நவம்பர் 23 : நற்செய்தி வாசகம்

வறுமையில் வாடிய ஒரு கைம்பெண் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டார்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-4
அக்காலத்தில்
இயேசு நிமிர்ந்து பார்த்தபோது செல்வர்கள் தங்கள் காணிக்கைகளைக் காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதைக் கண்டார். வறுமையில் வாடிய ஒரு கைம்பெண்ணும் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டார்.
அவர், “இந்த ஏழைக் கைம்பெண் எல்லாரையும் விட மிகுதியான காணிக்கை போட்டிருக்கிறார் என உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து காணிக்கை போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————-
லூக்கா 21: 1-4
“பற்றாக்குறையிலிருந்து மிகுதியாக”
நிகழ்வு
மன்னன் ஒருவன் இருந்தான். அவன் ஒரு பெரிய கோயிலைக் கட்டத் தொடங்கினான். மேலும் தான் கட்டுகிற கோயிலுக்கு யாருமே பண உதவி தரக்கூடாது, தன்னிடம் உள்ள பணத்தால் மட்டுமே அந்தக் கோயில் கட்டப்படும் என்று அறிவித்துவிட்டுக் கல்வெட்டில், இந்தக் கோயில் இன்னாரால் கட்டப்பட்டது என்று தன்னுடைய பெயரைப் பொறித்து வைத்தான்.
அன்றிரவு அவன் ஒரு கனவு கண்டான். அந்தக் கனவில், அவன் கோயில் கல்வெட்டில் தன்னுடைய பெயர் பொறிக்கப்பட்டிருந்த இடத்தில், ஒரு பெண்மணியின் பெயர் பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்து போனான். மறுநாள் காலையில் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்ததும் முதல்வேலையாக அவன் கோயில் கல்வெட்டில் இருந்த பெண்மணியின் பெயரை நீக்கிவிட்டுத் தன்னுடைய பெயரைப் பொறித்து வைத்தான்.
அன்றிரவும் அவன் அதேபோல் கனவு கண்டான். மறுநாள் காலையில் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்ததும் முதல் வேலையாக அவன் கோயில் கல்வெட்டியில் இருந்த பெண்மணியின் பெயரை நீக்கிவிட்டு, தன்னுடைய பெயரைப் பொறித்தான். இப்படியே நாள்கள் சென்றுகொண்டிருந்தன. ஒருநாள் அவன் பொறுமை இழந்து, கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கும் அந்தப் பெண்மணி யார் என்று விசாரித்து, அவரைத் தன்னிடம் அழைத்து வரச் சொன்னான். மன்னனின் அழைப்பின் பேரில் அந்தப் பெண்மணியும் அங்கு வந்தார்.
“கோயில் கல்வெட்டில் உன்னுடைய பெயர் பொறிக்கப்படும் அளவுக்கு நீ அப்படி என்ன செய்தாய்?” என்று சீறினான் மன்னன். “மன்னா! நானோ கணவனை இழந்த ஒரு கைம்பெண்; ஏழை. நான் என்னுடைய அன்றாடத் தேவைக்குப் போக, மீதமிருந்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைத்துவந்தேன். இந்த நேரத்தில்தான் நீங்கள் கோயில் கட்டத் தொடங்கினீர்கள். கோயில் திருப்பணிக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்யலாம் என்று இருந்தேன். நீங்கள் யாரும் பண உதவியோ, பொருள் பொருள் உதவியோ செய்யக்கூடாது என்று கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டீர்கள். அதனால்தான் நான் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த பணத்தை கோயிலுக்குச் சலவைக் கற்களைச் சுமந்துகொண்டு வரும் காளை மாடுகளுக்கு உணவிட – வைக்கோல் வாங்கித்தரப் – பயன்படுத்தினேன். நான் செய்தது இதுதான்” என்று பொறுமையாகச் சொல்லி முடித்தார் அந்தப் பெண்மணி. இதைக் கேட்டதும் மன்னனின் ஆணவம் அடங்கியது.
இந்த நிகழ்வில் வருகின்ற மன்னன், கடவுளுக்கு நான்தான் கோயிலிலைக் கட்டுவேன்; என்னுடைய பெயர்தான் கல்வெட்டில் நிலைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தபொழுது, கடவுளோ கோயில் திருப்பணிக்குத் தன்னால் இன்றைய உதவியைச் செய்த பெண்மணியின் பெயரை நிலைக்கச் செய்தார். ஆம், நாம் கடவுளுக்கு எவ்வளவு கொடுக்கின்றோம் என்பது பெரிதல்ல, அதை எப்படிக் கொடுக்கின்றோம் என்பதே பெரிது. இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துக்கூறுகின்றது. அதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மிகுதியான செல்வத்திலிருந்து காணிக்கை செலுத்திய செல்வந்தர்கள்
எருசலேமிற்குள் வெற்றிவீரராய் வந்த இயேசு, அங்கேயே தங்கி மக்களுக்குக் கற்பித்து வந்தார். இன்றைய நற்செய்தியில் அவர் பெண்கள் பகுதியில் இருந்த காணிக்கைப் பெட்டிக்கு முன்பாக அமர்ந்துகொண்டு, அதில் காணிக்கை செலுத்துபவர்களைக் கவனித்துக் கொண்டு இருக்கின்றார். எருசலேம் திருக்கோயிலில் நடைபெற்ற பல்வேறு பணிகளுக்காக, தேவைகளுக்காக அங்குப் பன்னிரண்டு காணிக்கைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன அவற்றில் மக்கள் காணிக்கை செலுத்திக் கொண்டிருந்தார்கள். மேலும் அது பாஸ்கா காலம் என்பதால், செல்வந்தர்கள் மிகுதியாகக் காணிக்கை செலுத்தினார்கள். அவர்கள் மிகுதியாகக் காணிக்கை செலுத்தியது இயேசுவின் கவனத்தை ஈர்க்கவில்லை; மாறாக, ஒருவர் செலுத்திய காணிக்கை இயேசுவின் கவனத்தை ஈர்த்தது. அது ஏன் அந்த ஒருவர் செலுத்திய காணிக்கை இயேசுவின் கவனத்தை ஈர்த்தது என்று நாம் தொடர்ந்து சிந்திப்போம்.
பற்றாக்குறையிலிருந்து காணிக்கை செலுத்திய ஏழைக் கைம்பெண்
இன்றைய நற்செய்திப் பகுதிக்கு முந்தைய பகுதியில் இயேசு, கைம்பெண்களின் வீடுகளைப் பறித்துக் கொண்டதற்காக மறைநூல் அறிஞர்களைக் கடுமையாகச் சாடுவார் (லூக் 20: 47). இதனால் கைம்பெண் அதிகாரத்தில் இருந்த பலரால் வஞ்சிக்கப்பட்டார்கள் என்பதை அறிந்து நாம் கொள்ளலாம். இப்படிப்பட்ட நிலையில் இருந்து, தன்னுடைய பற்றாக்குறையிலிருந்து நற்செய்தியில் வரும் கைம்பெண் இரண்டு காசுகளைக் காணிக்கையாகச் செலுத்துகின்றார். இதனாலேயே கைம்பெண்ணின் காணிக்கை செல்வந்தர்கள் செலுத்திய காணிக்கையாக விட இயேசுவுக்கு மிகுதியாகத் தெரிந்தது.
மேலும் இயேசு மக்கள் எவ்வளவு காணிக்கையை செலுத்தினார்கள் என்று பார்க்கவில்லை. காணிக்கை செலுத்திய பின் அவர்களிடம் எவ்வளவு இருந்தது என்பதைப் பார்த்தார். கைம்பெண் தன் பிழைப்பிற்காக வைத்திருந்தவற்றிலிருந்து காணிக்கை செலுத்தியதால், அவர் காணிக்கை செலுத்திய பின் அவரிடம் ஒன்றும் இல்லை. இறைவனை முழுமையாக நம்பியே இப்படியொரு செயலைச் செய்தார் அவர் என்று இயேசு அவரைப் பாராட்டுகின்றார்.
நாம் இறைவனுக்குக் காணிக்கை செலுத்துகின்றபொழுது எத்தகைய மனநிலையோடு காணிக்கை செலுத்துகின்றோம். சிந்திப்போம்.
சிந்தனை
‘மாசிதோனியத் திருஅவையினர் வறுமையில் மூழ்கி இருந்தாலும் வள்ளன்மையோடு வாரி வழங்கினார்கள்’ (2 கொரி 8: 2) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் வறுமையில் இருந்தாலும் வள்ளன்மையோடு இறைவனுக்கு வாரி வழங்குவோம். இறைவனை நம்பி நம்முடைய வாழ்க்கையை வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.