சனவரி 22 : நற்செய்தி வாசகம்

தம்மிடம் இருக்கும்படி தாம் விரும்பியவர்களை அழைத்தார்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-19
இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்.
அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் – இவ்விருவருக்கும் ‘இடியைப் போன்றோர்’ எனப் பொருள்படும் பொவனேர்கேசு என்று அவர் பெயரிட்டார் – அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
I எபிரேயர் 8: 6b-13
II மாற்கு 3: 13-19
மன்னிக்கும் இறைவன் மன்னிக்க அழைக்கிறார்
தந்தையைக் கொன்றவரை மன்னித்த மகன்
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள உகண்டாவில் நற்செய்தி அறிவித்தவர் நற்செய்திப் பணியாளரான ஜேம்ஸ் கன்னிங்டன் (James Hannington 1847-1885). இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த இவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டுவிட்டு உகண்டாவில் நற்செய்தி அறிவித்தபொழுது கயவன் ஒருவனால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
இச்செய்தியை அறிந்த ஜேம்ஸ் கன்னிங்டனின் மகன், தன் தந்தையைக் கொன்றவனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று முதலில் நினைத்தாலும், பின்னர் தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு, தன் தந்தையைக் கொன்றவனை எப்படியாவது கண்டுபிடித்து, அவனை மன்னித்துக் கிறிஸ்துவுக்குள் கொண்டுவர வேண்டும் என்று முடிவுசெய்து கொண்டு, தன் தந்தையைப் போன்று உகண்டாவிற்கு ஒரு நற்செய்திப் பணியாளராகப் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் சென்றபிறகுதான் தெரிந்தது, தன் தந்தையைக் கொன்றவன் ஏற்கெனவே இறந்துபோய்விட்டான் என்பது. இதனால் இவர் தன் தந்தையின் கொன்றவனின் மகனுக்குக் கடவுளின் வார்த்தையை அறிவித்து, அவனையும் அவனுடைய குடும்பத்தையும் கிறிஸ்துவுக்குள் கொண்டுவந்தார்.
பழிக்குப் பிழி என்றிருக்கும் இவ்வுலகில், தன் தந்தையைக் கொன்றவரின் குடும்பத்தில் இருந்தவர்களை மன்னித்தது மட்டுமல்லாமல், அவர்களை கிறிஸ்துவுக்குள் கொண்டுவந்த நற்செய்திப் பணியாளரான ஜேம்ஸ் கன்னிங்டன் நமக்கெல்லாம் ஒரு முன்மாதிரி. இன்றைய இறைவார்த்தை கடவுள் மன்னித்தது போல், நாம் பிறரை மன்னிக்க அழைப்புத் தருகின்றது.
திருவிவிலியப் பின்னணி
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், புதிய உடன்படிக்கையைப் பற்றிப் பேசுகின்றது. ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களோடு செய்துகொண்ட முதல் உடன்படிக்கையை அவர்கள் மீறினார்கள். ஆனால், கடவுள் அவர்களுடைய தீச்செயலை மன்னித்து, அவர்களோடு புதிய உடன்படிக்கையைச் செய்கின்றார். இந்த உடன்படிக்கையை கிறிஸ்துவை இணைப்பாளராகக் கொண்டதாக இருக்கின்றது. நற்செய்தி வாசகம் இயேசு கிறிஸ்து பன்னிரு திருத்தூதரைத் தேர்ந்தெடுப்பதைக் குறித்துப் பேசுகின்றது. இந்தப் பன்னிருவரும், இயேசுவின் பெயரால் பாவங்களை மன்னிக்கவும், பிற பணிகளைச் செய்யவும் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள்.
இவ்வாறு ஆண்டவராகிய கடவுள் எப்படித் தீச்செயல்கள் செய்தவரை மன்னித்தாரோ, அப்படி அவருடைய சீடர்களும், அவர்களுடைய வழிவருபவர்களும் தீச்செயல்கள் செய்பவர்களை மன்னிக்க அழைக்கப்படுகின்றார்கள் (யோவா 20: 23)
சிந்தனைக்கு:
 கடவுள் நம்மை மன்னிப்பது போல், நாம் பிறர் செய்யும் குற்றங்களை மன்னிக்கின்றோமா? (மத் 6: 12)
 இயேசுவின் புனித தெரேசா சொல்வதுபோல், கடவுள் நம் வழியாகச் செயல்பட நாம் நம்மை அனுமதிக்கின்றோமா?
 மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள் (லூக் 6: 37).
இறைவாக்கு:
‘கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்து போல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்’ (எபே 4: 32) என்பார் புனித பவுல். எனவே, நாம் ஒருவர் மற்றவர்களை மன்னித்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.