#வாசக மறையுரை (மார்ச் 09)
தவக்காலம் மூன்றாம் வாரம்
திங்கட்கிழமை
திருப்பாடல் 42: 1,2; 43: 3-4 (42: 2a)
“கலைமானைப்போல் என் நெஞ்சம்…”
குழந்தை இயேசுவைக் கண்டுகொண்ட காகம்:
பெத்லகேமில் இயேசு பிறந்திருக்கின்றார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட காட்டுவிலங்குகளும் பறவைகளும் அவரைப் பார்க்க விரும்பின. ஆகவே அவை ஒரு குறிப்பிட்ட நாளை ஒதுக்கி, அந்தநாளில் இயேசுவைப் பார்க்க முடிவுசெய்தன. அதேநேரத்தில் காகம் கறுப்பாக இருப்பதாலும், அதன்குரல் சகிக்கமுடியாதவாறு இருப்பதாலும், அதைத் தங்களோடு அழைத்துக்கொண்டு போகவேண்டாம் என்றும் அவை முடிவுசெய்தன. குறிப்பிட்ட நாளும் வந்தது. காட்டிலிருந்த விலங்குகளும் பறவைகளும் காகத்தை மட்டும் விட்டுவிட்டு இயேசுவைப் பார்க்கக் கிளம்பிப்போயின. காகத்திற்கு இயேசுவைப் பார்க்கவேண்டும் என்று விருப்பமாக இருந்தது. இருந்தாலும் எல்லாராலும் புறக்கணிக்கப்பட்டதால் அது மிகவும் வருத்தத்தோடு இருந்தது. அந்நேரத்தில் இயேசுவைக் கொல்வதற்கு வழிதேடிய ஏரோதின் படைவீரர்கள் அவரை எப்படிக் கொல்லலாம் என்பதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். இதைக்கேட்ட காகம் அதிர்ந்துபோனது. இயேசுவை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று பெத்லகேமிற்கு வேகமாகப் பறந்துசென்று, செய்தியை இயேசுவின் பெற்றோரிடம் சொன்னது. இதனால் இயேசுவின் பெற்றோர் காகத்தை இயேசுவைப் பார்ப்பதற்கும் அவரை முத்தமிடவும் அனுமதித்தனர்.
இதற்குப் பிறகு காட்டிற்கு வந்த காகம் முன்பு அமர்ந்திருந்த மரத்தில் அமர்ந்துகொண்டது. சிறிதுநேரத்தில் இயேசுவைப் பார்க்கச் சென்ற விலங்குகளும் பறவைகளும் ஏமாற்றத்தோடு திரும்பி வந்தன. அவற்றிடம் நிகழ்ந்தவற்றையெல்லாம் மிகுந்த உற்சாகத்தோடு காகம் பேசிக்கொண்டிருந்தபொழுது, வானத்திலிருந்து இயேசு, “நீங்கள் காகத்தைப் புறக்கணித்ததால்தான், அதற்கு என் தரிசனம் கிடைத்தது. எப்பொழுது நீங்கள் யாரையும் புறக்கணியாமல் இருக்கின்றீர்களோ, அப்பொழுது எனது தரிசனம் உங்களுக்குக் கிடைக்கும்” என்று சொல்லிவிட்டு மறைந்தார்.
ஆம், காட்டிலிருந்த விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இயேசுவைக் காண விரும்பினாலும், அவை காகத்தைப் புறக்கணித்ததால், அவற்றுக்கு இயேசுவின் தரிசனம் கிடைக்கவில்லை. நல்ல மனத்தோடு இயேசுவைத் தேடிய காகத்திற்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைத்தது. நாம் இறைவனைத் தேடவேண்டும், அதுவும் நல்ல மனத்தோடு தேடவேண்டும் என்பதை இந்தக் கற்பனைக்கதையும், இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலும் எடுத்துக்கூறுகின்றன. அது குறித்துச் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி
இன்று நாம் பாடக்கேட்ட திருப்பாடல்கள் 42, 43 ஆகிய இரண்டு திருப்பாடல்களும் ஒரு காலத்தில் ஒன்றாய்த்தான் இருந்தன, பின்னர் ஏதோ ஒரு காரணத்தால் அவை இரண்டாகப் பிரிக்கப்பட்டன என்று கூறுவர். எப்படி இருந்தாலும், இத்திருப்பாடல்களைப்ப் பாடியவர் அன்னிய நிலத்தில் இருந்த ஒரு லேவியர் என்பதும், கலைமான் நீரோடைக்காக ஏங்கித் தவிப்பது போன்று அவரது நெஞ்சம் இறைவனைப் பார்க்க ஏங்கித் தவிக்கின்றது என்பதும் தெரிவிக்கின்றது. கடவுளைக் காண வேண்டும் எனில், தூய்மையான உள்ளத்தோராய் இருப்பது அவசியம் அல்லவா? (மத் 5: 80). நாம் தூய உள்ளத்தவராக இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
ஒவ்வொருவரும் இறைவனைக் காண ஆவல்கொள்ளவேண்டும்
தேடுவோர் கண்டடைகின்றனர் (மத் 7: 7)
ஆண்டவரைத் தேடினால் வாழ்வடைவோம் (ஆமோ 5: 4)
இறைவாக்கு:
‘உம்மைச் சரணடையாமல், என் ஆன்மா அமைதி கொள்ளாது’ என்பார் புனித அகுஸ்தின். எனவே, நாம் ஆண்டவரை தேடி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.