நற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 05)

பொதுக்காலம் முப்பத்து ஒன்றாம் வாரம்
திங்கட்கிழமை
லூக்கா 14: 12-14

யாருக்கு விருந்தில் முதன்மையான இடம் கொடுக்கவேண்டும்?

நிகழ்வு

ஒருகாலத்தில் எலிமேலக், சூசா என்ற இரண்டு யூத இரபிகள் இருந்தார்கள். அவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகள்; இருவரும் சாதாரண உடை அணிந்துகொண்டு ஊர் ஊராகச் சென்று போதித்து வந்தார்கள். ஒருநாள் அவர்கள் போதித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார்கள். வழியில் இருட்டிவிட்டதால், இனிமேலும் ஊருக்குப் போவது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல என்பதை உணர்ந்து, சற்றுத் தொலைவில் தெரிந்த ஓர் ஊருக்குச் சென்றார்கள். அந்த ஊரின் பெயர் லோத்மிர் (Lodmir). அவ்வூருக்குள் நுழைகையில் விளக்குகள் எரிந்துகொண்டிருந்த ஒரு பெரிய வீட்டைக் கண்டார்கள். உடனே அவர்கள் இருவரும் அவ்வீட்டின் கதவைத் தட்டினார்கள்.

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் வெளியே வந்தார். அவரிடம் அந்த இரண்டு யூத இரபிகளும், “நாங்கள் இருவரும் தொலைதூரத்திலிருந்து வருகின்றோம். இன்று இரவு மட்டும் உங்களுடைய வீட்டில் தங்கிக்கொள்ளட்டுமா?” என்று கேட்டார்கள். உடனே அந்த வீட்டின் உரிமையாளர் அவர்களிடம், “பஞ்சப் பாராரிகளெல்லாம் வந்து தங்கிவிட்டுப் போவதற்கு நானென்ன சத்திரமா நடத்துகிறேன்…? உங்களையெல்லாம் என்னுடய வீட்டில் அனுமதிக்க முடியாது! நீங்கள் தங்குவதென்றால், இந்த ஊரின் எல்லையில் ஒரு மறைநூல் வல்லுநரின் வீடு இருக்கின்றது. அங்கு போய்த் தங்குங்கள்; அவர் உங்களைத் தன்னுடைய வீட்டில் தங்க வைப்பார்” என்றார். அவர்களும் சரியென்று சொல்லிவிட்டு, நடக்கத் தொடங்கினார்கள்.

முன்பு அவர்கள் சந்தித்த பணக்காரர் சொன்னதுபோன்று ஊர் எல்லையில் ஒரு குடிசைவீடு இருந்தது; அதில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. இரபிகள் இருவரும் அந்த வீட்டின் கதவைத் தட்டினார்கள். உடனே உள்ளேயிருந்து ஒரு பெரியவர் வந்தார். அவரிடம் அவர்கள், “இந்த இரவு மட்டும் இங்கு தங்கிக்கொள்ளட்டுமா…?” என்று கேட்டபோது, “தாராளமாகத் தங்கி ஓய்வெடுத்துவிட்டு செல்லுங்கள்” என்றார். பின்னர் அந்தப் பெரியவர் வந்திருந்த இருவரும் மிகவும் களைப்பாக இருப்பதைப் பார்த்துவிட்டு, சுட்ட இரண்டு ரொட்டிகளைத் தந்தார். இருவரும் அதைச் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்கத் தொடங்கினார்கள். காலையில் அவர்க்கு நன்றி சொல்லிவிட்டு, அவர்கள் அவரிடமிருந்து விடைபெற்றார்கள்.

இது நடந்து பல ஆண்டுகள் கழித்து, எலிமேலக்கும் சூசாவும் புகழ்பெற்ற இரபிகள் ஆனார்கள். அதனால் லோத்மிர் என்ற ஊருக்குப் போதிப்பதற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கபட்டார்கள். இருவரும் அந்த ஊராரின் அழைப்பு ஏற்று, அங்கு போதிக்கச் சென்றார்கள். இந்த முறை அவர்கள் சாதாரண உடையில் அல்ல, மிகவும் விலையுயர்ந்த ஆடையில், ஒரு குதிரை வண்டியில் சென்றார்கள். எல்லாரும் அவருடைய போதனையைக் கேட்டு மிகவும் வியப்படைந்தார்கள். போதனையின் முடிவில் அவ்வூரில் இருந்த பணக்காரர் அவர்களிடம் வந்து, “இன்றிரவு உங்கட்கு என்னுடைய வீட்டில் விருந்து கொடுக்கவேண்டும் என்று ஊர் நிர்வாகம் சொல்லியிருக்கின்றது. அதனால் நான் முன்னே சென்று விருந்துக்கு ஏற்பாடு செய்கிறேன்… நீங்கள் பின்னே வாருங்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

வீட்டுக்குச் சென்ற பணக்காரர் நீண்டநேரமாகியும் இரபிகள் இருவரும் தன்னுடைய வீட்டிற்கு வராதைக் கண்டு, தன்னுடைய வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்தார். அங்கு இரபிகள் வந்திருந்த குதிரை வண்டியும் அதனுள் அவர்கள் இருவரும் அணிந்த விலையுயர்ந்த ஆடையும் இருந்தது. பக்கத்தில் குதிரை வண்டிக்காரன் நின்றுகொண்டிருந்தான். பணக்காரன் குதிரையோட்டியிடம், “அவர்கள் எங்கே?” என்று கேட்க, “அவர்கள் இந்த ஊரின் எல்லையில் இருக்கின்ற மறைநூல் வல்லுநரின் வீட்டில் இருக்கின்றார்கள்; ‘நீ மட்டும் இந்தக் குதிரை வண்டியோடு அந்தப் பணக்காரரின் வீட்டிற்குப் போ’ என்றுசொல்லி, என்னை அவர்கள் இங்கு அனுப்பி வைத்தார்கள்” என்றான்.

Comments are closed.