ஆண்டவரின் திருமுழுக்கு (ஜனவரி 10)

I எசாயா 55: 1-11
II 1 யோவான் 5: 1-9
III மாற்கு 1: 7-11
“மனுக்குலத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இயேசு”
நிகழ்வு
ஒருமுறை இங்கிலாந்தின் பிரதமராக இருந்த வின்சென்ட் சர்ச்சில் காந்தியடிகளைப் பார்த்து, “அரை நிர்வாணப் பக்கிரி” என்று குறிப்பிட்டார்.
காந்தியடிகள் இங்கிலாந்தில் வழக்குரைஞருக்குப் படிக்கின்றபோதும், அவர் வழக்குரைஞராகத் தென்னாப்பிரிக்காவில் பணியாற்றும்போதும் மிகவும் ஆடம்பரமாக உடை உடுத்தியவர். அப்படிப்பட்டவர் நாலுமுழ வேட்டியோடும் தோளில் ஒரு துண்டோடும் அரை நிர்வாணமாக, அமைதி வழியில் நாட்டிற்காகப் போராடி, விடுதலை பெற்றுத் தந்ததற்கு மதுரையில், அவருடைய வாழ்வில் நடந்த ஒரு முக்கியமான நிகழ்வு காரணமாக இருக்கின்றது.
1921 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 22 ஆம் நாள் காந்தியடிகள் சென்னையிலிருந்து மதுரைக்கு வந்திருந்தபொழுது, மதுரை மேலவாசி வீதி வழியாக நடந்து சென்றார். அப்பொழுது அவர் அங்குள்ள மக்கள் மேலுடை அணியாமல், வெறும் நாலுமுழ வேட்டியை மட்டும் அணிந்திருப்பதைக் கண்டார். அக்காட்சியைக் கண்டு அதிர்ந்து போன காந்தியடிகள், ‘இந்நாட்டில் உள்ள பலரும் உடுத்துவதற்குச் சரியான உடை இல்லாமல் இருக்கும்பொழுது, நான் மட்டும் மிகவும் ஆடம்பரமாக உடை உடுத்து நல்லதில்லை’ என்று, தான் அணிந்து வந்த ஆடம்பரமான ஆடைகளைத் துறந்து, நாலுமுழ வேட்டியோடும், தோளில் துண்டோடும் அரை நிர்வாணமாக வலம்வந்து, நாட்டிற்கு விடுதலையைப் பெற்றுத் தந்தார்.
காந்தியடிகள் தான் அணிந்து வந்த ஆடம்பரமான ஆடைகளைத் துறந்து, மேலுடை இல்லாமல் வலம் வந்ததன் மூலம், இந்த நாட்டில் இருந்த பல கோடி ஏழை எளிய மக்களோடு தன்னை அடையாளபடுத்திக் கொண்டார். ஆண்டவராகிய இயேசுவும் பாவிகள் மனம்மாறுவதற்காகக் கொடுக்கப்பட்ட திருமுழுக்கைப் பெற்றுக்கொண்டதன் மூலம், அவர் மனுக்குலத்தோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார், இயேசு ஏன் திருமுழுக்குப் பெற வேண்டும், இயேசு பெற்ற திருமுழுக்கு நமக்கு என்ன உண்மையை உணர்த்துகின்றது என்பன குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நம்மோடு அடையாளப்படுத்தி கொண்ட இயேசு
இன்றைக்குப் பலர் அதிகாரத்திலும், பதவியிலும் உயர்ந்து மற்றவர்களை அடக்கியாள வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றார். இயேசு இதற்கு முற்றிலும் மாறாக, தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி வந்து (பிலி 2: 6-8), பாவிகள் மனம்மாறுவதற்காகக் கொடுக்கப்பட்ட திருமுழுக்கினைப் பெறுகின்றார்.
இயேசு பாவம் அறியாதவர் (2 கொரி 5: 21). அப்படியிருந்தும் அவர் திருமுழுக்குப் பெற்றார் எனில், அவர் மனுக்குலத்தோடு தன்னை அடையாளப்படுத்தவே. இயேசு தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி வந்து, திருமுழுக்கின் வழியாகத் தன்னை மனக்குலத்தோடு அடையாளப்படுத்திக் கொண்டதுபோல், நாமும் நம்முடைய ஆணவத்திலிருந்து, அகந்தையிலிருந்து கீழே இறங்கி வந்து, துன்புறுகின்ற மக்களோடு நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும். இது குறித்து திருத்தூதர் புனித பேதுரு இவ்வாறு கூறுவார்: “கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துகள். அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார் (1 பேது 5: 6). ஆகவே, நாம் நம்முடைய ஆணவத்திலிருந்து இறங்கி வந்து, மிகுந்த தாழ்ச்சியோடு மக்களோடு நம்மை அடையாளபடுத்திக் கொண்டுவாழ்வோம்.
தன் பணியைத் தொடங்கிய இயேசு
திருமுழுக்கு யோவானிடமிருந்து இயேசு பெற்ற திருமுழுக்கு அவரது பணிவாழ்வின் தொடக்கமாக இருக்கின்றது. முப்பது ஆண்டுகள் பொதுவாழ்வில் ஈடுபடாமல் இருந்த இயேசு, திருமுழுக்குப் பெற்றதும், தூய ஆவியார் அவர்மேல் இறங்கி வந்ததும், அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் விடுவித்து, எங்கும் நன்மை செய்துகொண்டே செல்கின்றார் (திப 10: 32).
இயேசு திருமுழுக்குப் பெற்றபின் இறையாட்சிப் பணியைச் செய்யத் தொடங்கினார் எனில், திருமுழுக்குப் பெற்றிருக்கின்ற நாம் ஒவ்வொருவரும் இயேசுவைப் போன்று இறையாட்சிப் பணியைச் செய்யக் கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம். இன்னும் சொல்லப்போனால் திருமுழுக்கில் நாம் பெற்ற அருள் நம்மை இறைப்பணியை செய்ய உந்தித் தள்ளுவதாக இருக்கவேண்டும்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் கூறுவதாக இவ்வாறு வாசிக்கின்றோம்: “நான் அவனை மக்களினங்களுக்குச் சாட்சியாகவும், வேற்றினங்களுக்குத் தலைவராகவும் தளபதியாகவும் ஏற்படுத்தினேன்” (எசா 55: 4). ஆண்டவராகிய கடவுள் கூறுவதாக இறைவாக்கினர் எசாயா கூறுகின்ற இந்த வார்த்தைகளுக்கு ஏற்ப, இயேசு தன் வாழ்வாலும் போதனையாலும் மக்களுக்குச் சாட்சியாகவும், வேற்றினங்களுக்குத் தலைவராகவும் விளங்கினார். அப்படியெனில், திருமுழுக்குப் பெற்ற நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்வாலும் வார்த்தையாலும் மக்களுக்குச் சாட்சிகளாகத் திகழவேண்டும். இது நம்முடைய தலையாய கடமை.
கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாக இருக்க அழைப்பு
இயேசு கிறிஸ்து திருமுழுக்குப் பெற்றதும், “என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலிக்கின்றது. இயேசு தந்தைக் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, அதன்மூலம் அவருடைய அன்பார்ந்த மகன் ஆனதால் வானத்திலிருந்து இப்படியொரு குரல் ஒலிக்கின்றது. பின்னர் இக்குரல் இயேசு தோற்றமாற்றம் அடைகின்றபொழுதும் இதே போன்று ஒலிக்கும் (மத் 17: 5). இயேசு தந்தைக் கடவுள் திருவுளத்தை நிறைவேற்றி அவரது அன்பார்ந்த மகனானதுபோன்று, நாமும் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி, அவரது மகனான, மகளான மாறவேண்டும்.
திருத்தூதர் புனித யோவான் முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர் அவர்மீதும் அன்பு கூர்கின்றார் என்றும், அதன்மூலம் அவர் கடவுளின் மக்கள் ஆகின்றார் என்றும் கூறுகின்றார். இங்கு கடவுளை அன்புகூர்வது என்பதை ‘இயேசுவை மெசியா என நம்புவதும், நம்பி அதன்படி வாழ்வதுமாகும்’ என்று பொருள் எடுத்துக்கொள்ளலாம். முதல் நூற்றாண்டைச் சார்ந்த செரிந்துஸ், இயேசு திருமுழுக்குப் பெற்றது முதல் பாடுகள்படுகிறவரைக்கு மட்டுமே இறைமகனாக இருந்தார், அதற்கு முன்பும் பின்பும் அவர் இறைமகனாக, மெசியாவாக இல்லை என்று சொல்லிவந்தனர். இதற்குத் தன் கண்டனத்தைப் பதிவு செய்யும் யோவான், இயேசுவே உண்மையான மெசியா, அதற்கு நீரும் இரத்தமும் தூய ஆவியும் சான்றுகள், இதை நம்பி ஏற்றுக்கொள்வோர் உலகை வெல்வர் என்று கூறுகின்றார்.
அப்படியெனில், நாம் கடவுளின் அன்பார்ந்த மக்களாக வேண்டும் எனில், இயேசுவே மெசியா என நம்பி, அதன்படி வாழவேண்டும். இது குறித்து யோவான் நற்செய்தியில் இவ்வாறு வாசிக்கின்றோம்: “அவரிடம் நம்பிக்கை கொண்டு, அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்” (யோவா 1: 12). எனவே, நாம் ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழாவில் இயேசுவை மெசியா என்று நம்பி ஏற்றுக்கொண்டு, அவர் வழியில் நடந்து, அதன்மூலம் தந்தைக் கடவுளின் அன்பார்ந்த மக்களாவோம்.
சிந்தனை
‘நிலைவாழ்வை நோக்கிய பாதையின் முதல் அடி திருமுழுக்கு’ என்பார் டெல்பர்ட் எல்.ஸ்டாப்லே (Delbert L. Stapley) என்ற அறிஞர். ஆகையால், திருமுழுக்கின் வழியாக நிலைவாழ்வை நோக்கிய பாதையில் முதல் அடி எடுத்து வைத்து, அதில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்ற நாம், அதில் இறுதிவரைக்கும் நடந்து, கடவுளின் அன்பு மக்களாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.