நற்செய்தி வாசக மறையுரை (மார்ச் 21)

தவக்காலம் மூன்றாம் வாரம் சனிக்கிழமை
லூக்கா 18: 9-14
“தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்”
நிகழ்வு
துறவி ஒருவர் இருந்தார். அவரிடத்தில் ஏராளமான சீடர்கள் இருந்தார்கள். ஒருநாள் அவர் சீடர்களிடத்தில், “ஆன்மிகப் பயணத்தில் ஒருவருடைய வளர்ச்சிக்கு எது தடையாக இருக்கின்றது?” என்று கேட்டார்.
உடனே ஒருவர், “பணம்’ என்றார். இன்னொருவர், “தீய நாட்டம்” என்றார். மற்றொருவர், “உலகப் போக்கிலான வாழ்க்கை” என்றார். இப்படி ஒவ்வொரு சீடரும் ஒரு பதிலைச் சொல்லிவிட்டு அமர்ந்த பிறகு, துறவி அவர்களிடம் பொறுமையாகப் பேசத் தொடங்கினார்: “ஒருவருடைய ஆன்மிகப் பயணத்தில், அவருடைய வளர்ச்சிக்கு நீங்கள் சொன்னவை எல்லாம் ஏதோவொரு விதத்தில் தடையாக இருந்தாலும், அவருடைய வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது ‘தான் என்ற ஆணவம்’தான். அது மட்டும் ஒருவரிடத்தில் இருந்தால், அவரால் ஆன்மிகப் பயணத்தில் முன்னேறவே முடியாது.”
ஆம், தான் என்ற ஆணவம் ஒருவருடைய ஆன்மிக வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகம், தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர் என்ற செய்தியை எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நின்றுகொண்டு வேண்டிய பரிசேயர்
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, இறைவனிடம் எத்தகைய மனநிலையோடு வேண்டவேண்டும் என்ற செய்தியை வலியுறுத்திக்கூறுகின்றார். இந்த நற்செய்திப் பகுதிக்கு முந்தைய பகுதியில் (லூக் 18: 1-8) இறைவனிடம் மனம்தளராது மன்றாடவேண்டும் என்ற செய்தியை இயேசு வலியுறுத்திக்கூறுவார். இன்றைய நற்செய்தியிலோ எத்தகைய மனநிலையோடு இறைவனிடம் மன்றாடவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறுகின்றார். ஆண்டவர் இயேசு இந்த உண்மையை விளக்கிச் சொல்ல ஓர் உவமையைச் சொல்கின்றார். அதுதான் பரிசேயர், வரிதண்டுபவர் உவமை.
இயேசு சொல்லும் இந்த உவமையில் வருகின்ற பரிசேயர், நின்றுகொண்டு இறைவனிடம் வேண்டியதாக நற்செய்தியில் வாசிக்கின்றோம். இறைவனுடைய அருளையும் இரக்கத்தையும் வேண்டுகின்ற ஒருவர், இறைவனுக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தவேண்டும்; ஆனால், பரிசேயரோ நின்றுகொண்டு வேண்டுகின்றார். இதுவே அவர் இறைவனுடைய அருளையும் இரக்கத்தையும் பெற முடியாமல் செய்துவிடுகின்றது. பரிசேயர் இறைவனுக்கு முன்பாக நின்றுகொண்டு மட்டும் வேண்டவில்லை; இறைவேண்டல் என்ற பெயரில் மற்றவர்களைக் குறைகூறிக்கொண்டும் தன்னைப் பற்றித் தம்பட்டம் அடித்துக்கொண்டும் இருந்தார்.
ஆம், பரிசேயருடைய இறைவேண்டலில், இறைவேண்டலுக்கான எந்தவொரு கூறும் இல்லை. மாறாக தன்னைப் பற்றிய தப்பட்டமும் மற்றவர்களைப் பற்றிய குறையுமே இருந்தன. இதனால்தான் அவருடைய வேண்டுதல் இறைவனுக்கு ஏற்றதாக இல்லை.
அண்ணார்ந்து பார்க்கத் துணியாமல் வேண்டிய வரிதாண்டுபவர்
இயேசு சொல்லும் உவமையில் வருகின்ற இரண்டாவது மனிதர் வரிதண்டுபவர். இவரைப் போன்றவர்கள், தங்களை நேர்மையாளர்கள் என்று காட்டிக்கொண்ட பரிசேயர்களின் இகழ்ச்சிக்கு உள்ளானவர்கள். இப்படிப்பட்டவர்களுள் ஒருவர்தான் கோயிலுக்கு வந்து, இறைவனிடம் வேண்டுகின்றார்.
இவர் இறைவனிடம் வேண்டுகின்றபொழுது, வானத்தை அண்ணார்ந்து பார்க்கக்கூடத் துணியாமல், தம் மார்பில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே! பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்று சொல்லி மன்றாடுகின்றார். இவர் வானத்தை அண்ணார்ந்து பார்க்கக்கூடத் துணியாததும் இவர் சொல்லும் வார்த்தைகளும் நம்முடைய கவனத்திற்கு உரியவையாக இருக்கின்றன. உண்மையில், இறைவனுக்கு முன்பாகத் தான் ஒன்றுமில்லை என்று உணர்கின்ற ஒருவரால்தான் இப்படி நடந்துகொள்ளவும் மன்றாடவும் முடியும். இவர் இறைவனுக்கு முன்பாகத் தான் ஒன்றுமில்லை என்பதை உணர்ந்தார். அதனால்தான் இவர் வானத்தை அண்ணார்ந்து பார்க்காமலும் தன்னைப் பாவி என்று உணர்ந்தும் மன்றாடினார்.
தாழ்ச்சியுடையோர் வீழ்ச்சியடையார்
இயேசு பரிசேயர் மற்றும் வரிதண்டுவோருடைய உவமையைச் சொல்லிவிட்டு, “பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்” என்று முடிக்கின்றார். ஆம், தான் என்ற ஆணவத்தோடு இறைவனிடம் வேண்டிய பரிசேயர் இறைவனுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்ப வில்லை; கடவுளுக்கு முன்பாகத் தான் ஒன்றுமில்லை என்று வேண்டிய வரிதண்டுபவரே, கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்புகின்றார். அப்படியானால், ஒருவருடைய உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவரிடம் இருக்கின்ற தாழ்ச்சி என்ற பண்பே காரணமாக இருக்கின்றது என்று உறுதியாகச் சொல்லலாம்.
ஆம், தாழ்ச்சியே எல்லாப் பண்புகளுக்கும் தாய். அத்தகைய உயரிய பண்பை நாம் நம்முடைய உள்ளத்தில் தாங்கி வாழ்வோம்.
சிந்தனை
‘தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்’ (சீஞா 35:17) என்கிறது சீராக்கின் ஞானநூல். ஆகையால், நாம் இறைவனுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்திக்கொண்டு வேண்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.