5,00,000த்தை நினைவுகூருகிறோம்: கோவிட்-19 நினைவு நிகழ்வு

அமெரிக்க ஐக்கிய நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றின் விளைவாக இறந்தோரின் எண்ணிக்கை, 5,00,000த்தைத் தாண்டியதையடுத்து, நடைபெற்ற ஒரு வழிபாட்டு நிகழ்வில் வாஷிங்டன் பேராயர் கர்தினால் வில்டன் கிரகரி அவர்கள் சிறப்பான செபம் ஒன்றை மேற்கொண்டார்.

“5,00,000த்தை நினைவுகூருகிறோம்: கோவிட்-19 தேசிய நினைவு நிகழ்வு” என்ற பெயரில் CNN செய்தி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த வழிபாட்டு நிகழ்வில் இறைவேண்டல் செய்த கர்தினால் கிரகரி அவர்கள், உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு சக்தியையும், ஆறுதலையும் அளித்தருளும், தங்களைவிட்டு பிரிந்து சென்றோரின் நினைவு, ஓர் ஆசீராக தங்கட்டும் என்று கூறினார்.

பிப்ரவரி 22ம் தேதி நிலவரப்படி, அமெரிக்க ஐக்கிய நாட்டில், 2 கோடியே 82 இலட்சம் பேர் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டனர் என்பதும், இவர்களில், பிப்ரவரி 22, கடந்த திங்களன்று, 1,200க்கும் அதிகமானோர் உயிரிழந்ததையடுத்து, அந்நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 5,00,103 ஆக உயர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கன.

இனம், மதம், வயது, சமுதாய நிலை, என்ற அனைத்து பிரிவுகளையும் தாண்டி, இந்தப் பெருந்தொற்று மக்களைத் தாக்கியுள்ளதுபோல், இந்த தொற்றிலிருந்து நம்மைக் காக்கக்கூடிய தடுப்பு மருந்தும் அனைத்துப் பிரிவுகளையும் தாண்டி அனைவரையும் அடைய வேண்டிக்கொள்வோம் என்று கர்தினால் கிரகரி அவர்கள் இந்த வழிபாட்டில் கூறினார்.

மேலும், இந்த துயர நிகழ்வையொட்டி, அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களுக்கு, தொலைகாட்சி வழியே உரை வழங்கிய அரசுத்தலைவர் ஜோ பைடன் அவர்கள், இந்த துயர் நிறைந்த மைல்கல் நம் உள்ளங்களில் ஆழமாகப் பதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இறந்தோரை நாம் புள்ளிவிவரங்களை வழங்கும் எண்ணிக்கையாக நினைத்துப் பார்க்காமல், அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற மரியாதையை வழங்குவோம் என்றும், இந்த மரியாதை, உயிரிழந்தோர் விட்டுச் சென்றுள்ளவர்களுக்கு நாம் காட்டும் அக்கரையில் வெளிப்படவேண்டும் என்றும் அரசுத்தலைவர் பைடன் அவர்கள், தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

அரசுத்தலைவர் ஜோ பைடன் அவர்கள் பொறுப்பேற்ற நாளான சனவரி 20ம் தேதிக்கு முன்னதாக, சனவரி 19ம் தேதி நடைபெற்ற மாலை வழிபாடு ஒன்றை, கர்தினால் கிரகரி அவர்கள் முன்னின்று நடத்திய வேளையில், அன்றைய நிலவரப்படி, அமெரிக்க ஐக்கிய நாட்டில், பெருந்தொற்றினால் இறந்தோரின் எண்ணிக்கை 4,00,000த்தைத் தாண்டியிருந்தது என்பதும், சனவரி 19க்கும், பிப்ரவரி 22க்கும் இடைப்பட்ட ஒரு மாத கால அளவில், கூடுதலாக, ஒரு இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும், நினைவில் கொள்ளவேண்டியவை.

Comments are closed.