இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.

1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,

இன்றைய திருப்பலி முதல் வாசகம் எடுக்கப்பட்ட இணைச்சட்ட நூலில்,
“நீங்கள் என் கட்டளைகளை ஏற்று, பின்பற்றி நடங்கள்.” என்கிறார் ஆண்டவர்.

எல்லா காலங்களிலும் நாம் அனைவரும் ஆண்டவருக்குக் கீழ்படிந்து நடந்திட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,

இன்றைய திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.

ஆண்டவரின் கட்டளைகளை நமது வாழ்வில் எந்நாளும் கடைபிடிக்க இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,

இந்த நாள் முழுவதும் நம்முடைய பேச்சிலும், செய்கின்ற செயல்கள் அனைத்திலும் தூய ஆவியானவர் வழி நடத்திட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,

கத்தோலிக்கத்தை கைவிட மறுத்த காரணத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்கு மேடைக்கு இழுத்து செல்லப்பட்ட இயேசு சபை குருவும் , இன்றைய புனிதருமான ஜான் ஓகில்வீ தூக்கு மேடையில் கடைசியில் தான் மறைத்து வைத்திருந்த செபமாலையை கூட்டத்தில் விட்டெறிந்தார். அதை எம்பி பிடித்த அவரது எதிரி ஒருவன் கத்தோலிக்கனாக மாறி இறுதிவரை இறைபக்தியில் நிலைத்திருந்தான் என்பதை அறிகிறோம். மறைசாட்சியாக மரிக்கும் தருணத்தில் கூட ஒரு ஆன்மாவை மனமாற்றம் அடையச் செய்த இன்றைய புனிதர் ஜான் ஒகில்வீயிடமிருந்து தளராத விசுவாசத்தை நாம் கற்றுக் கொள்ள இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

இந்த தவக்காலத்தில் செய்யும் நாம் செய்யும் பக்தி முயற்சிகள் அனைத்தும், இறைவனுடைய இரக்கப்பெருக்கமும், அவரது அருளும் நமக்குக் கிடைத்திடும் வகையில் அமைந்திட இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

Comments are closed.