கிறிஸ்து அரசர் பெருவிழா (நவம்பர் 22)

I எசேக்கியேல் 34: 11-12, 15-17
II 1 கொரிந்தியர் 15: 20-26, 28
III மத்தேயு 25: 31-46

வறியவர்களைத் தேடிவந்த (ஆயர்) அரசர்

நிகழ்வு

பிரான்சு நாட்டில் உள்ள திஞ்சு என்ற நகரில் மியோலிஸ் என்றோர் ஆயர் இருந்தார். இவர் ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலி நிறைவேற்றிவிட்டு, நாட்டுப் புறங்களுக்குச் சென்று, ஞாயிறு மறைக்கல்வி எடுப்பது வழக்கம்.

ஒரு ஞாயிற்றுக்கிழமைக் காலையில் இவர் திருப்பலி நிறைவேற்றிவிட்டு, வழக்கம் போல் நாட்டுப் புறங்களுக்குச் சென்றுகொண்டிருக்கும்பொழுது, சிறுவன் ஒருவன் ஆடுமேய்த்துக்கொண்டிருப்பதைக் கண்டார். அவனோடு இவர் பேசியதிலிருந்து, அவன் ஞாயிறுத் திருப்பலி காணவில்லை என்பது தெரிந்தது. உடனே இவர் அந்தச் சிறுவனிடம், “உன்னுடைய ஆடுகளை நான் மேய்த்துகொண்டிருக்கின்றேன். நீ போய் பக்கத்துப் பங்கில் நடைபெறும் திருப்பலியில் பங்கேற்றுவிட்டு வா” என்றார். சிறுவனும் தன்னிடமிருந்த கோலை ஆயரிடம் கொடுத்துவிட்டு, திருப்பலியில் பங்குபெறச் சென்றான்.

சிறுவன் திருப்பலியில் பங்கேற்றுவிட்டுக் கோயிலைவிட்டு வெளியே வந்தபொழுது, அவனுடைய முதலாளி, “உன்னை நான் ஆடுமேய்க்க அனுப்பி வைத்தால், நீ இப்படிக் கோயிலுக்கு வந்திருக்கின்றாய்? ஆடுகளை என்ன செய்தாய்?” என்றார். சிறுவன் நடந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னான். “ஆடுகளைத் களவாடுவதற்குத்தான், திருடன் ஆயர் வேடம் போட்டு வந்திருப்பான். இதுகூடத் தெரியாமல், நீ ஆடுகளை எல்லாம் அவனிடம் ஒப்படைத்துவிட்டு வந்திருக்கின்றாயே!” என்று திட்டிக்கொண்டே முதலாளி அந்தச் சிறுவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த இடத்திற்கு ஓடினார்.

முதலாளி, அந்த இடத்திற்கு வந்தபொழுது, ஆயர் தன்னுடைய கோலை ஏந்தியவாறு ஆடுகளை மேய்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு, சிறுவன் சொன்னது உண்மைதான் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார். பின்னர் அந்த மனிதரிடம் ஆயர் ஒருசில வார்த்தைகள் பேசினார். அந்த வார்த்தைகளைக் கேட்ட முதலாளி, நடந்த தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டு, இனிமேல் சிறுவனை ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலித் தவறாமல் அனுப்பி வைக்கின்றேன் என்றார்.

இந்த நிகழ்வில் வருகின்ற ஆயர் மியோலிஸ், தன் மந்தையை, மக்களைத் தேடிவந்தார். இன்று நாம் கொண்டாடுகின்ற ஆயரும் அரசருமான கிறிஸ்துவும் தன் மக்களைத் தேடிவந்து, அவர்களுக்கு வாழ்வளிப்பவராக இருந்தார். ஆம், இன்று நாம் கிறிஸ்து அரசர் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இப்பெருவிழா நமக்கு உணர்த்தும் செய்திகள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஒரு நல்ல அரசரை எப்படி இனங்கண்டு கொள்வது?

வரலாற்றைப் புரட்டிப் பார்க்கின்றபொழுது எத்தனையோ அரசர்களை நாம் எதிர்கொள்கின்றோம். ஒரு சில அரசர்கள் கொடுங்கோலர்களாகவும், வேறு சில அரசர்கள் மக்கள்மீது அக்கறையில்லாதவர்களாகவும், மற்றும் சில அரசர்கள் நாட்டின் எல்லையை விரிவுபடுத்துவதிலேயே தங்களுடைய வாழ்வின் பெரும்பகுதியைச் செலவிட்டவர்களாகவும், வெகு சில அரசர்கள் நல்லவர்களாகவும் இருந்ததை நாம் வாசிக்கின்றோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நல்ல அரசருக்கான அடையாளம் எது…? இயேசு எப்படி நல்ல அரசராக, நல்ல ஆயராக இருக்கின்றார்…? என்பன குறித்துத் தெரிந்துகொள்வது நல்லது.

மிகப்பெரிய சிந்தனையாளரும், அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபரான ஹர்பர்ட் ஹம்ப்ரே (Hurbert Humphrey), “ஓர் அரசு நல்ல அரசா அல்லது கெட்ட அரசா என்பதை, அது அந்த நாட்டில் உள்ள வயது முதிர்ந்தவர்களையும் குழந்தைகளையும் நோயாளர்களையும் தேவையில் உள்ளவர்களையும் உடல் ஊனமுற்றவர்களையும் எப்படி நடத்துகின்றது என்பதைக் கொண்டு அறிந்துகொள்ளலாம்” என்பார். ஹர்பர்ட் ஹம்ப்ரேவின் இவ்வார்த்தைகளைக் கொண்டு, கிறிஸ்து அரசர் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

இயேசு என்னும் மக்கள் அரசர்

தன் நாட்டிலுள்ள வறியவர்களை எந்த அரசு நல்லமுறையில் பேணிப் பராமரிக்கின்றதோ, அந்த அரசு நல்ல அரசு என்று ஹர்பர்ட் ஹம்ப்ரே சொன்னதைக் மேலே பார்த்தோம். அவருடைய வார்த்தைகளைக் கிறிஸ்து அரசரோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றபொழுது, அவருடைய அரசு, நல்ல அரசு என்று சொல்லலாம். ஏனென்றால், இயேசு சமூகத்தில் இருந்த விளிம்பு நிலை மக்களான ஏழைகளை, கைவிடப்பட்டவர்களை, பாவிகளை, குழந்தைகளை, பெண்களைத் தேடிச் சென்று அவர்களுக்குப் புதுவாழ்வு தந்தார். இவ்வாறு இயேசு ஒரு நல்ல, ஒப்பற்ற அரசராகத் திகழ்ந்தார், திகழ்கின்றார்.

கிறிஸ்துவை நாம் நல்ல அரசர் என்று அழைத்தாலும், அவர் தன்னை ஒரு நல்ல ஆயர் என்றே அழைத்தார் (யோவா 10: 11). அந்த அடிப்படையில் இயேசு சமூகத்தில் வறிய நிலையிலிருந்தவர்களுக்கு வாழ்வு தந்து, அவர் நல்ல ஆயராகத் திகழ்கின்றார். இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் ஆண்டவராகிய கடவுள் எப்படி ஒரு நல்ல ஆயராக இருக்கின்றார் என்பதைப் பட்டியலிடுகின்றது. சிதறுண்ட, காணாமல் போன ஆடுகளைத் தேடுவேன்; காயப்பட்டதற்குக் கட்டுப்போடுவேன்; நலிவுற்றவற்றைத் திடப்படுத்துவேன் என்று ஆண்டவராகிய சொல்லக்கூடிய வார்த்தைகள் யாவும் இயேசுவில் அப்படியே பொருந்திப் போகின்றன. இவற்றின்படி பார்க்கின்றபொழுது இயேசுவை ஒரு நல்ல ஆயராக, அரசராகச் சொல்லலாம்.

மக்கள்மீது பரிவுகொள்வோருக்கே இறையாட்சியில் இடமுண்டு

இயேசு ஒரு நல்ல அரசராக, நல்ல ஆயராக இருக்கின்றார் எனில், அவரது ஆட்சியில் பங்குபெறுவதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

மத்தேயு நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறுதித் தீர்ப்பின்பொழுது என்ன நடக்கும் என்பதைக் குறித்து வாசிக்கின்றோம். இதில் பசியாய் இருந்தோருக்கு உணவளித்தோரும், தாகமாய் இருந்தோருக்குத் தண்ணீர் அளித்தோரும், அன்னியரை ஏற்றுக்கொண்டோரும், ஆடையின்றி இருந்தோருக்கு ஆடை அளித்தோரும், நோயுற்றிருந்தோரைக் கவனித்துக் கொண்டோரும், சிறையில் இருந்தவரைத் தேடிச் சென்றோரும் இறையாட்சியை உரிமைப் பேறாகப் பெறுவதை நாம் வாசிக்கின்றோம்.

ஆம், கிறிஸ்து அரசர் வறியோரைப் பேணிக் காத்ததுபோல், யாரெல்லாம் வறியோரை, தேவையில் உள்ளவரை பேணிக் காக்கின்றாரோ அவர் கிறிஸ்துவின் ஆட்சியில் அல்லது இறையாட்சியில் பங்குபெறும் பேற்றினைப் பெறுகின்றார். இன்றைக்கு இருக்கின்ற அரசர்களும் தலைவர்களும்; ஏன் நாம் கூட வரியவர்களைக் கண்டும் காணாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இத்தகைய சூழநிலையில் நாம் வறியோரைத் தேடிச் சென்ற, கிறிஸ்து அரசரைப் போன்று, வறியோரிடம் நம்முடைய அன்பைச் செயலில் வெளிப்படுத்தி, இறையரசை உரிமைப் பேறாகப் பெறுவோம்.

சிந்தனை

‘அரசன் செல்லும் வழிகளிலேயே குடிகளும் செல்வர்; அரசனுடைய கட்டளைகளைப் பார்க்கினும், அவன் வாழ்க்கையில் நடந்து காட்டும் முறையே மிகுந்த வலிமையுள்ளது’ என்பார் கிளாடியன் என்ற அறிஞர். தன்னுடைய வாழ்வால் ஓர் அரசர் எப்படி இருக்கவேண்டும் என்பதை இவ்வுலகிற்கு உணர்த்திய கிறிஸ்து அரசரின் வழியில் நாமும் நடந்து, அவரது ஆட்சியில் பங்குபெறும் உரிமையைப் பெற்று, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.