தவக் காலத்தின் தியானங்கள் முதல் வாரம் பாகம்-2

ஆத்துமத்திலுள்ள பாவ துர்க்குணங்களை நீக்குவதற்கு உதவியான தியானங்கள்
முதல் நாள் – முதல் தியானம் அறநெறி அடிப்படை சத்தியம்
மனிதன் கதி
முதல் பாகம்.
உலகத்தில் மனிதனுடைய நோக்கம் இன்னதென்று தெளிவாய் நாம் அறியும்படியாக இதில் மூன்று விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். ஆதிமுதலில் நாம் அறிய வேண்டியது : நாம் எங்கேயிருந்து வருகிறோம்? அதன்பின் உலகில் நாம் இருக்கும் போது யாருக்கு சொந்தமானவர்கள்? மூன்றாவது நாம் எதற்காக இங்கே இருக்கிறோம்?
இந்த மூன்று கேள்விகளுக்கும் மறுமொழி ஏதென்றால் :
(1) நாம் சர்வேசுரனிடத்திலிருந்து வருகிறோம்; ஆகவே சர்வேசுரனே ஆதிகாரணமானவர்.
(2) நாம் சர்வேசுரனுக்குச் சொந்தம்; ஆகவே சர்வேசுரனே நமக்கு எஜமான்.
(3) நாம் சர்வேசுரனுக்காக இருக்கிறோம்; ஆகவே சர்வேசுரனே நமக்கு கடைசிக்கதி.
சர்வேசுரனே நமக்கு ஆதியும் நடுவும் முடிவுமானவர். அவரிடத்திலிருந்து நாம் வந்து, அவருக்கு ஊழியம் செய்து, கடைசியில் அவரிடம் சேர வேண்டியவர்கள். சர்வேசுரனே நமக்கு ஆதிகாரணமான சிருஷ்டிகர். அவரே நம்மை நடத்தி ஆளும் ஆண்டவர். அவரே நமக்கு நித்திய பாக்கிய சம்பாவனையாயிருப்பவர்.
நாம் சர்வேசுரனிடத்திலிருந்து வருகிறோம். அவரே நமக்கு ஆதிகாரணமான சிருஷ்டிகர் என்ற இந்த சத்தியத்தை யார் மறுப்பார்? இதற்கு நூறு வருஷங்களுக்கு முன் நீங்கள் எங்கே இருந்தீர்கள்? இந்த விஸ்தாரமான பூமியும், வானத்தில் பிரகாசிக்கும் சூரிய சந்திர நட்சத் திரங்களும் அப்போது உண்டாயிருந்தன. நீங்களோ, எங்கே இருந்தீர்கள்? உங்களைப் பற்றி எவனும் பேசவுமில்லை , நினைக்கவும் மில்லை. உங்கள் ஊரும் பேரும் ஒருவருக்கும் தெரியாது. உங்கள் காலில் மிதிபடும் அந்த மண் நூறு வருஷங்களுக்கு முன்னே ஓர் பொருளாயிருந்தது. நீங்களோ, அது முதலாயில்லை . ஆ மனிதன் எவ்வளவு அற்பமான பொருள்!
இப்படி நூறு வருஷங்களுக்கு முன் சுத்த சூனியமாய் ஒன்று மில்லாதிருந்த நீங்கள் இப்போது உயிர் பெற்று இருக்கிறீர்கள். இருக்கிறீர்களென்றால், உங்கள் காலில் மிதிபடும் அசைவற்ற அந்த மண்ணைப் போலவோ? அல்லது உணர்வற்ற மரக்கட்டையைப் போலவோ? அல்லது புத்தியில்லாத மிருகத்தைப் போலவோ? அல்ல, அல்ல. உயிரும், உணர்ச்சியும், அறிவும், புத்தியும் உள்ள மனிதர் களாக நீங்கள் இப்போது இருக்கிறீர்கள். மனிதன், இந்த விஸ்தாரமான பூமியில், கண்ணுக்குப் புலப்படும் ஜீவகோடி ராசிகளுக்குள் மகா மேன்மை பெற்றவன். அதிசய மனோதத்துவ இலட்சணங்களோடு கூடிய வித்தியாசமும் புலன்கள் அமையப்பெற்ற மனிதப் பிறவி. கண் காது வாய் முதலிய ஐம்புலன்களால் பார்க்கவும், கேட்கவும், பேசவும் சக்தியுள்ளவன். பொருட்களின் இயல்பும் குணமும் ஒன்றுக்கொன்றுள்ள சம்பந்தமும் பகுத்தறியும் புத்தியையும், நுண் ணறிவையும், வேண்டும் வேண்டாம் என்று தன் இஷ்டப்படி நடக்க சக்தி வாய்ந்த மனச்சுதந்திரத்தையும் இயற்கையாகப் பெற்றவன்
இவ்வித சிறந்த மனோதத்துவ இலட்சணங்களால் அலங்காரம் பெற்று, உலகத்தில் வாழும் சகல ஜீவகோடிகளுக்கெல்லாம் அதிபதியாய் நிமிர்ந்த முகத்தோடும், இராஜ கெளரவ மேன்மையோடும் நடந்து சுதந்திரமாய்த் திரியும் மனிதனாகிற நீ எங்கேயிருந்து இவ்வித இலட்சணங்களை அலங்கார அணியாய்ப் பூண்டு வந்தாய்? தற்செயலாய் காட்டில் புல் முளைப்பது போல் நீயும் முளைத்துத் தோன்றினாயோ? அல்ல. தற்செயல் என்பது அர்த்த சாயமற்ற வார்த்தை. ஒரு புல்லும் தானே வித்தின்றி முளையாது வித்தில்லா நடைமுறை மேலுமில்லை கீழுமில்லை என்பது சாஸ்திரிய சத்திய வாக்கியம். உன் தாய் தந்தை உன்னை மனிதனாய் சிருஷ்டித்தார்களோ? சிருஷ்டிக்கும் தொழில் சர்வேசுரனைச் சார்ந்தது; மனிதனால் எதையும் சிருஷ்டிக்க இயலாது. உருவமற்ற ஆத்துமத்தை தாய் தகப்பன் உனக்குக் கொடுக்கவில்லை. அல்லது நீயே உன்னை உருவாக்கி உலகில் வந்தாயோ? ஒன்றுமில்லாமையா யிருந்த நீ, எப்படி உன்னை உருவாக்க முடியும்? ஒன்றுமில்லாமையிலிருந்து ஒன்றும் உண்டாகாது என்பதும் சத்திய வாக்கியம்.
இவ்விதம் தற்செயலாய் நீ வராமலும், தாய் தந்தையால் மனிதனாகாமலும், நீயே உன்னை உருவாக்கக் கூடாமலுமிருக்க, எப்படி நீ உலகத்தில் வந்திருக்கிறாய்? இதற்கு ஒரே ஒரு மறுமொழிதான் உண்டு. சர்வேசுரனே உனக்கு ஆதி துவக்கமானவர். அவரே உன்னை மனிதனாய் உருவாக்கி சிருஷ்டித்து உலகத்திலே அனுப்பினவர். சர்வேசுரன் ஒருவரே உனக்கும் உலகத்திலுள்ள சகல ஜீவப் பிராணிகளுக்கும் ஆதிகாரணம். சர்வேசுரன் அல்லாத சகலமும் சர்வேசுரனிடத்திலிருந்து வருகின்றன. சர்வேசுரன் ஒருவர் மாத்திரம் தம்மில் தாமாயிருப்பவர்.
ஆமென்

Comments are closed.