உத்தரிக்கிற ஆத்துமாக்கள் எத்தனை காலம் உத்தரிக்கிறார்கள் என்று காண்பிக்கிற வகையாவது
தியானம்
ஒரு சொற்ப வேதனையானாலும் வெகு நாளாய் அதை அனுபவிக்க வேண்டியதானால் பெரிதாகிப் பொறுக்கப்படாத வேதனையைக் காணப்படும் என்கிறதற்குச் சந்தேகமில்லை . போன தியானங்களிலே காண்பித்தாற் போல உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகள் அவ்வளவு கடினமும் அகோரமுமாய் இருக்கையிலே இவைகளை வெகு வருஷமாய் அனுபவிக்கிறது எவ்வளவு வருத்தமாய் இருந்திருக்க வேண்டும் என்று இப்போது யோசித்துக் கொள்ள வேண்டும்
மகா சாஸ்திரியான பெல்லாமீனூஸ் என்கிறவர் இவ்விஷயத்தில் எழுதினதாவது : சில ஆத்துமாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்து வேதனைகளில் பத்து , இருபது வருஷத்துக்கு அதிகம் , நூறு ஐந்நூறு வருஷத்துக்கு அதிகம் உபாதிக்கப்படுவார்கள் என்பது நிச்சயந்தான் என்ற பிற்பாடு , தாம் சொல்லுகிறதை அநேக உதாரணங்களினாலும் ,வேத பாரகருடைய வாக்கியங்களினாலும் , சில அர்சியசிஷ்டவர்களுடைய காட்சிகளாலும் ஒப்பித்துக் கொண்டு வருகிறார். இவைகளெல்லாம் இங்கே விவரிக்காமல் ஒன்றிரண்டு நியாயங்களை மாத்திரம் சொல்லிக் காட்டுவோம் .அது எப்படி என்றால் :
நீதியுள்ளவருமாய் சகலத்தையும் அறிகிறவருமாய் இருக்கிற சர்வேசுரன் சகலமான நற்கிரியைகளுக்கு மோட்சத்தில் வெகுமதி கொடுக்குமாப் போல சகலமான பாவங்களுக்கு தண்டனை இடுவாரென்பது தப்பில்லாத சத்திய விசுவாசமாம் . ஆகையால் ஒரு மனுஷனுக்கு நேரிடப்போகிற தண்டனை எவ்வளவென்று அறிவதற்கு அவன் செய்த பாவங்களுக்கு கணக்கேற்றிப் பார்க்க வேண்டுமல்லவோ ? இந்தப் பிரகாரமாய் முதன் முதலில் கிறிஸ்தவன் ஆன ஒரு நல்ல மனுஷனுடைய சொற்பப் பாவங்களை உத்தேசித்து எண்ணிக் கொள்ளலாம் . நீதிமானானவன் நாளொன்றுக்கு ஏழு தரம் பாவத்தைக் கட்டிக் கொள்ளுகிறான் என்று சத்திய வேதத்திலே எழுதி இருக்கிறது . இப்போது நாம் குறிக்கிற மனுஷன் நாள் ஒன்றுக்கு பத்து சொற்ப பாவங்களைக் கட்டிக் கொள்ளுகிறான் என்கிறாற்போல கணக்கு சொல்லலாம் . ஒரு வருஷத்திலே அந்த மனுஷன் நாளொன்றுக்கு பத்து பாவங்களைச் செய்கிற விதமாக ஒரு வருஷத்திலே மூவாயிரத்து அறுநூற்று ஐம்பது பாவங்களைக் கட்டிக் கொண்டிருப்பான் .பத்து வருஷத்துக்கு பிற்பாடு முப்பத்து ஆறாயிரத்து ஐந்நூறு பாவங்களைச் செய்திருப்பானே. இன்னும் வேறே பத்து வருஷம் இந்த மனுஷன் ஜீவித்திருந்தால் எழுபத்து மூன்றாயிரம் பாவங்களைச் செய்திருப்பான் அல்லவோ ? அப்படி இருபது வருஷத்துக்குள்ளாக எழுபத்து மூன்றாயிரம் பாவங்களைக் கட்டிக் கொண்ட மனுஷன் எவ்வளவாய் சர்வேசுரனுடைய நீதிக்குப் பரிகாரமாக தண்டனை இடப்பட வேண்டியதாய் இருக்கும் . ஒரு பாவத்துக்கு ஒரு நாள் உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்க வேண்டுமென்றாலும் முன் சொன்ன மனுஷன் எழுபத்து மூன்றாயிரம் நாள் அந்த அகோர நெருப்பிலே வேக வேண்டும் , எழுபத்து மூன்றாயிரம் நாள் சர்வேசுரனைக் காணாமல் இருக்க வேண்டும் , எழுபத்து மூன்றாயிரம் நாள் மேற்சொன்ன வேதனைகளை அனுபவிக்க வேண்டும் . எழுபத்து மூன்றாயிரம் நாள் காய்ச்சலோடும்,அல்லது பல்வலியோடும் அல்லது வாயிற்று வலியோடும் வருத்தப்பட்டுக் கிடக்க வேண்டுமென்றால் பொறுக்கக் கூடுமோ சொல்லுங்கள் . அந்தந்த பாவம் சொற்ப பாவமென்றாலும் அவைகள் அம்மாத்திரமான பெரும் தொகையாய் இருக்கிறதென்று கண்டு அப்பேற்பட்ட தண்டனைகளுக்குக் காரணம் ஆகிறதினால் அவைகளைச் சொற்ப போல்லாப்பென்று சொல்லுவீர்களோ ? பயப்படாமல் இருப்பீர்களோவென்று அர்ச் அகுஸ்தீனூஸ் கேட்கிறார் .
Comments are closed.