இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றைய திருப்பலி பதிலுரைப்பாடல் 30:5-ல், “அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு.”
மன்னிக்கும் தேவன் நம் மீதுள்ள பாவச்சுமைகளை நீக்கி தனது இரக்கப் பெருக்கத்தினால் நமக்கு முடிவில்லாத நித்திய வாழ்வை அளிக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றைய திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில், “நன்மையை நாடுங்கள், தீமையைத் தேடாதீர்கள்; அப்பொழுது படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார்.” என கூறப்பட்டுள்ளது.
ஆண்டவர் என்றும் நம்முடன் இருக்க நாம் நன்மைகளை மட்டும் நம் வாழ்வில் செய்யவதற்கு இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
இந்த புதிய வாரம் முழுவதும் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் திறம்பட செய்யவும், குறித்த காலத்துக்கு முன்னமே நமது வேலைகளை வெற்றிகரமாக முடிக்கவும், தூய ஆவியின் துணை வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
மக்களுக்கு செய்யும் சேவையை, இறைமகன் இயேசு கிறிஸ்துவுக்கு செய்யும் சேவையாக எண்ணி முழு அர்ப்பணிப்போடு அதில் ஈடுபட்டவரும், புனித வின்சென்ட் தெ பவுலுடன் இணைந்து எண்ணற்ற ஏழைகள் மற்றும் கைவிடப்பட்டவர்கள் வாழ்வில் ஒளியேற்றியவருமான இன்றைய புனிதர் லூயீஸ் டி மரில்லாக்கை திருச்சபைக்குத் தந்த இறைவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
தங்கள் குடும்பத்தினரால் மறக்கப்பட்டு பல ஆண்டுகளாக, வேண்டுதல்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உத்தரிய ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களும், இறைவனின் மோட்ச பாக்கியத்தை விரைவில் அடைய வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்

Comments are closed.