற்றிலும் புதியதொரு வாழ்வாக மாறும்’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே, இறைவன், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னையே கையளிக்கும் அளவுக்கு நம்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார் என்பதை உணர்ந்தவர்களாய், மற்றவர்களை நாம் அன்பு செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.