மார்ச் 31 : நற்செய்தி வாசகம்

மானிடமகன், தம்மைப்பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 26 : 14-25
அக்காலத்தில்
பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, ‘‘இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?” என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.
புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து, ‘‘நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்யவேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், ‘‘நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், ‘எனது நேரம் நெருங்கி வந்துவிட்டது; என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப்போகிறேன்’ எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள்” என்றார். இயேசு தங்களுக்குப் பணித்தபடியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார். அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர், ‘‘உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், ‘‘ஆண்டவரே, அது நானோ?” என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள். அதற்கு அவர், ‘‘என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். மானிடமகன், தம்மைப்பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்” என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் ‘‘ரபி, நானோ?” என அவரிடம் கேட்க, இயேசு, ‘‘நீயே சொல்லிவிட்டாய்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————
புனித வாரம் புதன்கிழமை
I எசாயா 50: 4-9a
II மத்தேயு 26: 14-25
“இயேசுவைக் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?”
வில்லியம் டைண்டாலைக் காட்டிக்கொடுத்த அவரது நண்பன்:
இங்கிலாந்தைச் சார்ந்தவர் வில்லியம் டைண்டால் (William Tyndale 1494-1536). சாதாரண மக்களுக்கும் திருவிவிலியம் போய்ச் சேரவேண்டும் என்பதற்காக இவர் அரும்பாடுபட்டு ஹீப்ரு மற்றும் கிரேக்கத்திலிருந்து திருவிவிலியத்தை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார். இதை எப்படியோ அறிந்த இவருடைய நெருங்கிய நண்பன், இவரை ஆட்சியாளர்களிடம் காட்டிக் கொடுத்தான். ஆட்சியாளர் இவரைச் வில்ஃபரோத் கோட்டையில் இருந்த சிறையில் தள்ளினார்கள். அங்கேயும்கூட இவர் யாருக்கும் தெரியாமல் திருவிவிவிலியத்தை மொழிபெயர்த்தார். இதுவும் எப்படியோ அங்கிருந்த சிறையதிகாரிக்குத் தெரிய வந்தது.. இதனால் 1536 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 6 ஆம் நாள், இவர் தீயில் தூக்கி வீசப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.
திருவிவிலியத்தைச் சாதாரண மக்களும் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக அயராது பாடுபட்டு மொழிபெயர்த்த வில்லியம் டைண்டால் அவரது நண்பராலேயே ஆட்சியாளர்களிடம் காட்டிக் கொடுக்கப்பட்டதுபோல், கடவுளின் வார்த்தையை எல்லா மக்களுக்கும் அறிவித்து, இறையாட்சியை இம்மண்ணில் கொண்துவந்த இயேசு கிறிஸ்து, அவரது பன்னிரு சீடர்களில் ஒருவராலேயே காட்டிக்கொடுக்கப்படுகின்றார். அதற்கான முன்னேற்பாடுகள் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நடைபெறுகின்றன. அதைக்குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசுவின் பன்னிரு சீடர்களில் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து அவரை எதற்காகக் காட்டிக்கொடுத்தான் என்பது பற்றிய தெளிவான சான்றுகள் திருவிவிலியத்தில் இல்லையென்றாலும், அவன் தன்னிடமிருந்த பணப்பையிலிருந்து அவ்வப்போது பணத்தை எடுத்துக்கொள்வான் என்பதாலும் (யோவா 12: 6), “இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக் கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?” என்று தலைமைக் குருவிடம் கேட்பதாலும், அவன் பணத்திற்காக அல்லது முப்பது வெள்ளிக் காசுக்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்தான் என்று உறுதியாகச் சொல்லலாம்.
முப்பது வெள்ளிக் காசு என்பது ஓர் அடிமையின் விலை (விப 21: 32). அந்த முப்பது வெள்ளிக்காசுக்காக, இயேசுவைச் சூழ்ச்சியாய்ப் பிடிக்கக் காத்துக்கொண்டிருந்த தலைமைக் குருக்களிடம் (மத் 26: 3-5) யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுக்கின்றான். இது ஒரு புறமிருக்கையில், இன்னொருபுறம் இயேசு, “உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்” என்றும், அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருக்கும்” என்கின்றான். இயேசு கடவுளின் திருவுளத்தின் படியே நடக்கின்றார்; ஆனால், அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசோ பணத்திற்கு ஆசைப்பட்டு, இறுதியில் அழிந்து போகின்றான். ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கடவுள் கைம்மாறு செய்வார் (உரோ 2: 6) என்பதுதான் எத்துணை ஆழமான வார்த்தைகள்.
சிந்தனைக்கு:
 பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர் (1 திமொ 1: 10).
 கடவுள் கொடுத்திருக்கும் இந்த அழகான வாழ்வில் சாபங்களை அல்ல, புண்ணியங்களைச் சேர்ப்போம்.
 நம்முடைய நண்பர்களைக் காட்டிக்கொடுக்கும் தவற்றினைச் செய்யாமல் இருப்போம்.
இறைவார்த்தை:
‘நன்மையை நாடுகள். தீமையைத் தேடாதீர்கள். அப்பொழுது படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார்’ (ஆமோ 5: 14) என்பார் ஆமோஸ் இறைவாக்கினர். நாம் தீமையை விட்டுவிட்டு நன்மையை நாடி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.