உலக சமுதாய நீதி நாள்

தவக்காலத்தையும், உலக சமுதாய நீதி நாளையும் மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 20, இச்சனிக்கிழமையன்று, தவக்காலம் (#LentenSeason), உலக சமுதாய நீதி நாள் (#WorldDayOfSocialJustice) ஆகிய இரு ‘ஹாஷ்டாக்’குகளுடன், இரு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார்.

தவக்காலம் பற்றி திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “இத்தவக்காலத்தில், கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்ட உண்மையை ஏற்பதும், அதை வாழ்வதும் என்பது, முதலில், ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு திருஅவை வழங்கும் இறைவார்த்தைக்கு, நம் இதயங்களைத் திறப்பதாகும்” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

உலக சமுதாய நீதி நாள் பற்றி, திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “ஆண்டவரே, எம் கடவுளே, கிறிஸ்தவர்களாகிய நாங்கள் நற்செய்தியை வாழ்வதற்கும், ஒவ்வொரு மனிதரிலும் கிறிஸ்துவை ஏற்கவும் வரம்தாரும். அதனால், நம் உலகில் கைவிடப்பட்டோர், மற்றும், மறக்கப்பட்டோரின் துன்பங்களில், அவர் சிலுவையில் அறையப்பட்டதையும், புதிய வாழ்வை அமைக்கும் ஒவ்வொரு சகோதரர், சகோதரியில் அவர் உயிர்ப்பதையும் காண இயலும்” என்ற சொற்கள் பதிவாகியிருந்தன.

“டிஜிட்டல் பொருளாதாரத்தில் சமுதாய நீதிக்கு ஓர் அழைப்பு” என்ற தலைப்பில், பிப்ரவரி 20, இச்சனிக்கிழமையன்று, உலக சமுதாய நீதி நாள், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் கடைப்பிடிக்கப்பட்டது.

2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை கொண்டுவந்த தீர்மானத்தின்படி, ஒவ்வோர் ஆண்டும், பிப்ரவரி மாதம் 20ம் தேதி, “உலக சமுதாய நீதி நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Comments are closed.