வாசக மறையுரை (ஜனவரி 18)

பொதுக்காலம் முதல் வாரம் வெள்ளிக்கிழமை

I எபிரேயர் 4: 1-5, 11
II மாற்கு 2: 1-11

நம்பிக்கையோடு இருப்போருக்குக் கடவுளின் ஆசி

ஹட்சன் டாய்லர்

கடவுளின் வார்த்தையைச் சீனாவில் அறிவித்துப் பலரையும் இயேசு கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொள்ளச் செய்தவர் ஹட்சன் டாய்லர் (Hudson Taylor). 1853 ஆம் ஆண்டு இவர் முதன்முறையாகச் சீனாவிற்குச் சென்றபொழுது, இவர் பயணம் செய்த பாய்மரக் கப்பலானது போதிய காற்றில்லாமல் முன்னோக்கி நகரவில்லை. மாறாக, கடலுக்குள் இருந்த நீர்மட்டம் கப்பலை எதிர்திசையை நோக்கி இழுத்துச் சென்றது. அப்பகுதியில் மனித மாமிசம் சாப்பிடுபவர்கள் மிகுதியாக இருந்ததால், கப்பல் தளபதி மிகவும் அஞ்சினார்.

இந்நிலையில் கப்பல் தளபதி, ஹட்சன் டாய்லர் ஒரு மறைப்போதகர் என்பதை அறிந்து, அவரிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி, கடலில் காற்று வீச வேண்டுமென்று கடவுளிடம் மன்றாடுமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு ஹட்சன் டாய்லர் அவரிடம், “என்னைப் போன்று இந்தக் கப்பலில் நான்கு கடவுள் நம்பிக்கையாளர்கள் இருக்கின்றார்கள். அவர்களிடம் இச்செய்தியை எடுத்துச்சொல்லி, அவர்களையும் மன்றாடச் சொல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பிவிட்டு, தன் அறையைத் தாழித்துக் கொண்டு, கடவுளிடம் நம்பிக்கையோடு வேண்டத் தொடங்கினார். ஹட்சன் டாய்லரிடமிருந்து விடைபெற்ற கப்பல் தளபதி அவர் சொன்னது போன்றே செய்தார். இது நடந்து ஒருசில மணித்துளிகளுக்குப் பிறகு, தன்னுடைய அறைக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, ஹட்சன் டாய்லர் கதவைத் திறந்து பார்த்தபொழுது, அவருக்கு எதிரில் கப்பல் தளபதி இருந்தார். அவர் ஹட்சன் டாய்லரிடம், “நம்பிக்கையோடு நீங்கள் கடவுளிடம் வேண்டியதற்குக் கடவுள் செவிசாய்த்துவிட்டார்; கடலில் காற்று வீசத் தொடங்கிவிட்டது” என்றார்.

ஹட்சன் டாய்லர் கடவுளிடம் நம்பிக்கையோடு வேண்டியது நிறைவேற்றியது. இன்றைய இறைவார்த்தை கடவுளிடம் நம்பிக்கையோடு இருப்போர் பெறுகின்ற ஆசிகளைப் பற்றிப் பேசுகின்றது.

திருவிவிலியப் பின்னணி:

இன்றைய முதல் வாசகம், கடவுளின் வார்த்தையை நம்பிக்கையோடு கேளாத இஸ்ரயேல் மக்கள், கடவுள் தரவிருந்த ஓய்வை பெறாது போனதை எடுத்துக்கூறுகின்றது. நற்செய்தி வாசகமோ, முடக்குவாதமுற்ற மனிதரைப் படுக்கையில் வைத்து தூக்கிக்கொண்டு தனக்கு முன்பாக வந்த நால்வரின் நம்பிக்கையைக் கண்டு, இயேசு முடக்குவாதமுற்றவருக்கு நலமளிப்பதைக் குறித்து எடுத்துக்கூறுகின்றது. இங்கு நம்பிக்கை இல்லாதவர் கடவுள் தரவிருந்த ஓய்வை இழந்ததும், நம்பிக்கையோடு இருந்தவர் இயேசு தந்த ஆசியைப் பெற்றதும் நமது கவனத்திற்கு உரியது.

சிந்தனைக்கு

 கடவுள் தரும் ஓய்வை, ஆசியைப் பெற அவரிடம் நாம் நம்பிக்கை கொண்டிருக்கின்றோமா?

 பாவத்தில் விழுந்து கிடக்கும் இந்த மானிட சமூகத்தை நற்செய்தியில் வரும் நால்வரைப் போன்று இயேசுவிடம் கொண்டு வருவது எப்போது?

 “உனது நம்பிக்கை உன்னை நலமாக்கிற்று” (மாற் 5: 34)

இறைவாக்கு

‘இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்?’ (1 யோவா 5:5) என்பார் திருத்தூதர் புனித யோவான். நாம் இயேசுவை இறைமகன் என்று நம்பி வாழ்வோம்,

Comments are closed.