08 பிப்ரவரி நற்செய்தி வாசகம்

இயேசுவைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 53-56
இயேசுவும் அவருடைய சீடர்களும் மறு கரைக்குச் சென்று கெனசரேத்துப் பகுதியை அடைந்து படகைக் கட்டி நிறுத்தினார்கள். அவர்கள் படகை விட்டு இறங்கிய உடனே, மக்கள் இயேசுவை இன்னார் என்று கண்டுணர்ந்து, அச்சுற்றுப்பகுதி எங்கும் ஓடிச் சென்று, அவர் இருப்பதாகக் கேள்விப்பட்ட இடங்களுக்கெல்லாம் நோயாளர்களைப் படுக்கையில் கொண்டு வரத் தொடங்கினார்கள். மேலும் அவர் சென்ற ஊர்கள், நகர்கள், பட்டிகள் அனைத்திலும் உடல் நலம் குன்றியோரைப் பொது இடங்களில் கிடத்தி, அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள். அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————————————–
I தொடக்க நூல் 1: 1-19
II மாற்கு 6: 53-56
“நல்லது என்று கண்டார்”
சிட்டுக்குருவிகளின் முக்கியத்துவத்தை உணராதவர்கள்:
டோனி டி மெல்லோ சொல்லக்கூடிய நிகழ்வு இது. ஒரு நாட்டில் விளைநிலங்களில் இருக்கும் தானியங்களை எல்லாம் சிட்டுக்குருவிகள் நாசம் செய்கின்றன என்று வேளாண் துறையைச் சார்ந்தவர்கள் அதனை விரட்டியடித்தார்கள். இதைத் தொடர்ந்து செடிகளில் பூச்சிகள் தோன்றி, அவற்றை நாசம் செய்தன. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டது.
இதை அறிந்த அரசாங்கம் பூச்சிகளிடமிருந்து பயிர்களைக் காப்பாற்ற அவற்றிக்குப் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்துவிட்டது. இதனால் பூச்சிகள் ஒழிந்தனவே ஒழிய, சத்தான உணவுப் பொருள்கள் கிடைக்கவில்லை. இதனால் வேளாண்துறை அதிகாரிகள் சிட்டுக்குருவிகள், செடிகளில் உள்ள பூச்சிகளைத் தின்று, செடிகள் நன்றாக வளர்வதற்கு உறுதுணையாக இருக்கின்றன என்பதுகூடத் தெரியாமல் அவற்றைத் துரத்திவிட்டோமே!’ என்று மிகவும் வேதனைப்பட்டார்கள்
கடவுள் தாம் படைத்த ஒவ்வொன்றையும் ஏதோவொரு காரணத்திற்காகவும், நல்லதற்காகவும்தான் படைத்தார். இந்த உண்மையை தெரியாமல்தான் நாம் அவற்றை அழித்தும் மாசுபடுத்திக்கொண்டும் இருக்கின்றோம். இத்தகைய சூழலில் இன்று நாம் வாசிக்கக்கேட்ட முதல் வாசகத்தில், கடவுள் தாம் படைத்த அனைத்தையும் நல்லதெனக் கண்டார் என்று வாசிகின்றோம். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
தொடக்க நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் ‘ஒளி தோன்றுக’, ‘வானம் தோன்றுக’, ‘ஒளிப்பிழம்புகள் தோன்றுக’ என்றதும், அவை தோன்றுவதையும், அதன் பிறகு அவர் தான் படைத்த அனைத்தும் நல்லது எனக் கண்டார் என்றும் வாசிக்கின்றோம்.
ஆண்டவராகிய கடவுள் நல்லவர் – அவர் ஒருவரே நல்லவர் – (மத் 19: 27). அப்படியிருக்கையில் அவரிடமிருந்து நல்லது மட்டுமே வரும். இன்றைய நற்செய்தி இயேசு கிறிஸ்து பல்வேறு பிணிகளால் வருந்தியவர்களை நலப்படுத்தியதன் மூலம், தாம் சென்ற இடங்களிலெல்லாம் நன்மையே செய்துகொண்டு சென்றதை (திப 10: 38) இந்தப் பின்னணியில்தான் வைத்துப் பார்க்கவேண்டும். எனவே, நல்லதையே படைத்து, நமக்களித்திருக்கும் கடவுளுக்கு நாம் எந்நாளும் நன்றியுள்ளவர்களாய் இருப்போம். அவற்றை நல்லவிதமாய்ப் பேணிப் பராமரிப்போம்.
சிந்தனைக்கு:
 கடவுள் நல்லதையே படைத்து, நமக்களித்திருக்கும்போது, நாம் அதைப் பாழ்படுத்துவதும் மாசுபடுத்துவதும் எந்த விதத்தில் நியாயம்?
 இயற்கையின் விதிகள் நீதியானவை; ஆனால், அஞ்சத் தக்கவை – லாங்ஃபெல்லோ
 இயற்கைக்குக் கீழ்ப்படிவதன் மூலம், அதை ஆட்சி செய்ய முடியும் – பேகன்.
இறைவாக்கு:
‘ஆண்டவரே அனைத்தையும் படைத்துள்ளார் (சீஞா 43: 33) என்கிறது சீராக்கின் ஞானநூல். எனவே, அனைத்தையும் நல்லதாகப் படைத்து, நமக்களித்திருக்கும் ஆண்டவருக்கு நன்றியுள்ளவர்களாய், அவர் வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.