பொங்கல் விழா தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் (ஜனவரி 14)

மனித நாகரிகத்தின் அடையாளச் சின்னங்கள் விழாக்கள். அவை நம் உள்ளத்தில் அடங்கி, ஒடுங்கிக் கிடக்கும் மகிழ்ச்சியினை வெளிப்படுத்த நமக்குக் கிடைத்த நல்ல வாய்ப்புகள்.
மனிதர்களாகிய நாம், அதிலும் குறிப்பாக தமிழர்களாகிய நாம் எத்தனையோ விழாக்களைக் கொண்டாடுகின்றோம். அவற்றில் முதன்மையானதொரு விழாதான் பொங்கல் விழா. இவ்விழாவை ‘நன்றியின் விழா’ என்று கூடச் சொல்லலாம். ஆம், இறைவனுக்கு, இயற்கைக்கு நாம் செலுத்துகிற ஒரு நன்றியின் விழாதான் பொங்கல் பெருவிழா.
இயற்கைக்கு நன்றி என்று சொல்கிற போது, ‘இயற்கை’, ‘நன்றி’ என்ற இரண்டு வார்த்தைகளையும் நாம் தனித்தனியாக சிந்தித்துப் பார்ப்பது மிகவும் சிறப்பானது.
இயற்கை:
இயற்கையைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்க்கிற பொழுது, இந்த உலகத்தில் இருக்கிற எல்லாமும் ஒத்திசைவாக, ஒரே உயிராக, ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது என்று சொல்லலாம்.
முதலில் நாம் நன்றாக இருக்கவேண்டுமென்றால், நாம் உண்ணக்கூடிய உணவு நன்றாக இருக்க வேண்டும். உணவு நன்றாக இருக்க வேண்டும் என்றால் செடிகள் நன்றாக இருக்க வேண்டும். செடிகள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இந்த மண் நன்றாக இருக்க வேண்டும். மண் நன்றாக இருக்க வேண்டும் என்றால், மண்ணுக்குள் இருக்கும் நுண்ணுயிர்கள் அனைத்தும் நன்றாக இருக்க வேண்டும். நீர் நன்றாக இருக்க வேண்டும்; ஆகாயம் நன்றாக இருக்க வேண்டும். ஆகவேதான், நாம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் எல்லாமும் நன்றாக இருக்க வேண்டும் என்றும், இந்த உலகத்தில் உள்ள எல்லாமும் ஒத்திசைவாக, ஒரே உயிராக, ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது என்று சொல்கிறேன். இப்படி ஒத்திசைவாக, ஒரே உயிராக, ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிற இயற்கைக்கு, இறைவனுக்கு நன்றி செலுத்துவது நமது கடமையாகும்.
நன்றி:
இயற்கைக்கு, யாவற்றையும் படைத்த இறைவனுக்கு நாம் ஏன் நன்றி சொல்ல வேண்டும் என்ற கேள்வி எழலாம். இதற்கு ஐயன் திருவள்ளுவர் கீழ்க்காணும் வரிகளில் மிகத் தெளிவான ஒரு பதிலைச் சொல்கிறார்.
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு” (குறள் 110).
ஒருவர் எத்தனை பெரிய அறங்களை அழித்தாலும் அவருக்கு உய்வு உண்டு; ஆனால் செய்த உதவியை மறந்து தீமை செய்தால் அவருக்கு உய்வே இல்லை என்பதுதான் இதன் பொருள். ஆகவே இவ்வுலகில் நாம் நன்றாக வாழ்வதற்கு நமக்கு எல்லாவற்றையும் தரும் இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி செலுத்துவது மிகப் பொருத்தமானது.
தமிழர்களாகிய நாம் பொங்கல் விழாவை நான்கு நாள்களாக கொண்டாடுகிறோம். முதலில் நாம் கொண்டாடக்கூடிய விழா போகி விழா அல்லது போகிப்பண்டிகை.
போகி விழா:
இந்த நாளில் நாம் நம்முடைய வீட்டில் உள்ள குப்பைகளை எரிக்கின்றோம். வீட்டில் உள்ள குப்பைகளை மட்டுமல்லாது, நமது உள்ளத்தில் இருக்கக்கூடிய குப்பைகளையும் நாம் எரிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். ஏனெனில் கடவுள் தூயவர். அவரைப் போன்று நாமும் தூயோராக இருக்க வேண்டும் (லேவி 19:2). நாம் தூயவராக இல்லாத பட்சத்தில் கடவுளை நாம் நெருங்கிச் செல்ல முடியாது என்பதே உண்மை (விப 3:5).
பொங்கல் விழா:
நம்முடைய இல்லத்தில் இருக்கிற, உள்ளத்தில் இருக்கிற மாசுகளை அகற்றிய பின் நாம் கொண்டாடக்கூடிய விழாதான் பொங்கல் விழா. இவ்விழாவில் நாம் இறைவனை, இயற்கையை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.
இஸ்ரயேல் மக்கள் கோதுமையின் அறுவடைக்குப் பின்னும் (விப 23:16; லேவி 23: 15-21) திராட்சையின் அறுவடைக்குப் பின்னும் (லேவி 19: 23-25) இறைவனை நன்றியோடு நினைத்துப் பார்த்தார்கள். அதுபோன்று தமிழர்களாகிய நாம் நமக்கு உண்ண உணவு கொடுத்த இறைவனை, இயற்கையை இந்நாளில் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம். இந்தப் பொங்கல் விழாவில் நாம் படைக்கிற பொங்கல் பொங்கி வழிந்து, அதிலிருந்து வெளிவருகிற நறுமணம் காற்றோடு கலக்கிறது. அதுவே நாம் இறைவனுக்கும் இயற்கைக்கும் செலுத்தக்கூடிய நன்றியாக இருக்கிறது.
மாட்டுப் பொங்கல் விழா:
நமக்கு உண்ண உணவு கொடுத்த இறைவனையும் இயற்கையையும் நன்றியோடு நினைத்துப் பார்த்த நாம், நமக்காக உழைக்கும் உயிரினங்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கக்கூடிய ஒரு நாள்தான் இந்த மாட்டுப் பொங்கல் விழா. மாடுகள் அல்லது கால்நடைகளின் பெயர்கள் நம்முடைய வீட்டு ரேஷன் கார்டுகளில் இடம்பெறவில்லையே தவிர, நம்முடைய மனங்களில் நிறைந்தவை; அவை நமக்காக உழைப்பவை. அவற்றை நன்றியோடு நினைத்துப் பார்க்கவே மாட்டுப் பொங்கலைக் கொண்டாடுகிறோம்.

Comments are closed.