இத்தவக்காலத்தில் ஒளிக்கு நம்மைத் திறப்போம்

தவக்காலத்தின் நான்காம் ஞாயிறில் கொண்டாடப்படும், ‘மகிழ்வு ஞாயிறு’ திருப்பலிக் கொண்டாட்டம், எருசலேம் மேல் அன்புகொண்ட அனைவரும் அக்களித்து அகமகிழுங்கள், என்ற அழைப்புடன் துவங்கி, அதற்கான காரணத்தை அந்நாளின் நற்செய்தியில் தருகிறது என்று, மார்ச் 14, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார் (யோவா 3:16) என்பதே, ஒவ்வொரு கிறிஸ்தவ விசுவாசியின் இதயத்திற்கும் வழங்கப்படும் மகிழ்வுச் செய்தி, ஏனெனில், பலவீனமான, மற்றும் பாவம் நிறைந்த இவ்வுலகிற்கு தன் மகனையேக் கொடையாக வழங்கியதில் இறைவனின் அன்பு அதன்  சிகரத்தைத் தொட்டது என மூவேளை செப உரையைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெசியா வல்லமையுடன் வந்து இவ்வுலகைத் தீர்ப்பிடுவார் என நம்பிக்கைக் கொண்டிருந்த பரிசேயராகிய நிக்கதேமுவுக்கும் இயேசுவுக்கும் நடந்த உரையாடல் குறித்துப் பேசும் இன்றைய நற்செய்தியை மையப்டுத்தி தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைமகன் எவ்வாறு தன்னை மூன்றுவிதமாக நிக்கதேமுக்கு முன்வைத்தார் என்பதை விளக்கிக் கூறினார்.

மனுமகன் சிலுவையில் உயர்த்தப்படுவது, உலகின் மீட்புக்காக இறைமகன் அனுப்பப்பட்டது, உண்மைக்கு ஏற்ப வாழ்வோரையும், பொய்யுடன் இருப்போரையும் அடையாளம் காணும் ஒளி, ஆகிய மூன்றுத் தலைப்புகளில் தன் நண்பகல் மூவேளை செபவுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “கொள்ளிவாய்ப் பாம்பால் கடிபட்டவர், மோசே கம்பத்தில் பொருத்தி உயர்த்திய வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைத்தது போல் (எண் 21: 4-9), இயேசு சிலுவையில் உயர்த்தியதைக் குறித்து நம்பும் எவரும் குணம்பெற்று வாழ்வர் என உரைத்தார்.

மனிதகுலத்தை இறைவன் எவ்வளவு தூரம் அன்புகூர்ந்தார் என்றால், தன்  ஒரே மகனையே சாவுக்குக் கையளித்து, மனித குலத்திற்கு முடிவற்ற வாழ்வை கொடையாக வழங்க விரும்பினார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு இவ்வுலகிற்கு வந்தது இவ்வுலகை மீட்கவே என்பதைச்  சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகிற்கு இயேசு வந்தது, தீர்ப்பிட அல்ல, மாறாக, அதனை மீட்கவே எனவும் எடுத்துரைத்தார்.

மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர்… தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர்…. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள் (யோவா 3:19-21),  என தன்னை ஒளியாக வெளிப்படுத்தும் இயேசு, ஒளியிடம் வருபவர்கள் நன்மைத்தனங்களையே ஆற்றுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி, நாமும் அத்தகையச் செயல்களை இத்தவக்காலத்தில் ஆற்றவே அழைப்புப் பெற்றுள்ளோம், என விண்ணப்பித்தார்.

நன்மைத்தனம், மற்றும் கரிசனத்தை உள்ளடக்கிய  கருணையுடன் கூடிய இறையன்பிற்கு நம் உள்ளங்களைத் திறக்க உதவும் ஒப்புரவு எனும் அருளடையாளத்திற்கு நம் மனச்சான்றை திறப்பதன் வழியாக இத்தவக்காலத்தில் ஒளிக்கு நம்மைத் திறப்போம் என அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதன் வழியாக நாம் நம் வாழ்வை புதுப்பிக்க உதவும் இறை மன்னிப்பு குறித்து அகமகிழ்வோம் என மேலும் உரைத்தார்.

Comments are closed.