சனவரி 18 : நற்செய்தி வாசகம்

மணமகன் விருந்தினரோடு இருக்கிறார்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 18-22
யோவானுடைய சீடரும் பரிசேயரும் நோன்பு இருந்து வந்தனர். சிலர் இயேசுவிடம், “யோவானுடைய சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” என்று கேட்டனர்.
அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் நோன்பு இருக்க முடியுமா? மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம் அவர்கள் நோன்பு இருக்க முடியாது. ஆனால் மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள். எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்தப் புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் பெரிதாகும். அதுபோலப் பழைய தோற்பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றி வைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்; மதுவும் தோற்பைகளும் பாழாகும். புதிய மது புதுத் தோற் பைகளுக்கே ஏற்றது” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
I எபிரேயர் 5: 1-10
II மாற்கு 2: 18-22
“கீழ்ப்படிதல் பலியை விடச் சிறந்தது”
கடுமையாக நோன்பிருந்த இளைஞர்:
இளைஞன் ஒருவன் தனது உடலை மிகவும் வருத்திக்கொண்டு நோன்பிருந்து வந்தான். அவன் அவ்வளவாக உணவு உண்பதில்லை. மட்டுமல்லாமல், மக்களிடம் அவன் பேசுவதுமில்லை; அவர்களைப் பார்த்துப் புன்னைகைப்பதும் இல்லை. இப்படிப்பட்ட இளைஞன் ஒருநாள் துறவி ஒருவரைச் சந்தித்து, “சுவாமி! நான் என்னுடைய உடலை வருத்திக்கொண்டு, மிகக் கடுமையாக நோன்பிருந்து வருகின்றேன். யாரோடும் பேசுவதுமில்லை, பழகுவதுமில்லை. ஆனாலும், ஏதோ ஒன்று என்னிடத்தில் குறைவுபடுவதாய் உணர்கின்றேன். அது என்ன?” என்றார். துறவி சிறிதும் தாமதியாமல், “ஆன்மா” என்று தீர்க்கமாய்ச் சொன்னார்.
அந்தோனி டி மெல்லோ சொல்லக்கூடிய இந்த நிகழ்வு, சகமனிதர்களிடம் பேசாமல், அவர்களை மதிக்காமல் செய்யப்படும் நோன்பு ஆன்மா இல்லாதது, அது அர்த்தமற்றது என்ற உண்மையை உணர்த்துகின்றது. இன்றைய இறைவார்த்தை எது உண்மையான நோன்பு என்ற செய்தியை நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
திருவிவிலியப் பின்னணி
நற்செய்தியில் சிலர் இயேசுவிடம், “யோவானுடைய சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் நோன்பிருக்க, உம்முடைய ஏன் நோன்பிருப்பதில்லை?” என்றொரு கேள்வியைக் கேட்கின்றார்கள். இயேசு அவர்களுக்கு கூறிய பதிலைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னால், யூதர்கள் எப்பொழுதெல்லாம் நோன்பிருந்தார்கள் என்று அறிந்துகொள்வோம்.
யூதர்கள் ஆண்டுக்கொரு முறை பாவக் கழுவாய் நாளில் நோன்பிருந்து வந்தனர் (லேவி 23: 27), வேறு சில தேவைகளுக்காகவும் அவர்கள் நோன்பிருந்தார். காலப்போக்கியில், பரிசேயர்கள் வாரத்திற்கு இரண்டு முறை நோன்பிருக்கத் தொடங்கினார்கள் (லூக் 18: 12). இந்த இரண்டு நாள்களும் மக்கள் சந்தை கூடும் நாள், ஆகவே அவர்கள் மக்களுக்கு முன்பாக தாங்கள் நேர்மையாளர்கள் என்று காட்டிக்கொள்ள நோன்பிருந்தார்கள். இத்தகைய பின்னணியில் தன்னிடம் நோன்பு பற்றிய கேள்வி கேட்டவர்களிடம் இயேசு, “…மணமகன் மணவிருந்தினர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்” என்கின்றார். இயேசுவைப் பொறுத்தவரையில் நோன்பு என்பது மக்களுடைய பாராட்டிற்காகச் செய்யப்படுகின்ற ஒன்று அல்ல, மாறாக, இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிப்பதுபோல், கீழ்ப்படிதலோடு வாழ்வது. இயேசு தந்தைக் கடவுளுக்குக் கீழ்ப்படிந்ததுபோன்று, நாமும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தால், அதுவே சிறந்த நோன்பு.
சிந்தனைக்கு:
 மக்களுடைய பாராட்டிற்காக நோன்பிருப்பவர்களா நாம்?
 சொந்த வாழ்க்கையில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாத நோன்பு, நோன்பே அல்ல.
 கீழ்ப்படிதல் பலியை விடச் சிறந்தது (1 சாமு 15: 22) என்பதை உணர்வோம்.
இறைவாக்கு:
‘ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆனார்கள்’ (உரோ 5: 19) என்பார் புனித பவுல். எனவே, நாம் இயேசுவைப் போன்று கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, உண்மையாய் நோன்பிருப்பவர்களாகி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.