சனவரி 26 : நற்செய்தி வாசகம்

மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை.
புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10;1-9
இதற்குப்பின்பு ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார். அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது; “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப்பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், “இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!” என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே; வீடுவீடாய்ச் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————-
தூய தீமோத்தேயு, தீத்து விழா (ஜனவரி 26)
நிகழ்வு
பவுலடியாரின் அன்பிற்குரிய உடன்பணியாளராகிய தூய தீமோத்தேயு எபேசு நகரில் ஆயராக இருந்தபோது, “ஆண்டவர் இயேசு ஒருவரே மெசியா, அவரே உண்மையான கடவுள்” என்று எல்லா மக்களுக்கும் எடுத்துத்துரைத்து வந்தார். கிபி. 97 ஆம் ஆண்டில் ஒருநாள் எபேசு நகரில் போலி தெய்வங்களை வழிபடுவோர் சிலர் தங்களுடைய தெய்வங்களுக்கு Feast of Katakogigian எனப்படும் விழா எடுத்துக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். இதை அறிந்த திமோத்தேயு அங்கு சென்று, ஆண்டவர் இயேசுவே உண்மையான கடவுள் என மிகத்துணிவோடு எடுத்துரைத்தார். அவருடைய போதனையைக் கேட்ட மக்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தார்கள், இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்கள். இது பிடிக்காத கயவர்கள் சிலர் அவரைக் கல்லால் எரிந்து கொன்று போட்டார்கள்.
வாழ்க்கை வரலாறு
தூய தீமோத்தேயு
திமோத்தேயு பவுலடியாரால் ‘என் அன்பிற்குரிய மகன்’ என்றே அழைக்கப்படுகின்றார் (1திமோ 1:1). இவர் லிஸ்திராவில் வாழ்ந்த ஒரு புறவினத்து தந்தைக்கும் யூத தாய்க்கும் மகனாகப் பிறந்தார். கி.பி. 47 ஆம் ஆண்டு பவுலடியார் தன்னுடைய முதல் திருத்தூது பயணத்தை மேற்கொண்டபோது, அவரால் திருமுழுக்குப் பெற்றார். அதன்பிறகு இவர் தன்னுடைய தாய் ஐனிகேயாள் என்பவராலும், இவருடைய பாட்டி லோவிசாள் என்பவராலும் நம்பிக்கையில் உறுதியடைந்தார். இப்படி இறைநம்பிக்கையில் உறுதியடைந்த தீமோத்தேயு பவுலடியாருடைய பயணங்களிலும், அவருடைய பணிகளிலும் உறுதுணையாக இருந்தார். இதனால் பவுலடியார் இவரை எபேசு நகரின் ஆயராகத் திருப்பொழிவு செய்கிறார்.
எபசு நகரின் ஆயராக உயர்ந்தபிறகு இவர் ஆற்றிய பணிகள் ஏராளம். குறிப்பாக இவர் ஆண்டவர் இயேசு பற்றிய நற்செய்தியை மிகத் துணிச்சலாக அறிவித்தார். பவுலடியாரோடும் ஏறக்குறைய 13 ஆண்டுகள் உறுதுணையாக இருந்து பணியாற்றி வந்தார். இந்த காலகட்டத்தில் போலி தெய்வங்களை வழிபடுவோருக்கும் இவருக்கும் வாக்குவாதம் முற்றியது. அதன்விளைவாக கி.பி. 97 ஆம் ஆண்டு கயவர்கள் சிலரால் இவர் கல்லால் எறிந்து கொல்லப்பட்டார்.
தீத்து
தீத்து அந்தியோக்கியா நகரைச் சேர்ந்த ஒரு புறவினத்துப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். ஒருசில திருச்சபை மரபுகளின்படி இவர் ஆண்டவர் இயேசுவின் எழுபத்தி இரண்டு சீடர்களில் ஒருவராகவும் இருக்கலாம் என்றும் அறியப்படுகின்றார். தீமோத்தேயுவை போன்று இவரும் பவுலடியாரின் அன்பிற்கு உரிய பிள்ளையாக, உடன் உழைப்பாளராக இருந்து பணியாற்றி இருக்கிறார். கி.பி. 52 ஆம் ஆண்டு தூய பவுல் எருசலேமிற்குச் சென்று, அங்கே நடந்த எருசலேம் பொதுச்சங்கத்தில் கலந்துகொண்டபோது, அவருக்கு உறுதுணையாக இவர் இருந்திருக்கின்றார்.
தீத்து, பிரச்சனைகளை தீர்த்து வைப்பத்தில் கைதேர்ந்தவராக இருந்திருந்தார். ஒருசமயம் கொரிந்து நகரிலே பிரச்சனை ஏற்பட்டபோது, பவுலடியார் தீத்துவைத்தான் அங்கே அனுப்பி வைத்து, பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க வழிவகை செய்திருக்கிறார். அதேபோன்று இவர் ஏழை எளியவருக்கு உதவிசெய்யும் நல்ல மனத்தையும் கொண்டவராக விளங்கி இருக்கிறார். எருசலேமில் பஞ்சம் ஏற்பட்டபோது இவர் கொரிந்து போன்று நகர்களுக்குச் சென்று அங்கே இருந்தவர்களிடம் நீதி திரட்டி தேவையானவர்களுக்கு உதவி இருக்கிறார். கி.பி.64 ஆம் ஆண்டு இவர் கிரிட் என்ற நகரின் ஆயராக உயர்த்தப்பட்டார். அங்கே இறைசமூகங்களை சிறப்பாகக் கட்டி எழுப்பும் பணியினைச் செய்து வந்தார். அப்படிப்பட்டார் தனது 94 வயதில் தன்னுடைய மண்ணுலக வாழ்வைத் துறந்தார். கி.பி.823 ஆண்டு இவருடைய உடல் தூய கேத்ரீனா பேராலயத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு தூய மாற்குவின் பேராலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இன்றுவரை அது அங்கேயே பத்திரமாக இருக்கின்றது.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய தீமோத்தேயு மற்றும் தீத்து ஆகியோரின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
பொறுப்புகளில் உண்மையாக இருத்தல்
தூய தீமோத்தேயுவாக இருக்கட்டும், தூய தீத்துவாக இருக்கட்டும் இரண்டு பேருமே தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் மிகவும் உண்மையாகவும் கடமை உணர்வோடும் இருந்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இருவருமே பவுலடியாரின் உடன்உழைப்பாளர்களாக இருந்து, அதன்பிறகு ஆயர்களாக உயர்ந்தவர்கள். அவர்கள் எத்தகைய சூழ்நிலையிலும் தங்களுடைய பொறுப்புகளிலிருந்து, கடமை உணர்விலிருந்து தவறி நடக்கவே இல்லை. இதுதான் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய படமாக இருக்கின்றது. தூய பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 4:2 ல் தீமோத்தேயுவைப் பார்த்துக் கூறுவார், “இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாய் இரு. கண்டித்துப் பேசு; கடிந்துகொள்; அறிவுரை கூறு; மிகுந்த பொறுமையோடு இரு”. இவற்றையெல்லாம் தீமோத்தேயுவும் தீத்துவும் சிறப்பாகக் கடைப்பிடித்து, தங்களுடைய வாழ்வில் மிகவும் பொறுப்போடு இருந்தார்கள். அதனால்தான் பவுலடியார் இருவரையும் தன்னுடைய அன்புக்குரிய பிள்ளைகள் என்று அழைக்கின்றார்.
கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் பொறுப்புகளில் உண்மையுள்ளவராக, நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கின்றோமா? என சிந்தத்துப் பார்க்கவேண்டும். நாம் எந்த பொறுப்பை வகித்தாலும் அது ஆசிரியப் பணியோ, குருத்துவப் பணியோ, நாட்டை வழிநடத்தும் தலைமைப்பணியோ எதுவாக இருந்தாலும், அதில் உண்மையாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்த்து, அதன்படி வாழ்வது நமது கடமையாகும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே, பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன் (மத் 25:23).
ஆகவே, நாம் நமக்குக் கொடுப்பப்பட்ட பொறுப்புகளில் தூய தீமோத்தேயுவைப் போன்று, தீத்துவைப் போன்று உண்மையுள்ளவர்களாக இருப்போம்.
இயேசுவுக்காக உயிரையும் இழக்கத் துணிதல்
“கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்” என்பார் தூய பவுல் (பிலி 3:8). அதைப்போன்று தான் தீமோத்தேயுவும் தீத்துவும் கிறிஸ்துவை ஆயத்தமாக்கிக் கொள்ள தங்களுடைய உயிரையே துச்சமாகக் கருதினார்கள். கிறிஸ்துவுக்காக தங்களுடைய உயிரையும் இழந்தார்கள். தீத்து இயற்கையான முறையில் உயிர் துறந்தாலும், தீமோத்தேயுவோ கல்லால் எறிந்து கொல்லப்பட்டார். அந்தளவுக்கு அவர் இயேசுவுக்காக எதையும் இழக்கத் துணிந்தார். கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசுவுக்காக நம்முடைய உயிரை இழக்கத் தயாராக இருக்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
வட கொரியாவில் கம்யூனிச ஆட்சி வந்தபோது கிறிஸ்தவர்கள் அதிகமாக கொடுமைப்படுத்தப்பட்டார்கள், சித்ரவதை செய்யப்பட்டார்கள். ஒருசமயம் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஓர் ஆலயத்திற்குள் ஒன்றாகக் கூடி ஜெபித்துக்கொண்டிருந்தபொது ஆயுதம் தாங்கிய சிலர் அந்த ஆலயத்திற்குள் நுழைந்து, பீடத்தில் இருந்த இயேசுவின் பாடுபட்ட சிரூபத்தைக் கீழே இழுத்துப் போட்டு, அதில் அனைவரையும் எச்சில் துப்பச் சொன்னார்கள். அப்படி யாராரெல்லாம் பாடுபட்ட சிரூபத்தில் எச்சில் துப்புகிறார்களோ அவர்கள் விடுவிக்கப்படுவதாகவும், எச்சில் துப்பாதவர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாவார்கள் என்று சொல்லி அவர்கள் அவர்களை எச்சரித்தார்கள்.
நிறைய கிறிஸ்தவர்கள் தங்களுடைய உயிருக்குப் பயந்து இயேசுவின் பாடுபட்ட சிரூபத்தின்மீது எச்சில் துப்பிச் சென்றார்கள். இறுதியாக வந்த ஒரு பெண்மணி எதற்கும் பயப்படாமல் சிரூபத்தின் மீது இருந்த எச்சில் அனைத்தையும் துடைத்துவிட்டு, “இயேசுவே நான் உன்னை முழுவதும் அன்புசெய்கிறேன்” என்றாள். இதைக் கண்ட ஆயுதம் தாங்கி முரடன் ஒருவன், பாடுபட்ட சிரூபத்தின்மீது எச்சில் துப்பிய மற்ற எல்லா கிறிஸ்தவர்களையும் ஆலயத்திற்கு உள்ளே போகச் சொல்லிவிட்டு, அந்தப் பெண்மணியை மட்டும் வெளியே இழுத்துச் சென்று துப்பாக்கிக் குண்டுக்கு அவளை இரையாக்கினான். அந்தப் பெண்மணியோ கிறிஸ்துவுக்காக சாவைத் துணிவோடு ஏற்றுக்கொண்டாள்.
“தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர், மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக்கொள்கிற எவரும் வாழ்வடைவார்” என்பார் இயேசு (மத் 16: 25). இயேசுவுக்காக அந்த வட கொரியப் பெண்மணியும், தீமோத்தேயுவும் தங்களுடைய உயிரை இழந்தார்கள். அதனால் காத்துக்கொண்டார்கள். நாமும் இயேசுவுக்காக நம் உயிரை இழக்கத் துணியும்போது அதனைக் காத்துகொள்வோம் என்பது உறுதி.
ஆகவே, தூய தீமோத்தேயு, தீத்து ஆகியோரின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்லநாளில் அவர்களிடம் இருந்த நல்ல பண்புகளை நமதாக்குவோம். இயேசுவுக்காக நம் உயிரையும் இழக்கத் துணிவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.