குழந்தை இயேசுவில் கடவுள் தம்மையே வெளிப்படுத்துகிறார்

குழந்தை இயேசுவில், கடவுள், தம்மை வெளிப்படுத்தும் முறைகளை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 05, இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“குழந்தை இயேசுவில், கடவுள், தம்மையே அன்புள்ளவராக, நன்மைத்தனம் நிறைந்தவராக, மற்றும், கருணையுள்ளவராக, வெளிப்படுத்துகிறார், இத்தகைய ஒரு கடவுளை, நம் முழு இதயத்தோடு, உண்மையாகவே அன்புகூரவேண்டும்” என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாயன்று பதிவாகியிருந்தன

திருக்காட்சிப் பெருவிழா திருப்பலி, மூவேளை செப உரை

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 6, இப்புதன், உரோம் நேரம் காலை பத்து மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், திருக்காட்சிப் பெருவிழாத் திருப்பலியை, குறைந்த அளவு மக்களின் பங்கேற்புடன் நிறைவேற்றுவார் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது.

இப்பெருவிழா நாளன்று, பகல் 12 மணிக்கு, வத்திக்கான் நூலகத்திலிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் மூவேளை செப உரை, நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலர் சபை நாள்

இன்னும், சனவரி 06, இப்புதனன்று, உலக பாலர் சபை நாளும் சிறப்பிக்கப்படுகின்றது. மறைப்பணியாளர் சிறார் நாள் எனவும் சிறப்பிக்கப்படும் இந்த உலக நாள், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களால் உருவாக்கப்பட்டது.

உலக அளவில் வறுமையில் வாடும் சிறாருக்கு, ஏனையச் சிறார் செபம் மற்றும், நிதியுதவியால் ஆதரவளிக்கவேண்டும் என்பதை ஊக்குவிக்கும் நோக்கத்தில், பிரெஞ்ச் ஆயர் Charles de Forbin-Janson அவர்கள், உலக பாலர் சபை நாளை, முதன்முதலில், 1843ம் ஆண்டு ஆரம்பித்தார்.

Comments are closed.