ஞாயிறும், திங்களும், 10 இலட்சம் குழந்தைகளின் செபமாலை

ஆறுதலின் அன்னையாம் அன்னைமரியாவை நோக்கி செபிக்க செபமாலையை கரங்களில் ஏந்துவோம் என்ற அழைப்புடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 19, இத்திங்களன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

‘உண்மையான நம்பிக்கை, மற்றும், ஆறுதலின் அடையாளமான நம் அன்னையாம் மரியாவை நோக்கி நம் பார்வையை எழுப்பி, செபமாலையை கரங்களில் ஏந்த நான் மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். இன்று, உலகின் அமைதி, மற்றும், ஒன்றிப்பிற்காக பத்து இலட்சம் குழந்தைகள் உலகம் முழுவதும் செபமாலையை செபித்துக்  கொண்டிருக்கிறார்கள்’ என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்ட மூன்று டுவிட்டர் செய்திகளில், முதல் செய்தியிலும், இவ்வுலகை தீமையிலிருந்தும்  சோதனைகளிலிருந்தும் காக்கும் ஆயுதமான செபமாலையை கரங்களில் ஏந்தி, ஒவ்வொரு நாளும் செபிப்போம் என அழைப்பு விடுத்திருந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தன் இரண்டாவது டுவிட்டரில், மறைப்பரப்புப்பணியில் இயேசுவும் தூய ஆவியாரும் எவ்வகைகளில் நமக்கு உதவுகிறார்கள் என்பது குறித்தும், மூன்றாவது டுவிட்டரில், நாம் இறைவனுக்கு சொந்தமானவர்கள் எனினும், நாம் உலகிலிருந்து தனிமைப்பட்டவர்களாக இல்லாமல், பொதுநலனுக்காக அன்பின் பணியாளர்களாக செயல்படவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறோம், எனவும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.