ஆண்மாக்கள் வணக்கம் மாதம் நவம்பர்-6

உத்தரிக்கிற ஸ்தலத்தில் ஆத்துமாக்கள் படுகிற வேதனைகளைக் குறிக்கிற விளக்கமாவது

தியானம்

உத்தரிக்கிற ஸ்தலம் உண்டென்றும் அதில் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் வேதனைப்படுகிறதென்றும் முன் செய்த தியானங்களில் எடுத்துக் காட்டப்பட்டது . இப்போது நீங்கள் இந்த ஆக்கினைகளுக்குப் பயந்திருக்கவும் ,அவைகளை வருவிக்கும் பாவங்களைச் செய்யாதிருக்கவும் , இந்த ஆக்கினைகளை அனுபவிக்கும் ஆத்துமங்களின் பேரில் இரக்கமாய் இருக்கவும் , இந்த வேதனைகள் எப்பேர்ப்பட்டதென்று ஆராய்ந்து தியானித்துப் பார்க்கக் கடவீர்கள்

ஒரு நாள் சில புத்தியில்லாத வாலிபர் , நாங்கள் நரகத்துக்குப் போகாமலிருந்தால் மாத்திரம் போதும் , உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போகிறது பாரமல்ல என்று சொல்லுவதை அர்ச்.அகுஸ்தீனூஸ் கேட்டு ஞான கோபம் கொண்டு ” நிர்பாக்கியரே ! அப்படிப் பேசாதீர்கள் . இவ்வுலகத்தின் வாதை வேதனைகள் எல்லாவற்றையும் கூட்டினாலும் , இவைகளெல்லாம் உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகளுக்கு நிகரல்லவென்று அறியக் கடவீர்கள் ” என்று வற்புறுத்திச் சொன்னார் . இந்த ஒரு சொல்லிலே எவ்வளவு உண்மை இருக்கிறது என்று கொஞ்ச நேரம் தியானிக்கக் கடவோம்

இவ்வுலகத்திலே மனுஷனை உபாதிக்கும் வியாதிகள் எத்தனை என்றும் எப்பேர்பட்டதென்றும் எவ்வளவு வருத்தமுள்ளதென்றும் யாராலே சொல்லக் கூடும் ? நேத்திர வலியும், காது வலியும் , பல் வலியும் வயிற்று வலியும் ,சூலைக் கட்டும் ,பக்க வாதமும் , குஷ்ட ரோகமும் , பலவகைப் பிளவையும் , இது முதலான வியாதிகளுக்குக் கணக்குண்டோ ? இந்தச் சகலமான வியாதிகளினாலே நேரிடும் வருத்தங்கள் எல்லாவற்றையும் ஒழுங்குடன் ஒரு மனுஷன் அனுபவிக்க வேண்டுமென்றால் அவைகளை பொறுக்கமாட்டான் என்று எல்லாரும் நினைப்பார்கள் அல்லவோ ? ஆயினும் உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகள் இப்போது சொன்ன வருத்தங்களுக்கு எல்லாம் மேற்பட்டதாய் இருக்கிறது என்று வேத சாஸ்திரிகள் நிச்சயிக்கிறார்களாம் . இவைகளைப் பொறுத்துக் கொள்ளுவீர்களோ , சொல்லுங்கள்

Comments are closed.