சனவரி 12: நற்செய்தி வாசகம்

இயேசு அதிகாரத்தோடு மக்களுக்குப் போதித்து வந்தார்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 21-28
இயேசுவும் சீடர்களும் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.
அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த ஆவி, “நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்” என்று கத்தியது. “வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ” என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று.
அவர்கள் அனைவரும் திகைப்புற்று, “இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!” என்று தங்களிடையே பேசிக்கொண்டனர். அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————————————-
“அனைவருடைய நலனுக்காகவும் சாவுக்கு உட்பட்ட இயேசு”
உயிரைத் தியாகம் செய்த அருள்பணியாளர்கள்
1943 ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 3 ஆம் டோர்செஸ்டர் (Dorchester) என்ற கப்பல் அட்லாண்டிக் கடலில் சென்றுகொண்டிருந்தது. அக்கப்பலில் மக்கள், இராணுவவீரர்கள், உயரதிகாரிகள், இவர்களோடு நான்கு அருள்பணியாளர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். அப்பொழுது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஜெர்மனி ராணுவம், டோர்செஸ்டர் கப்பலைப் போர்கப்பல் எனத் தவறாக நினைத்துக்கொண்டு, அதன்மீது தாக்குதலை நடத்தியது. இதனால் அந்தக் கப்பல் உடைந்து கடலுக்குள் மூழ்கத் தொடங்கியது.
கப்பலில் போதுமான உயிர் காக்கும் படகுகள் (Life Boat) இல்லாததால், கப்பல் தளபதி கப்பலில் இருந்த படகுகளில் பெண்களையும் குழந்தைகளையும் ஏற்றிக் கரைக்கு அனுப்பிவிட்டு, மற்றவர்களை நீதிக் கரைக்குப் போகச் சொல்லிக் கொண்டிருந்தார். இதற்கு நடுவில் கப்பலில் இருந்த நான்கு அருள்பணியாளர்களும் இடிபாடுகளில் மாட்டிக்கொண்ட பயணிகளை விடுவித்து, அவர்களை பாதுகாப்பாகக் கரைக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஒருகட்டத்தில் கப்பலில் இருந்த வயதுமுதிர்ந்த பயணிகளுக்கு காப்புச் சட்டை (Life Jacket) தேவைப்பட்டபொழுது, தங்களுடைய காப்புச் சட்டையைக் கொடுத்துக் காப்பாற்றினார்கள் அந்த நான்கு அருள்பணியாளர்களும். இவ்வாறு அவர்கள் கப்பலில் இருந்தவர்களுக்கு உதவி செய்துகொண்டிருக்கும்பொழுதே கடலில் மூழ்கி தங்களுடைய இன்னுயிரைத் துறந்தார்கள்.
மற்றவர்களிடம் நலனுக்காக நான்கு அருள்பணியாளர்களும் தங்களுடைய இன்னுயிரைத் துறந்தார்கள். இயேசுவோ எல்லாருடைய நலனுக்காகவும் சாவுக்கு உட்பட வேண்டியதாயிற்று.
திருவிவிலியப் பின்னணி
இன்றைய முதல் வாசகத்தில், எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிக் கூறும்பொழுது, “கடவுளின் அருளால் அனைவருடைய நலனுக்காகவும் இயேசு சாவுக்கு உட்பட வேண்டியதாயிற்று” என்று குறிப்பிடுகின்றார். ‘அனைவருடைய நலன்’ என்று எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் குறிப்பிடுவதை பாவத்திலிருந்தும், தீய ஆவியின் பிடியிலிருந்தும் கிடைக்கும் விடுதலையினால் அனைவருக்கும் கிடைக்கும் நலன் என்றும் பொருள் எடுத்துக் கொள்ளலாம்.
நற்செய்தியில் இயேசு தீய ஆவி பிடித்திருந்த ஒருவரிடமிருந்து தீய ஆவியை விரட்டி அவருக்கு நலமளிக்கின்றார். இவ்வாறு தீய பிடித்திருந்தவருடைய நலனுக்காக மட்டுமல்லாது, அனைவருடைய நலனுக்காகவும் இயேசு சாவுக்கு உட்படவேண்டியதாயிற்று. ஆம், நாம் அனைவரும் வாழ்வுபெறவே இயேசு சாவுக்கு உட்பட வேண்டியதாயிற்று (யோவா 10: 11)
சிந்தனைக்கு:
 மற்றவருடைய நலனுக்காக இயேசுவைப் போன்று நாம் சாவை ஏற்கத் துணிகின்றோமா?
 தமக்கென்றே வாழாமல், பிறருக்கென வாழ்ந்து நிலைவாழ்வுக்கு உரியவராவோம் (யோவா 12: 25)
 “மனிதன் இறப்பதற்காகப் பிறக்கின்றான்; ஆனால், என்றும் வாழ்வதற்காக இறக்கின்றான்” – ஒரு கல்லறையில் இடம்பெற்றிருந்த வாசகம்
ஆன்றோர் வாக்கு:
‘தியாகத்தால் புடமிடப்பட்ட முழுமையான அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஒருவரே சிறந்த தலைவர்’ என்பார் புரட்சியாளர் சேகுவேரா. நாம் இயேசுவைப் போன்று நம்மை தியாகம் செய்வோம், இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.