போர்களால் உயிரிழந்தவர்களுக்கு திருத்தந்தை இறைவேண்டல்
போரால் தங்கள் வாழ்வு பறிக்கப்பட்ட மக்களை நினைவுகூர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக்கின் மோசூல் நகர் Hosh al-Bieaa மையத்தில் நடந்த செப வழிபாட்டில் இறைவனை நோக்கி எழுப்பிய இறைவேண்டலின் சுருக்கம்:
ஈராக்கிலும், மத்தியக்கிழக்கு நாடுகள் அனைத்திலும், போரில் பலியான அனைவருக்காகவும், இந்த மோசூல் நகரில் ஒன்றிணைந்து இறைவேண்டல்களை மேற்கொள்வதற்கு முன்னர், சில எண்ணங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
வாழ்வின் கடவுளாக இறைவன் இருக்கிறார் என்பது உண்மையெனில், அவர் பெயரால், நம் சகோதரர்களை, சகோதரிகளை, கொல்வது தவறு.
அமைதியின் கடவுளாக இறைவன் இருக்கும் நிலையில், அவர் பெயரால், போர்களை நடத்துவது தவறு.
அன்பின் கடவுளாக இறைவன் இருக்கும்போது, அவர் பெயரால், நம் சகோதரர், சகோதரிகளோடு பகைமை பாராட்டுவது தவறு.
போரால் பலியான அனைவருக்காகவும் இப்போது இறைவேண்டலில் இணைவோம். முடிவற்ற வாழ்வையும், நீடித்த அமைதியையும் இவர்களுக்கு வழங்கும் எல்லா வல்ல இறைவன், தன் தந்தைக்குரிய அரவணைப்பில் இவர்களை வரவேற்பாராக. நமக்காகவும் நாம் இறைவேண்டல் செய்வோம். நம் மத பாரம்பரியங்கள் வெவ்வேறாக இருப்பினும், கடவுளின் பார்வையில நாம் அனைவரும் சகோதரர்கள், சகோதரிகள் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டு, இணக்க வாழ்விலும், அமைதியிலும் தொடர்ந்து வாழ்வோம்.
இறைவேண்டல்:
அனைத்திற்கும் மேலான இறைவா, அனைத்துக் காலங்களின் ஆண்டவரே, அன்பினால் இவ்வுலகை படைத்தீர். உம் படைப்புகள்மீது உம் ஆசீரை தொடர்ந்து பொழிவதை ஒருபோதும் நீர் நிறுத்தியதில்லை. மரணம், துயரம் எனும் பெருங்கடலைத் தாண்டியும், வன்முறை, அநீதி, நியாயமற்ற இலாப ஈட்டல் போன்றவைகளுக்கான மனிதனின் சோதனைகளைத் தாண்டியும், உம் புதல்வர், புதல்வியரை, தந்தைக்குரிய பரிவன்பினால் உடனிருந்து வழி நடத்துகிறீர். ஆனால் நாங்களோ, உம் கொடைகளை ஏற்க மறுத்து, உலக பொருட்கள் மீதான ஆசையால் கவரப்பட்டு, நீர் எமக்கு அமைதி மற்றும் இணைக்க வாழ்வு குறித்து வழங்கியுள்ள ஆலோசனைகளை ஒதுக்கித் தள்ளியுள்ளோம்.
நாங்கள் எங்களைப்பற்றியும், எங்கள் சுயநல எண்ணங்கள் குறித்தும் அதிகக் கவலைப்பட்டுள்ளோம். உம்மிடமும், மற்றவர்களுடனும், அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டு, அமைதிக்கு கதவுகளை சாத்தியுள்ளோம்.
அவர்கள் செய்யும் தீமைகள் என் முன்னே வந்து குவிகின்றன (யோனா 1:2), என இறைவாக்கினர் யோனாவுக்கு நினிவே குறித்து உரைக்கப்பட்ட வார்த்தைகள் மீண்டும் ஒலித்தன. நாம் தூய உள்ளத்தோடு கைகளை உயர்த்தி இறைவேண்டல் செய்யவில்லை (1 திமோ 2:8), ஆனால், மீண்டுமொருமுறை, அப்பாவிகளின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து விண்ணை நோக்கிக் கதறியது (தொ.நூ 4:10). நினிவே நகர மக்கள் உங்கள் இறைவாக்கினரின் குரலுக்கு செவிமடுத்து, பரிகாரங்கள் வழியாக மீட்பைக் கண்டுகொண்டதை யோனா நூலில் காண்கிறோம்.
Comments are closed.