நற்செய்தி வாசக மறையுரை (செப்டம்பர் 24)

பொதுக்காலம் இருபத்து ஐந்தாம் வாரம் வியாழக்கிழமை
லூக்கா 9: 7-9
குற்றவுணர்வோடு வாழ்ந்த குறுநில மன்னன் ஏரோது
நிகழ்வு
ஒரு நகரில் கைதேர்ந்த திருடன் ஒருவன் இருந்தான். ஒருநாள் இரவு இவன் ஒரு வங்கியில் திருடிவிட்டு, பணமூட்டையோடு சாலையில் வந்துகொண்டிருந்தான்.
அன்றிரவு கடுமையாக மழை பெய்துகொண்டிருந்ததால், இவன் சாலையின் ஓரமாக வந்துகொண்டிருந்தான். அந்த நேரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர், முதுகில் ஒரு மூட்டையோடு சாலை ஓரமாக மழையில் நனைந்துகொண்டே சென்ற இந்தத் திருடனைக் கண்டார். அவன் திருடன் என்று இவருக்குத் தெரியவில்லை… யாரோ ஒரு வழிப்போக்கர்தான் முதுகில் மூட்டையோடு இந்தக் கொட்டும் மழையில் நடந்துபோய்க் கொண்டிருக்கின்றார் என்று நினைத்து, அவர்மீது இரக்கம்கொண்டு, அவரைத் தன்னுடைய வண்டியில் ஏற்றுக்கொண்டு, அவர் போகவேண்டிய இடத்தில் போய் விட்டுவிடலாம் என்று முடிவுசெய்தார் இவர்.
இதனால் அந்தக் காவல்துறை அதிகாரி, வண்டியில் தன்னோடு வந்த உதவியாளரிடம், “சாலையின் ஓரமாகச் சென்றுகொண்டிருக்கும் அந்த மனிதரை அழைத்து வா” என்றார். உதவியாளரும் வண்டியிலிருந்து கீழே இறங்கி, ஒரு வழிப்போக்கரைப் போன்று முதுகில் ஒரு மூட்டையோடு சென்றுகொண்டிருந்த திருடனை அவன் அருகில் சென்று அழைத்தார். தன்னை அழைத்த காவலரைப் பார்த்ததுதான் தாமதம், திருடன் ஓட்டம் பிடிக்கத் தொடங்கினான். ‘நாம் இவனுக்கு உதவிசெய்வதற்குதானே அழைக்கின்றோம்…! இவன் ஏன் நம்மைப் பார்த்ததும் இந்த ஓட்டம் ஓடுகின்றான்…!’ என்று நினைத்துக்கொண்டு உதவியாளர் அவனைத் துரத்திக் கொண்டே போனார். ஒருகட்டத்தில் திருடன் ஒரு முட்டுச்சந்தில் மாட்டிக்கொள்ள உதவியாளர் அவனிடம், “என்னைப் பார்த்ததும், எதற்காக ஓடினாய்…?” என்று விசாரிக்க, அவன் வங்கியிலிருந்து திருடியிருக்கின்றான் என்ற உண்மை தெரிந்தது. இதனால் அவன் சிறையில் தள்ளப்பட்டான்.
‘குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்’ என்பார்களே! அதுபோன்று இந்த நிகழ்வில் வருகின்ற திருடன், காவல்துறை அதிகாரி அனுப்பி வைத்த உதவியாளர் – காவலர் – தனக்கு உதவிசெய்ய வருகின்றார் என்பது தெரியாமல், தன்னைப் பிடித்துச் செல்வதற்குத்தான் வருகின்றார் என நினைத்து, அவருடைய கையில் வசமாக மாட்டிக்கொண்டு, சிறையில் அடைபட்டான். இன்றைய நற்செய்தியில், திருமுழுக்கு யோவானைக் கொன்றுபோட்ட, குறுநில மன்னன் ஏரோது, இயேசுவைப் பற்றி அறிந்ததும், மனம் குழம்புகின்றான். அவன் ஏன் மனம் குழம்பவேண்டும்…? இன்றைய நற்செய்தியிலிருந்து நாம் செய்தியைக் கற்றுக்கொள்ளலாம்…? என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவைப் பார்க்க வாய்ப்புத் தேடிய குறுநில மன்னன்
இயேசுவின் பணிவாழ்வில் அவரைப் பார்க்கப் பலர் விரும்பினார்கள். மக்களோ இயேசுவின் வாயிலிருந்து வரும் அமுதமொழியைக் கேட்பதற்காக அவரைப் பார்க்க விரும்பினார்கள்; வரிதண்டுபவர்களின் தலைவரான சக்கேயு பாவத்திலிருந்து விடுதலை கிடைக்கவேண்டும் என்பதற்காக அவரைப் பார்க்க விரும்பினார் (லூக் 19: 3). இப்படிப் பலர் பல காரணங்களுக்காக இயேசுவைப் பார்க்க விரும்பினார்கள்; ஆனால், இன்றைய நற்செய்தியில் வரும் குறுநில மன்னன் ஏரோது குற்றுமுள்ள நெஞ்சத்தோடு இயேசுவைப் பார்க்க விரும்பினான்.
நேற்றைய நற்செய்தியில் இயேசு பன்னிருவரைப் பணித்தளங்களுக்கு அனுப்பியதைக் குறித்து நாம் வாசித்திருப்போம். பன்னிருவரும் இறையாட்சியைப் பற்றிய நற்செய்தியையும், இயேசுவைப் பற்றியும் அறிவித்த செய்தி ஏரோதுவின் செவிகளை எப்படியும் சென்று சேர்ந்திருக்கும். இதனால் அவன் “யோவானின் தலையை வெட்டச் செய்தேனே! இவர் யாரோ?” என்று இயேசுவைப் பார்க்க விரும்புகின்றான்.
பாவம் என்ற இருளை அகற்ற, இறையருள் என்ற ஒளியை ஏற்றவேண்டும்
இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரைப் பார்க்க விரும்பிய ஏரோது, இறுதியில் இயேசுவை அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும்பொழுது பார்ப்பான் (லூக் 23: 6-12). அப்படிப் பார்க்கும்பொழுது, அவன் அவரை இகழ்ந்து ஏளனம் செய்து பிலாத்துவிடம் அனுப்பி வைப்பான். இதை வைத்துப் பார்க்கும்பொழுது ஏரோது, இயேசுவை நல்ல எண்ணத்தோடு பார்க்க விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. இப்படிப்பட்டவன் யோவானைக் கொன்றுபோட்டுவிட்டோமே என்ற குற்றவுணர்வோடு கடைசிவரைக்கும் இருந்திருப்பான்; அப்படியே இறந்திருப்பான் என்பது உறுதி.
ஒருவர் ஒரு குற்றத்தைச் செய்து, அந்தக் குற்றவுணர்வோடு இருக்கின்றார் எனில், அதிலிருந்து வெளியேற, திருஅவை ஒப்புரவு அருளடையாளம் என்ற உயர்ந்தோர் அருளடையாளத்தைத் தந்திருக்கின்றது. இதை ஒருவர் மனப்பூர்வமாகச் செய்தால், அவர் குற்றவுணர்விலிருந்து வெளியே வரலாம். அதை விடுத்து, ஏரோதைப் போன்று குற்றவுணர்வோடு இருந்தால், அவனைப் போன்று அவர் நிம்மதியில்லாமல் இருக்கவேண்டியதுதான்.
ஆகையால், நாம் பாவத்திலிருந்தும் குற்றவுணர்விலிருந்தும் வெளியே வர ஒப்புரவு அருளடையாளத்தை நல்லமுறையில் மேற்கொண்டு, இறையருளால் நம்முடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவோம்.
சிந்தனை
‘ஒப்புரவு அருளடையாளம் நம்முடைய ஆன்மாவிற்கு வசந்தத்தைக் கொண்டு வருகின்றது’ என்பார் சகோதர் ரோஜர். ஆகையால், நாம் நம்முடைய குற்றவுணர்விலிருந்து வெளிவந்து, நிம்மதியான வாழ்க்கை வாழ நல்லதொரு ஒப்புரவு அருளடையாளத்தை மேற்கொண்டு, இறைவனோடும் அயலோடும் ஒன்றித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.