புதன் மறைக்கல்வியுரை : யாரென்று அறியாது வழிபட்ட தெய்வம்

துவக்க கால கிறிஸ்தவர்களின், குறிப்பாக, இயேசுவின் சீடர்களின் மறைத்தூதுப் பணிகள் குறித்து, திருத்தூதர் பணி நூலில் காணப்படுபவைகளை உள்ளடக்கி, மறைக்கல்வித் தொடரை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏதன்ஸ் நகரில் புனித பவுல் நற்செய்தி அறிவித்தது குறித்து இன்று எடுத்துரைத்தார்.

முதலில், திருத்தூதர் பணிகள் நூல், பிரிவு 17லிருந்து, ‘அரயோப்பாகு மன்றத்தின் நடுவில் பவுல் எழுந்து நின்று கூறியது: “ஏதென்சு நகர மக்களே, நீங்கள் மிகுந்த சமயப் பற்றுள்ளவர்கள் என்பதை நான் காண்கிறேன். 23நான் உங்களுடைய தொழுகையிடங்களை உற்றுப்பார்த்துக் கொண்டு வந்தபோது “அறியாத தெய்வத்துக்கு” என்று எழுதப்பட்டிருந்த பலிபீடம் ஒன்றைக் கண்டேன். நீங்கள் அறியாமல் வழிபட்டுக் கொண்டிருக்கும் அந்த தெய்வத்தையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்’ என்ற பகுதி வாசிக்கப்பட்ட பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைக்கல்வியுரை துவங்கியது.

அன்பு சகோதரர், சகோதரிகளே,  திருத்தூதர் பணிகள் நூல் எடுத்துரைப்பவைகள் குறித்த நம் தொடர் மறைக்கல்வியுரையில், இன்று, பிறசமய சார்புடைய உலகின் கலாச்சார தலைநகராக இருந்த ஏதன்ஸின்  அரயோப்பாகு மன்றத்தின் நடுவில் பவுல் எழுந்து நின்று போதித்தது குறித்து நோக்குவோம்.  சிலைகள் நிறைந்திருந்த அந்நகரில் போதித்த புனித பவுல் அவர்கள், அங்கு அவருக்கு செவிசாய்த்த மக்களின் சமயப்பற்று, மற்றும், உண்மையை அறிந்து கொள்வதற்குரிய அவர்களின் ஆவலுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக போதிக்கிறார். தொழுகைக்கூடங்களை உற்றுநோக்கிக் கொண்டுவந்தபோது, அறியாத தேய்வத்திற்கு என ஒதுக்கப்பட்டிருந்த பலிபீடத்தைப் பார்த்ததாகவும், உலகைப் படைத்த, அறிவெல்லையை கடந்த இறைவன், தன்னை வெளிப்படுத்தியுள்ளதாகவும், மனந்திரும்பலுக்கும், உண்மையின் முழுமையை நோக்கியும், மக்களுக்கு அழைப்பு விடுக்க தன் மகனை அனுப்பியதாகவும் எடுத்துரைக்கிறார் புனித பவுல். இருப்பினும், புனித பவுல், இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்ப்பு குறித்து பேசியபோது, மக்களில் ஆர்வம் குன்றியது. இறைவனின் ஞானமும் வல்லமையும் வெளிப்படுத்தப்பட்ட சிலுவையின் மறையுண்மை, கிரேக்கர்களின் கண்களுக்கு மடைமையாகத் தோன்றியது . ஆயினும், புனித பவுலின் போதனையால், அரயோப்பாகு மன்றத்தின் உறுப்பினராகிய தியோனிசியுவும், தாமரி எனும் பெண் ஒருவரும் உட்பட ஏதென்ஸ் நகர மக்கள் சிலர் மனந்திரும்பினர். நம்முடைய சொந்த கலாச்சாரத்தைக் குறித்தும் எண்ணும் நாம், புனித பவுலைப்போல் மக்களின் ஆழமான ஏக்கங்களை உணர்ந்தவர்களாக, இயேசு கிறிஸ்துவின் மறையுண்மைகளையும் அவரின் மீட்பளிக்கும் அன்பையும் அவர்களுக்கு பரிந்துரைப்போம்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த மக்களுக்கு வாழ்த்துக்களை வெளியிட்டு, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்

Comments are closed.