#வாசக மறையுரை (மார்ச் 12)
தவக்காலம் மூன்றாம் வாரம் வெள்ளிக்கிழமை
I ஓசேயா 14: 1-9
II மாற்கு 12: 28b-34
“அவர்கள்மேல் உளமார அன்புகூர்வேன்”
கடவுளுக்கு உன்மீது அன்பு இல்லாமல் இல்லை:
ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளைஞன் ஒருவன் திடீரென வேலையை இழந்தான். இதனால் மிகவும் மனமுடைந்துபோன அவன், தனக்கு அவ்வப்போது நல்லாலோசனைகளை வழங்கும் ஒரு வயதான அருள்பணியாளரிடம் சென்று, தான் வேலையை இழந்ததையும், கடவுளுக்குத் தன்மீது அன்பு இல்லை; அதனால்தான் தனக்கு இவ்வாறெல்லாம் நடக்கின்றது என்பதையும் சொல்லி அழுதுபுலம்பினான். அப்பொழுது அந்த அருள்பணியாளர் மிகவும் மெல்லிய குரலில் ஏதோ அவனிடம் சொன்னார். “சுவாமி! நீங்கள் சொன்னது எனக்குப் புரியவில்லை” என்று அவன் அவர் அருகில் சென்றான். அப்பொழுதும் அவர் ஏதோ மெல்லிய குரலில் சொன்னார். அதுவும் அவனுக்குக் கேட்கவில்லை. இதனால் அவன் தன் குரலைச் சற்று உயர்த்தி, “சுவாமி! நீங்கள் சொல்வது எனக்குச் சுத்தமாகக் கேட்கவில்லை. கொஞ்சம் சத்தமாகச் சொல்லுங்களேன்!” என்றான்.
அதற்கு அவர் அவனிடம், “கடவுளுக்கு உன்மீது அன்பு இல்லை, அவர் உன்னோடு பேசுவதில்லை என்று சொல்கின்றாய்! கடவுளுக்கு உன்மீது அன்பு இருக்கத்தான் செய்கின்றது; அவர் உன்னோடு பேசிக்கொண்டுதான் இருக்கின்றார். என்னவொரு வித்தியாசம் எனில், அவர் உன்னோடு மெல்லிய குரலில் பேசுகின்றார். ஆகவே, மெல்லிய குரலில் பேசும் அவரது குரல் உனக்கு நன்றாகக் கேட்கவேண்டும் என்றால், நீ அவரருகில் வந்துதான் ஆகவேண்டும்” என்றார்.
ஆம், கடவுள் நம்மீது பேரன்புகொண்டிருக்கின்றார். அதனால் நாம் அவரை அணுகிவருவதே சாலச்சிறந்த செயல். இதையே இந்த நிகழ்வும் இன்றைய இறைவார்த்தையும் எடுத்துக்கூறுகின்றன. அதைக்குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இஸ்ரயேல் மக்கள் ஆண்டவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளைகளைக் கடைப்பிக்காமல், வேற்றுதெய்வங்களை வழிபட்டு, அன்னியர்களால் நாடுகடத்தப்பட்டுப் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளானார்கள். இந்நிலையில் கடவுள் அவர்களிடம், “உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா; நீ உன் தீச்செயலால் வீழ்ச்சியுற்றாய்” என்கிறார். தொடர்ந்து அவர் அவர்களிடம், “… அவர்கள்மேல் உளமார அன்புகூர்வேன்… திராட்சைக் கொடிபோல் செழிப்படைவார்கள்; லெபனோனின் திராட்சை இரசம்போல் அவர்களது புகழ் விளங்கும்” என்கின்றார். இஸ்ரயேல் மக்கள் எவ்வளவுதான் தவறுசெய்தாலும், கடவுள் அவர்களது குற்றங்களை மன்னித்து, அவர்கள்மீது அன்புகூர்ந்தார். இத்தகைய பேரன்புகொண்ட தன்னிடம் இஸ்ரயேல் மக்கள் திரும்பிவரவேண்டும் என்பதுதான் கடவுளின் விருப்பம்.
நற்செய்தியில் மறைநூல்அறிஞருள் ஒருவர் இயேசுவிடம், “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது? எனக் கேட்கின்றபொழுது, இயேசு அவரிடம், இறையன்பும் பிறரன்பும்தான் முதன்மையான கட்டளை என்கிறார். எனவே, நாம் நம்மிடம் பேரன்புகொண்டிருக்கும் ஆண்டவரிடம் நாமும் அன்புகொண்டு வாழ்வோம்.
சிந்தனைக்கு:
கடவுள் நம்மீதுகொண்ட பேரன்போ நிலைசாயாது (எசா 54: 10).
நம்மீது பேரன்புகொண்டிருக்கும் கடவுளை நாம் முழுமையாக அன்புசெய்வதே சாலச்சிறந்தது.
ஆண்டவருக்கு அஞ்சி நடந்தால் ஆயுள் நீடிக்கும் (நீமொ 19: 23).
இறைவாக்கு:
‘உமது பேரன்பு வானளவு உயர்ந்தது’ (திபா 57: 10) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நம்மீது பேரன்புகொண்டிருக்கும் கடவுளிடம், நாமும் முழுமையான அன்புகொண்டு வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.