அக்டோபர் 15 : நற்செய்தி வாசகம்

ஆபேலின் இரத்தம் முதல் சக்கரியாவின் இரத்தம் வரை, இறைவாக்கினர் அனைவரின் இரத்தத்திற்காகக் கணக்குக் கேட்கப்படும்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 47-54
அக்காலத்தில்
இயேசு கூறியது: “ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் இறைவாக்கினருக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புகிறீர்கள். ஆனால் அவர்களைக் கொலை செய்தவர்கள் உங்கள் மூதாதையர்களே. உங்கள் மூதாதையரின் செயல்களுக்கு நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்; அவற்றுக்கு உடன்பட்டும் இருக்கிறீர்கள். அவர்கள் கொலை செய்தார்கள்; நீங்கள் நினைவுச் சின்னம் எழுப்புகிறீர்கள்.
இதை முன்னிட்டே கடவுளின் ஞானம் இவ்வாறு கூறுகிறது: நான் அவர்களிடம் இறைவாக்கினரையும் திருத்தூதரையும் அனுப்புவேன். அவர்களுள் சிலரைக் கொலை செய்வார்கள்; சிலரைத் துன்புறுத்துவார்கள். ஆபேலின் இரத்தம் முதல், பலிபீடத்திற்கும் தூயகத்திற்கும் நடுவே சிந்தப்பட்ட சக்கரியாவின் இரத்தம் வரை, உலகம் தோன்றியதிலிருந்து சிந்தப்பட்ட இறைவாக்கினர் அனைவரின் இரத்தத்திற்காக இந்தத் தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும். ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்தத் தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும்.
ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்குக் கேடு! ஏனெனில் அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள். நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்.” இயேசு அங்கிருந்து புறப்பட்டபோது மறைநூல் அறிஞரும் பரிசேயரும் பகைமை உணர்வு மிகுந்தவராய் அவரது பேச்சில் அவரைச் சிக்கவைக்குமாறு பல கேள்விகளைக் கேட்டனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————
நீங்கள் தடைக்கல்லா? படிக்கல்லா?
நிகழ்வு
ஒரு சிற்றூரில் எட்மண்ட் என்றோர் இளைஞன் இருந்தான். மரியாவின்மீதும் இயேசுவின்மீதும் மிகுந்த பற்றுக்கொண்டிருந்த இவன், ஒருநாள்கூடத் தவறாமல் கோயிலுக்குச் சென்று, திருப்பலியில் கலந்து கொள்வான். மட்டுமல்லாமல், திருவிவிலியம் வாசிப்பது, செபமாலை சொல்வது போன்ற பக்தி முயற்சிகளைத் தவறாது மேற்கொண்டு வந்தான்.
இப்படிப்பட்டவன் மேற்படிப்பிற்காகப் பெருநகருக்குச் சென்றான். அங்கு இவனுக்குப் புதிதாக ஒருசில நண்பர்கள் கிடைத்தார்கள். இவனும் அவர்கள் நல்லவர்கள் என்று நினைத்துப் பழகி வந்தான். ஒருநாள் நண்பர்களோடு இவன் பேசிக்கொண்டிருந்தபொழுது, அவர்களுடைய பேச்சு வேறொரு திசையை நோக்கிச் சென்றது. ஆம், அவர்கள் ஆபாசமாகப் பேசத் தொடங்கினார்கள். இது எட்மண்ட்டிற்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ‘இவர்களை நாம் நல்லவர்கள் என்று நம்பிப் பேசினால், இப்படி ஆபாசமாகப் பேசுகின்றார்களே! இனிமேலும் இவர்களோடு நாம் நட்பு பாராட்டினால், அது அவ்வளவு நல்லதல்ல’ என்று நினைத்துக்கொண்டு, அவர்களிடமிருந்து விலகி, ஒரு சாலையில் தனியாக நடந்துசென்றான்.
அவ்வாறு இவன் நடந்து சென்றுகொண்டிருக்கும்பொழுது, எதிரில் ஒரு மனிதர் வந்தார். அவருடைய நெற்றியில், ‘நாசரேத்து இயேசு’ என்று பொறிக்கப்பட்டிருந்தது. ‘இப்பொழுது நான் பார்ப்பது நாசரேத்து இயேசுவா?’ என்று எட்மண்ட் நினைத்துக் கொண்டிருக்கையிலேயே அவர் பேசத் தொடங்கினார்: “நீ நினைப்பது போல் நான் நாசரேத்து இயேசுதான்! நீ துன்மாதிரியான நண்பர்களை விட்டு விலகியதால்தான் நான் உனக்குக் காட்சி தருகின்றேன். ஒருவேளை நீ மட்டும் அவர்களோடு தொடர்ந்து நட்பு பாராட்டினால், நான் உனக்குக் காட்சி தந்திருக்கமாட்டேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மறைந்தார்.
இந்தக் கதையில் வருகின்ற எட்மண்ட் என்ற இளைஞனுக்கு அவனுடைய நண்பர்கள் துன்மாதிரியாக, அவன் புனிதத்தில் வளர தடைக்கல்லாக இருந்தது போன்று, இயேசுவின் காலத்தில் வாழ்ந்த திருச்சட்ட அறிஞர்கள், சாதாரண மக்களுடைய முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய தடையாக இருந்தார்கள். திருச்சட்ட அறிஞர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் செய்த தவறு என்ன? நம்முடைய வாழ்வை நாம் எப்படிக் கடவுளுக்கு உகந்ததாய் மாற்றுக்கொள்வது? என்பன குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
விண்ணகத்திற்குள் யாரையும் நுழைய விடாமல் செய்த திருச்சட்ட அறிஞர்கள்
திருச்சட்ட அறிஞர்களுக்குத் தாங்கள் கற்றறிந்த திருச்சட்டத்தை மக்களுக்குப் போதித்து, அவர்களை இறைவழியில் நடத்தி, அதன்மூலம் அவர்களை விண்ணகத்திற்கு இட்டுச் செல்ல வேண்டிய தலையாய கடமை இருந்தது; ஆனால், அவர்கள் திருச்சட்டத்தை மக்களுக்குச் சரியாகப் போதிக்கவும் இல்லை; மக்களை இறைவழியில் நடத்தி, அவர்களை விண்ணகத்திற்கு இட்டுச் செல்லவும் இல்லை. இவ்வாறு அவர்கள் மக்களையும் விண்ணகத்திற்கு விண்ணகத்திற்கு இட்டுச் செல்லவில்லை; அவர்களும் விண்ணகத்திற்குள் நுழையவில்லை. இதனாலேயே இயேசு திருச்சட்ட அறிஞர்களைச் சாடுகின்றார்.
நாம் ஒவ்வொருவரும் மற்றவருக்குக் காவலாளிகள்!
தொடக்க நூலில், ஆண்டவராகிய கடவுள் காயினிடம், “உன் சகோதரன் ஆபேல் எங்கே? என்று கேட்கும்பொழுது, காயின் ஆண்டவரிடம், “….நான் என்ன என் சகோதரனுக்குக் காவலாளியோ?” (தொநூ 4: 9) என்பான். காயின் இதைத் தெரிந்து சொன்னானோ, தெரியாமல் சொன்னானோ, உண்மையில் நாம் ஒவ்வொருவரும் நம் சகோதரர் சகோதரிகளுக்குக் காவலாலிகளே!
காவலாளிகள் என்றால், நம் சகோதரர் சகோதரிகளுக்கு எந்தவோர் ஆபத்தும் இல்லாமல் காப்பது மட்டும் கிடையாது; அவர்களுடைய வளர்ச்சிக்கு நாம் காரணமாக இருக்கவேண்டும். இதை வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், நாம் ஒவ்வொருவரும் நம்மோடு வாழக்கூடிய சகோதரர் சகோதரிகளின் வளர்ச்சிக்குத் படிக்கல்லாக இருக்க வேண்டுமே ஒழிய, தடைக்கல்லாக இருக்கக்கூடாது; ஆனால் இன்றைக்குப் பலர் தங்களோடு வாழக்கூடியவர்களுக்குக் காவலாளிகளாக அல்லது படிக்கல்லாக இல்லாமல், தடைக்கல்லாக இருக்கின்றார்கள் என்பதுதான் மிகவும் கசப்பான உண்மையாக இருக்கின்றது.
மாற்கு நற்செய்தியில் இயேசு இவ்வாறு கூறுவார்: “என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டிக் கடலில் தள்ளுவதே அவர்களுக்கு நல்லது” (மாற் 9: 42). ஆம், யாரெல்லாம் மற்றவர்களுக்குத் தடைக்கல்லாக இருக்கின்றார்களோ, அவர்களுடைய கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டிக் கடலில் ஆழ்த்துவதே நல்லது.
ஆகையால், நாம் ஒவ்வொருவரும் மற்றவருக்குக் காவலாளிகள், படிக்கற்களாக இருக்க வேண்டியவர்கள் என்ற உண்மையை உணர்ந்தவர்களாய் வாழ்வோம்.
சிந்தனை
‘உடன்பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்’ (உரோ 12: 10) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் எல்லாரிடமும் உளங்கனிந்த அன்பு காட்டி, அவர்களுடைய வளர்ச்சிக்குப் படிக்கல்லாக இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.