கேரளாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள்
ஏப்ரல் மாதத்தின் துவக்கத்திலிருந்து, கடந்த 16 நாள்களில், இந்தியாவின் கேரளா மாநிலத்தில் மூன்று கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் 16, இத்திங்களன்று கேரளாவின் காசரக்கோடு மாவட்டத்திலுள்ள உக்கிநட்கா என்ற ஊரில் அமைந்துள்ள இயேசுவின் திரு இருதயக் கோவில் கல்லறைத் தோட்ட வாசல் சிலுவையும், 7 கல்லறைகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்னதாக, ஏப்ரல் 10ம் தேதி, நெய்யாற்றின்கரா மறைமாவட்டத்திலுள்ள மேய்ப்புப்பணி மையத்தை, ஏறத்தாழ 500 பேர் கொண்ட கும்பல், கல்லெறிந்து சேதப்படுத்தியுள்ளனர்.
மேலும், உயிர்ப்பு விழாவுக்கு முந்திய நாளான புனித சனிக்கிழமையன்று, ஆலப்புழா மாவட்டத்திலுள்ள புன்னமூடு என்ற இடத்தில், ஆர்த்தடாக்ஸ் கோவில் ஒன்றை சேதப்படுத்தியதோடு, அக்கோவிலில் பணியாற்றும் கிறிஸ்தவப் போதகரையும் தாக்கியுள்ளனர்.
இத்தாக்குதல்கள் குறித்து கண்டனத்தை வெளியிட்ட இந்தியக் கிறிஸ்தவர்களின் உலக அவைத்தலைவர், சஜன் ஜார்ஜ் அவர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக எழுந்துள்ள விரோதப் போக்கு அண்மைய ஆண்டுகளில் அதிகம் வளர்ந்துள்ளது என்றும், இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
AsiaNews
Comments are closed.