நீங்கள் போய் முதலில் உங்கள் சகோதரர் சகோதரிகளிடம் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 20-26
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்லுகிறேன்: “கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்” என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ ‘முட்டாளே’ என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; ‘அறிவிலியே’ என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.
ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலி பீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.
உங்கள் எதிரி உங்களை நீதி மன்றத்துக்குக் கூட்டிச்செல்லும்போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————–
தவக்காலம் முதல் வாரம் வெள்ளிக்கிழமை
I எசேக்கியேல் 18: 21-28
II மத்தேயு 5: 20-26
குற்றங்களின்று விலகினால் வாழ்வது உறுதி
திருடன் மனமாறுதல்:
பிளேடு வைத்துத் திருடுவதில் கைதேர்ந்த பிக்பாக்கெட் திருடன் ஒருவன் இருந்தான். இவன் திருந்திநடக்க முடிவுசெய்தான். அதற்காக இவன் பலரிடம் ஆலோசனை கேட்டான். யாரும் இவனுக்குச் சரியான ஆலோசனை சொல்லாததால், இவன் தனக்குத் தெரிந்த ஒரு காவல்துறை அதிகாரியிமிடமே ஆலோசனை கேட்டான். அவரோ இவன் திருந்தி நடக்க முடிவுசெய்துவிட்டான் என்பதை அறிந்து மகிழ்ந்து, “உனக்குத் திருடவேண்டும் என்ற எண்ணம் வருகின்றபொழுது, உன்னுடைய ஆள்காட்டி விரலை எடுத்து, உன் நெற்றியில் வைத்துக்கொள், அது போதும்” என்றார். அவனும் அதற்குச் சரியென்று சொல்லி, விடை பெற்றான்.
ஓரிரு மாதங்கள் கடந்திருக்கும். தனக்கு ஆலோசனை சொன்ன காவல்துறை அதிகாரியிடம் சென்ற இவன், “ஐயா! நான் திருந்திவிட்டேன். இப்பொழுது எனக்குத் திருடுகின்ற எண்ணமே வருவதில்லை” என்றார். இதைக்கேட்டுப் பெரிதும் மகிழ்ந்த காவல்துறை அதிகாரி இவனைப் பாராட்டினார். அப்பொழுது இவன் அவரிடம், “எனக்குத் திருடவேண்டும் என்ற எண்ணம் வருகின்றபொழுது, நீங்கள் ஏன் என் ஆள்காட்டி விரலையெடுத்து நெற்றியில் வைக்கச் சொன்னீர்கள்” என்றான். அதற்கு அவர், “திருடவேண்டும் என்ற எண்ணம் வருகின்றபொழுது உடனே உன்னுடைய ஆள்காட்டி விரலும் கட்டை விரலும் பிளேடைத் தேடும்; ஆனால் நீ உன் ஆள்காட்டி விரலை உன் நெற்றியில் வைக்கும்பட்சத்தில் பிளேடைத் தேடுவதற்கான வாய்ப்பிருக்காது. அதனால்தான் அவ்வாறு சொன்னேன்” என்றார்.
பெரிய பிக்பாக்கெட் திருடனாக இருந்தவன், நல்லவனாக மாறியது, இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறும், “…..தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகிவிட்டால், அவர்கள் வாழ்வது உறுதி என்ற வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துகின்றது. அது குறித்துச் சிந்திப்போம்.
விவிலியப் பின்னணி:
கடவுளின் விருப்பம் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறவேண்டும் என்பதே ஆகும். (யோவா 3: 16; 1 திமொ 2: 14); இதற்காகவே அவர் பொறுமையோடு இருக்கின்றார். கடவுள் பொறுமையாக இருக்கின்றார் எனில், தீயவர் தம் தீயவழிகளை விட்டுவிட்டு, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடிக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் தங்கள் தீய வழிகளை விட்டுவிட்டு நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் அவர்கள் வாழ்வடைவர் என்று இன்றைய முதல்வாசகத்தில் கூறுகின்றார் இறைவாக்கினர் எசேக்கியேல். இங்கு தீய வழி என்பதை நற்செய்தியில் இயேசு சொல்லும் சினம்கொள்ளுதல் ஆகியவற்றோடு இணைத்துப் பார்த்துக் கொள்ளலாம். ஆகவே, சினம், இன்னபிற தீமைகளை விட்டு ஒருவர் விலகினால் அவர் நிச்சயம் வாழ்வடைவார்.
சிந்தனைக்கு:
 தீமையைத் தேடாமல், நன்மையை தேடினால் வாழ்வடைவது உறுதி (ஆமோ 5: 14).
 சினம் நமக்கும் சகமனிதர்க்கும் இடையே உள்ள இடைவெளியை மட்டுமல்ல, நமக்கும் கடவுளுக்கும் உள்ள இடைவெளியையும் மிகுதியாக்குகின்றது.
 ஆண்டவர் எவருடைய சாவையும் விரும்புவதில்லை
இறைவாக்கு:
‘சினம் கொள்ளவேண்டாம். அன்பையும் மன்னிப்பையும் கொண்டு வாழுங்கள்’ என்பார் பாட்ரிசியா மேயர் என்ற எழுத்தாளர். எனவே, நாம் சினம் போன்ற தீமைகளைத் தவிர்த்து, அன்புகொண்டு வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
– மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
May be an image of 4 people and text that says 'நற்செய்தி வாசகம் "நீங்கள் போய் முதலில் உங்கள் சகோதரர் சகோதரிகளிடம் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்." மத்தேயு 5: 20-26'
Kumulamunai Nachchikuda Parish and 4 others
Like

Comment
Comments

பிப்ரவரி 26 : நற்செய்தி வாசகம்
நீங்கள் போய் முதலில் உங்கள் சகோதரர் சகோதரிகளிடம் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 20-26…

See More

Kumulamunai Nachchikuda Parish and 29 others

1 Comment

1 Share

Like

Share

Comments

Aravinth Devasagayam Gilbert turned off commenting for this post.